You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சாமி படம் வைக்கக்கூடாது என்ற சுற்றறிக்கை போலியானதா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஆயுத பூஜையை ஒட்டி திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் எந்த மதத்தின் கடவுள்களுடைய படத்தையும் வைத்து வழிபடக்கூடாது என மருத்துவமனை முதல்வர் அனுப்பியதாக வெளியான சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் என்ன நடந்தது?
இந்த ஆண்டு ஆயுத பூஜை அக்டோபர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியானதாக ஒரு சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பரவியது.
தேதியிடப்படாத அந்தச் சுற்றறிக்கையில், "பார்வையில் கண்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி, எதிர்வரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்தவொரு மதத்தைச் சேர்ந்த சாமி புகைப்படம்/சிலை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம்/சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்னைகளைத் தடுக்கும் பொருட்டு, உடனடியாக அகற்றிவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது," என்று கூறப்பட்டிருந்தது. அந்தச் சுற்றறிக்கையில் முதல்வர் கையெழுத்திட்டிருந்தார்.
இந்து மதத்திற்கு எதிரானது எனக் கண்டனம்
அக்டோபர் 12ஆம் தேதியிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சலை (சுற்றறிக்கையுடன் மின்னஞ்சல் இணைக்கப்படவில்லை) மேற்கோள்காட்டி அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
உடனடியாக இந்த சுற்றறிக்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பா.ஜ.கவினர், இந்த அறிக்கை இந்து மதத்திற்கு எதிரான எனக் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பா.ஜ.கவின் துணைப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி, "ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் இந்துக் கடவுள்களின் படங்கள்தான் இடம் பெறுமேயன்றி வேறு எந்த மதத்தைச் சார்ந்த புகைப்படம் பயன்படுத்தப்படும்?
தமிழகத்தின் ஒவ்வொரு கட்டடமும் பூமி பூஜை செய்தே கட்டப்பட்டவை என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் நோயாளிகளும், மருத்துவர்களும் கடவுளைக் கும்பிட்டுவிட்டே நலம்பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு சிகிச்சை பெறுகின்றனர் அல்லது அளிக்கின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். சாமி படம் இருப்பின் எதிர்கால பிரச்னைகள் என்ன நேரிடும் என அரசு விளக்க வேண்டும்.
இன்று படங்களை, சிலைகளை அகற்றச் சொல்லும் அரசு, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட தைரியம் உள்ளதா?
சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாக்குக்காக இதுபோன்ற மலிவான செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களின், நோயாளிகளின், பொது மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்," என அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
சுற்றறிக்கை உண்மையல்ல என மருத்துவமனை மறுப்பு
இந்நிலையில், அப்படி ஒரு சுற்றறிக்கையைத் தாங்கள் வெளியிடவே இல்லை என திருப்பூர் அரசு மருத்துவமனையின் முதல்வர் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்தவிதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது," எனக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் முதல்வரின் கையெழுத்தோடு, அக்டோபர் 18ஆம் தேதி எனத் தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், திருப்பூர் அரசு மருத்துவமனையின் சுற்றறிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் வழங்கப்படும். போலியான அறிக்கை எனக் குறிப்பிடப்படும் முதல் அறிக்கைக்கு 55 என்ற எண் இருந்தது. மறுப்பு அறிக்கைக்கும் அதே எண் இருந்தது.
எந்த அறிக்கை உண்மை, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் முருகேசனிடம் கேட்டபோது, அப்படி ஒரு அறிக்கை உருவாக்கப்பட்டாலும் அது வெளியிடப்படவில்லை என்றார்.
"இத போன்ற ஓர் அறிவிப்பை வெளியிடும்படி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்ததாகக் கூறப்பட்டது. அதையடுத்தே இப்படியொரு அறிக்கையை உருவாக்கினோம். ஆனால், அதை வெளியிடுவதற்கு முன்பாகவே, அப்படி எந்தத் தகவலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்பது தெரிந்தது.
ஆகவே அந்த அறிக்கை வெளியிடப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆனால், யாரோ அதை எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டுள்ளார்கள். இப்போது மறுப்பு தெரிவித்திருக்கிறோம். ஆனால், அதற்குள் பிரச்னையாகிவிட்டது," என்று பிபிசியிடம் கூறினார்.
வழக்கமாக வெளியிடப்படும் அறிவிப்பா?
தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துதாஸ் இதுதொடர்பாக விளக்கம் கேட்டிருக்கும் நிலையில், அவரிடம் மருத்துவமனை முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் சுற்றுக்கு விடப்படாத அறிக்கையை, வெளியிட்டவர்களைத் தேடிப் பிடித்து நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்டபோது, "இது தொடர்பாக மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் அதன்படி செய்யப்படும்," என்கிறார் முருகேசன்.
முதலில் வந்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நாராயணன் திருப்பதியிடம், மறுப்பு அறிக்கை வந்திருப்பது குறித்துக் கேட்டபோது, "இந்த சுற்றறிக்கை போலியானது என்றால், ஒரு நாளிதழின் செய்தியாளர் அவரை அழைத்துக் கேட்டபோது, 'ஆயுதபூஜை கொண்டாடலாம், சாமி படம் வைக்கக்கூடாது என்பதை நினைவு படுத்துவதற்கான அறிவிப்பு. இது வழக்கமாக வெளியிடப்படும் அறிவிப்புதான். இது 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது' என்று சொன்னது ஏன்? அது அச்சிலும் வெளியாகியிருக்கிறது" என்று கேள்வியெழுப்பினார்.
ஆனால், தன்னுடைய பதிலை செய்தியாளர் குழப்பிவிட்டதாகக் கூறுகிறார் டாக்டர் ஆர். முருகேசன். "அந்த செய்தியாளர் என்னை அழைத்துக் கேட்டபோது, அந்த சுற்றறிக்கை வெளியில் விடப்படவில்லை என்பதைச் சொல்லிவிட்டு, 1968இல் இதுபோல ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது என்று விளக்கினேன். அந்த செய்தியாளர் இரண்டையும் இணைத்துப் போட்டுவிட்டார்," என விளக்கமளித்தார் மருத்துவமனை முதல்வர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்து தாஸின் பதிலைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)