இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஆதாயம் தேடுகிறாரா புதின்? ரஷ்யா மத்தியஸ்தம் செய்யுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
- பதவி, பிபிசி ரஷ்யா
ஒரு மறைவான மலைப்பிரதேசத்தில் மாபெரும் அதிகார பீடத்தில் அமர்ந்து உலகைக் குழப்ப முயலும் ஜேம்ஸ் பாண்ட் பாணி வில்லனாக விளாடிமிர் புதினைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.
அவர் ஒரு பொத்தானை அழுத்தினால் பால்கன் பகுதியில் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுகிறது.
மற்றொரு பொத்தானை அவர் அழுத்துகிறார், மத்திய கிழக்குப் பகுதியில் போர் வெடிக்கிறது.
இது கவர்ச்சியானது. ஆனால் தவறானதும் கூட. இது கிரெம்ளின் மாளிகையில் இருக்கும் தலைவரின் உலகளாவிய செல்வாக்கை மிகைப்படுத்துகிறது.
ஆம். ஹமாஸ் அமைப்புடன் ரஷ்யா தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது என்பதுடன் இரானின் நெருங்கிய நட்பு நாடாகவும் மாறியுள்ளது. அமெரிக்காவின் கூற்றுப்படி, மாஸ்கோவும் டெஹ்ரானும் இப்போது முழு அளவிலான பாதுகாப்பு கூட்டாண்மையைக் கொண்டுள்ளன.
ஆனால், மாஸ்கோவிற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருந்ததாகவோ அல்லது அதுபற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததாகவோ பொருள் கொள்ளக்கூடாது.
"ரஷ்யா எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட்டதாக நாங்கள் நம்பவில்லை," என்று மாஸ்கோவிற்கான இஸ்ரேல் தூதர் அலெக்சாண்டர் பென் ஸ்வி, இந்த வாரம் கொம்மர்சன்ட் செய்தித்தாளிடம் கூறினார். இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற வாதம் "முழுமையான முட்டாள்த்தனம்" என்று கூறினார்.
பெர்லினில் உள்ள ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடுப்பு கல்வி மையத்தைச் சேர்ந்த சக நாட்டவரும், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு பகுதி குறித்த அரசியல் நிபுணருமான ஹன்னா நோட் கூறுகையில், "ஹமாஸுக்கு ரஷ்ய ஆயுதங்கள் நேரடியாக வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை,” என்றார்.
“ரஷ்யாவுக்கு ஹமாஸுடன் நீண்ட கால உறவு இருப்பது உண்மைதான். ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஹமாஸ் பிரதிநிதிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தனர்.
"ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரான் உதவியுடன் எகிப்தின் சினாய் வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தன என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், ஹமாஸ் அமைப்புக்கு ரஷ்யாவின் விரிவான ராணுவ ஆதரவு உள்ளது என்று நான் யூகிக்கமுடியாது," என்றார் அவர்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனாதிபதி புதின் "மத்திய கிழக்கு போர்" என்று குறிக்கப்பட்ட பொத்தானை அழுத்தவில்லை.
ஆனால் அவர் இந்த சண்டையைப் பயன்படுத்திக் கொள்ள தயாரா?
நிச்சயமாக. எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

பட மூலாதாரம், Reuters
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஆதாயம் தேடுகிறாரா புதின்?
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போரின் எழுச்சி சர்வதேச அளவில் மாபெரும் செய்தியாக உருவெடுத்துள்ள நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்த செய்திகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப இஸ்ரேல் தொடர்பான நிகழ்வுகளை ரஷ்யா நம்பியுள்ளது.
ஆனால் ரஷ்யா தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என்பதை விட கொஞ்சம் அதிகமாகவே ரஷ்யா இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரின் விளைவாக, யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆயுதங்களில் கணிசமான அளவு இஸ்ரேலை நோக்கித் திரும்பும் என்பதே ரஷ்யாவின் பெரும் நம்பிக்கையாக உள்ளது.
"இந்த நெருக்கடி யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவும் வேகத்தை நேரடியாக பாதிக்கும் என்று நம்புகிறேன்" என்று ரஷ்ய தூதர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் கிரெம்ளின் சார்பு இஸ்வெஸ்டியா செய்தித்தாளிடம் கூறினார்.
"யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குபவர்கள் இஸ்ரேலில் நடக்கும் போர் காரணமாக திசை திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மேற்குலக நாடுகள் யுக்ரேனியர்களை கைவிட்டுவிடும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் ராணுவ உதவியின் அளவு குறையும். இது ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறக்கூடும்."
ரஷ்யா விரும்பும் நிலை ஏற்படுமா? நிச்சயமாக ஏற்படும்.
நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேசுகையில், "நாங்கள் யுக்ரேனுக்கு ஆதரவாக நிற்பது போல், இஸ்ரேலுக்கும் ஆதரவாக நிற்க முடியும்,” என்றார்.
ஆனால் மத்திய கிழக்கில் ஒரு நீடித்த மோதல் இரண்டு தனித்தனியான போர்களில் ஒரே நேரத்தில் இரண்டு நட்பு நாடுகளை ஆதரிக்கும் அமெரிக்காவின் திறனை சோதிக்கும் விதத்திலேயே இருக்கும்.
ரஷ்யா தன்னை ஒரு சமாதான நாடாக தன்னை வடிவமைத்துக் கொள்வதன் மூலம் மத்திய கிழக்கில் தனது பங்கை அதிகரிக்க முயற்சிக்கிறது.
இந்த பிராந்தியத்தில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கடந்தகால சர்வதேச முயற்சிகளில் இணைவதற்கு முன்னர் அது அதே மாதிரியான ஒரு நிலையை எடுத்திருந்தது.
"போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஒரு பங்கை வகிக்க முடியும்" என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். "நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்புகொண்டு வருகிறோம்."
இந்த வாரம் மாஸ்கோவிற்கு வந்திருந்த இராக் பிரதமர், மத்திய கிழக்கில் "உண்மையான போர் நிறுத்தத்திற்கான முன்முயற்சியை" அறிவிக்குமாறு அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா மத்தியஸ்தம் செய்யுமா?
சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யா மாறுமா? அது கடினமான ஒரு விஷயம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை நாடு மீது முழு அளவில் தாக்குதலை நடத்திவரும் நாடு இது. ஏறக்குறைய 20 மாதங்களுக்குப் பிறகு, யுக்ரேனில் ரஷ்யாவின் போர் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அளவில் மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உங்களால் முடியும் என்று கூறுவதால் மட்டுமே, மோதலில் ஈடுபடுபவர்கள் உங்களை ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதமும் கிடைத்துவிடாது.
மாஸ்கோ நீண்ட காலமாக மத்திய கிழக்கு பிராந்தியம் குறித்த ஒரு ஆர்வத்தை வைத்துக்கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் அமெரிக்காவுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியதால் சோவியத் யூனியன் அரபு சார்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.
சோவியத் யூனியனின் முடிவுக்குப் பிறகு, முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்ததன் காரணமாக, இஸ்ரேலுடனான ரஷ்யாவின் உறவுகள் மேம்பட்டன.
ஆனால் அண்மைக்காலமாக விளாடிமிர் புதினின் ரஷ்யா, இஸ்ரேலின் எதிரிகளுடன், குறிப்பாக இரானுடன் நெருக்கமாகி விட்டது. இது ரஷ்ய-இஸ்ரேல் உறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவைக் கண்டிக்கும் ரஷ்யா
அமெரிக்காவைக் குற்றம் சாட்டி ஏற்கனவே ரஷ்யா நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதைப் போலவே இங்கேயும் ஏதாவது செய்ய முடியுமா என்ற வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், விளாடிமிர் புதினின் மையச் செய்தி என்னவென்றால், "மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொள்கையின் தோல்விக்கு இது ஒரு எடுத்துக்காட்டு," என்பதே ஆகும்.
"அமெரிக்காவின் மேலாதிக்கம்" என்று எப்போதும் குறைகூறும் ரஷ்யாவின் பொதுவான வாதத்துக்கு இது நன்றாகப் பொருந்துகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவை மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பது, அமெரிக்காவின் செலவில் அப்பகுதியில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போருக்கும் அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டை ஒரு மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பதில் ரஷ்யாவிற்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி இதுவரை நான் பேசினேன். ஆனால் அங்கே ஆபத்துகளும் உள்ளன.
"கவனமாக அளவிடப்பட்ட உறுதியற்ற தன்மைதான் ரஷ்யாவிற்குச் சிறப்பாகச் சேவை செய்கிறது" என்று ஹன்னா நோட் நம்புகிறார்.
"இந்த நெருக்கடி யுக்ரேனில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பினால் - அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலில் இஸ்ரேலின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை, அதற்கு உண்மையான ஆபத்து உள்ளது - ஆம், ரஷ்யா ஒரு குறுகிய கால பயனாளியாக இருக்கலாம்."
ஆனால் ஹமாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கும் இரான் உட்பட பரந்த பிராந்தியத்தை ஈர்க்கும் போரினால் ரஷ்யா பயனடையாது என்று நோட் கூறுகிறார்.
"இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஒரு முழுமையான போரை ரஷ்யா விரும்பவில்லை. விஷயங்கள் அதை நோக்கி நகர்ந்து, அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டால், ரஷ்யா இரானின் பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதை ரஷ்யா விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.”
"இஸ்ரேலுடனான தனது உறவுகளை புதின் இன்னும் மதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்ய ராஜதந்திரம், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இடத்துக்குச் செல்ல விரும்புகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த மோதல் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அழுத்தத்தை அவர்கள் உணரக்கூடும்."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












