You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் முதல்வராக 9-வது முறையாக பதவியேற்றதும் நிதிஷ் குமார் பேசியது என்ன?
பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று காலை கொடுத்தார்.
அதனுடன், அவர் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார். பிகார் ராஜ்பவனும் நிதிஷ் குமாரின் ராஜினாமாவை உறுதி செய்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதிவியேற்பார் என முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் கூறினார்.
கடந்த 2022 வரையில், நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்தார்.
பின், தன்னால், தனித்து செயல்பட முடியவில்லை எனக்கூறி, ஆகஸ்ட் 2022 பாஜக உடனான உறவை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் முதல்வராக இருந்தார்.
அதைத் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியிலும் அவர் அங்கம் வகித்து வந்தார்.
‘இந்தியா’ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் இன்று (ஜனவரி 28) காலை 11 மணியளவில், தனது ராஜினாமா கடிதத்தை பிகார் மாநில ஆளுநரிடம் அளித்தார்.
முன்னதாக, கட்சியின் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அவர் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
பிகாரில் யாருக்கு எவ்வளவு பலம்?
ஆர்ஜேடி ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான நிதிஷ் குமாரின் அரசு சில காலமாக நீடிக்கிறது. துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.
ஹிந்துஸ்தானி பொது மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் கூறுகையில், பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமார் புதிய ஆட்சி அமைக்கப் போகிறார், என்றார்.
243 இடங்கள் கொண்ட பிகார் சட்டசபையில் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜேடியுவுக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
நிதிஷ்குமார் 9-வது முறையாக பதவியேற்பு
நிதிஷ்குமார் பிகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார். அவர் 9வது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிதிஷ்குமாரோடு 8 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். பிஜேந்திர பிரசாத் யாதவ்(ஜேடியு), பிரேம்குமார்(பாஜக), விஜய் குமார் சவுத்ரி(ஜேடியு), ஷ்ரவன் குமார்(ஜேடியு), சந்தோஷ் குமார் சுமன்(எச்எஎம்), சுமித் குமார் சிங்(சுயேட்சை) ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த சம்ரத் சௌத்ரி, விஜய் சின்ஹா ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
புதிய அரசில் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தாலும், ஆட்சியின் பொறுப்பு பாரதிய ஜனதா கட்சியின் கையிலேயே இருக்கும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தானும், தனது கட்சியின் எம்எல்ஏக்களும் இந்த அரசில் இணைவார்கள் என்று ஜிதன் ராம் மஞ்சி கூறினார்.
சிராக் 2020 முதல் நிதிஷ் குமாருக்கு எதிராக அறிக்கைகள் கொடுத்து வருகிறார்.
பதவியேற்றதும் நிதிஷ் குமார் பேசியது என்ன?
ஒன்பதாவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், ஏற்கனவே பாஜகவுடன் இருந்துள்ளதாகவும், இனி அங்கும் இங்கும் செல்லப் போவதில்லை என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்பு பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். தற்போது மீண்டும் வந்துள்ளோம். இடையில் எங்கோ சென்றோம். இப்போது எங்கள் கட்சியினர் மீண்டும் வந்துவிட்டதாக உணர்கின்றனர். இனி எப்போதும் ஒன்றாகவே இருப்போம். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தவர்கள் மறுபடியும் வந்துவிட்டார்கள். இனி அங்கே இங்கே போற கேள்வியே இல்லை”. என்றார்.
விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று சிலர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும், மீதமுள்ளவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
"என்னுடன் இரண்டு பேர் துணை முதல்வர்களாக இருப்பார்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளனர்” என்று நிதிஷ் கூறினார்.
என்ன சொல்கிறது காங்கிரஸ்?
நிதிஷ் குமாரின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், "லாலு யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நீண்ட காலத்திற்கு முன்பே இதுகுறித்து என்னிடம் கூறியிருந்தனர். அது இப்போது உண்மை என நிரூபணமாகியுள்ளது," என்றார் அவர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பியும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ், "அரசியல் கூட்டணியை அடிக்கடி மாற்றும் நிதிஷ்குமார், நிறம் மாறுவதில் பச்சோந்திகளுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். இந்த துரோகத்தை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
பாரத் ஜோடோ நீதி யாத்திரையைக் கண்டு பிரதமரும், பாஜகவும் பயப்படுகிறார்கள் என்பதும், அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இந்த அரசியல் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது," என அவர் பதிவிட்டுள்ளாளர்.
நிதிஷ்குமார் அணி மாறுவது இது முதல்முறையல்ல
கடந்த 2014இல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், 2013இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார். பின், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்தார்.
பின், 2017இல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். பின், 2022இல், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.
அணி மாறிக்கொண்டே இருக்கும் நிதிஷ்குமார் யார்?
பாட்னாவை ஒட்டியுள்ள பக்தியார்பூரில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தில் 1951 மார்ச் 1 அன்று நிதிஷ் குமார் பிறந்தார். பிகார் பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் பட்டம் பெற்ற நிதிஷ் குமார், அரசியலில் எப்போதும் நாட்டம் கொண்டவர்.
லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் ஆதரவில் நிதிஷ் குமார் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாலும், தனது சொந்த இடத்தை உருவாக்க, அவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அரசியலில் இருந்த நிதிஷ் குமார், தனது வசதிக்கு ஏற்ப கட்சிகளையும் கூட்டணிகளையும் மாற்றிக்கொண்டே இருந்தார்.
கடந்த 1974 மற்றும் 1977க்கு இடையில் ஜெய் பிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் நிதிஷ் பங்கேற்றார். சத்யேந்திர நாராயண் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
நிதிஷ் 1985ஆம் ஆண்டு ஹர்நாட் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில், பிகாரில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த லாலு பிரசாத் யாதவின் கூட்டாளியாக இருந்தார்.
எமர்ஜென்சிக்கு எதிராக நின்ற ஜனதா தளத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டன. 1994இல் ஜோர்டான் பெர்னாண்டஸ் சமதா கட்சியை உருவாக்கினார். நிதிஷ் அவருடன் இணைந்தார். அடுத்த ஆண்டு, பிகார் சட்டசபை தேர்தலில் சமதா கட்சிக்கு 7 இடங்களே கிடைத்தன.
பாஜகவுடன் முதல்முறையாக கூட்டணி வைத்த நிதிஷ்
பிகாரில் சமதா கட்சி தனித்து பலமாகப் போராட முடியாது என்பதை நிதிஷ் புரிந்துகொண்டார். 1996ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.
கடந்த 1989ஆம் ஆண்டு முதல்முறையாக எம்பி ஆன நிதிஷ், 1998 முதல் 2001 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் இருந்தார். 2001 முதல் 2004 வரை அப்போதைய அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சராகவும் இருந்தவர் நிதிஷ்.
இதற்கிடையில், 2000ஆம் ஆண்டில், மார்ச் 3 முதல் மார்ச் 10 வரை, நிதிஷ் குமார் பிகார் முதல்வரானார். லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான வலுவான மாற்றாக நிதிஷ் குமார் தன்னை வலுவாக முன்னிறுத்தியிருந்தார்.
மத்திய அரசில் 2004 வரை அமைச்சராக இருந்த நிதிஷ், 2005இல் மீண்டும் மாநில அரசியலுக்கு வந்து முதல்வரானார். கடந்த 19 ஆண்டுகளில், 2014-15இல் ஜிதன் ராம் மஞ்சியின் பதவிக்காலம் தவிர, 10 மாதங்கள், நிதிஷ்குமார் பிகார் முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
இருப்பினும், இந்தக் காலகட்டத்தில், நிதிஷ் குமார் தனது வசதிக்கு ஏற்ப தனது கூட்டணிக் கட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)