ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர் சுட்டுக் கொலை - போலீஸ் சொல்வது என்ன?

தமிழர் சுட்டுக்கொலை

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா சையித் அகமது என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்.

மேற்கு சிட்னியில் உள்ள அவ்பேர்ன் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் சென்ற முகமது ரகமதுல்லா சையித் அகமது, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபரை கத்தியால் குத்தியதாகவும் இதைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்ற ரகமதுல்லா போலீசாரையும் தாக்க முயற்சித்ததாகவும் நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரை அவர் கத்தியைக் கொண்டு தாக்க முயற்சித்தபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரகமதுல்லா உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

“இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது மற்றும் துரதிருஷ்டவசமானது. வெளியுறவு, வர்த்தகத் திணைக்களம், நியூசவுத் வேல்ஸ் அலுவலகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இந்த விஷயத்தை நாங்கள் கவனித்து வருகிறோம், ” என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் இரண்டு குண்டுகள் ரகமதுல்லாவின் மார்பில் பாய்ந்துள்ளது. சம்பவ இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வெஸ்ட்மெட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் இறந்து விட்டதாக இரவு 1.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு ஊடகத்துக்கு பேட்டியளித்த நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் உதவி கமிஷனர் ஸ்டூவர்ட் ஸ்மித், தங்களை தற்காத்துகொள்ள போலீசாருக்கு சில விநாடிகள் மட்டுமே இருந்தன. அதனால் துப்பாக்கியால் சுடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் தெரிவித்தார்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முகமது ரஹ்மதுல்லா, தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர். 2012 ஆம் ஆண்டு லண்டனில், முதுநிலை ஆங்கிலம் மொழியியல் பிரிவில் 18 மாதங்கள் கல்வி கற்று விட்டு இந்தியாவிற்கு திரும்பியவர், பின்னர் தனது சகோதரருடன் சேர்ந்து துணி வியாபாரம் செய்து வந்ததாகவும் ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த வியாபாரத்தை கைவிட்டு, தனது அண்ணனுடன் சேர்ந்து, பலசரக்கு கடை நடத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

முகமது ரஹ்மதுல்லாவுக்கு 2017ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. எனினும் மனநிலை சரியில்லை என கூறி இவரது மனைவி விவாகரத்து பெற்றுள்ளார்.

இதையடுத்து, வேலை தேடி 2019இல் ஆஸ்திரேலியா சென்ற முகமது ரகமதுல்லா அங்கு, அபர்ன் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: