குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் ஆயுளை பாதிக்கிறதா? புதிய ஆய்வில் தகவல்

குழந்தைகள், பெண்கள், வாழ்க்கை, வரலாறு, குழந்தைப் பிறப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில பெண்கள் தாங்கள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், தங்கள் மொத்த ஆயுளில் ஆறு மாதங்களை இழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன
    • எழுதியவர், கேட்டி பௌவி
    • பதவி, பிபிசி உலக சேவை

குழந்தைகள் கோபப்படும்போது, ​​இரவு உணவை நிராகரிக்கும்போது அல்லது தூங்க மறுக்கும்போது, "தங்கள் ஆயுளில் பல வருடங்களை குழந்தைகளே எடுத்துக் கொள்கிறார்கள்" என்று தாய்மார்கள் நகைச்சுவையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.

ஆனால், கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு அது வெறும் நகைச்சுவைப் பேச்சல்ல, ஓரளவு உண்மைக்கு நெருக்கமானதாகவே இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்றுப் பதிவுகளில் மேற்கொண்ட ஆய்வின்படி, சில தாய்மார்களின் ஆயுள், அவர்கள் பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு மாதங்கள் வரை குறைந்திருக்கலாம். மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்த பெண்கள் இந்த இணைப்பின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 1866 மற்றும் 1868க்கு இடையில் ஏற்பட்ட 'பெரும் பின்லாந்து பஞ்சத்தின்' போது வாழ்ந்த 4,684 பெண்களின் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களைக் கொண்ட திருச்சபையின் பதிவுகளை பரிணாம ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இது "சமீபத்திய ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் கொடூரமான பஞ்சங்களில் ஒன்று" என விளக்குகிறார் ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளரும் நெதர்லாந்தின் க்ரோனிங்கன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவருமான முனைவர் யுவான் யங்.

பஞ்சத்தின்போது குழந்தைகளைப் பிரசவித்த பெண்களின் ஆயுட்காலம் ஒவ்வொரு பிரசவத்திற்கும் ஆறு மாதங்கள் குறைந்ததாக, முனைவர் யங் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஹன்னா டக்டேல், பேராசிரியர் விர்பி லும்மா, முனைவர் எரிக் போஸ்ட்மா ஆகியோர் கண்டறிந்தனர்.

ஆராய்ச்சியின்படி, "தாய்மார்களின் உடலில், செல்களை சரிசெய்து கொள்வதற்கான ஆற்றல், இனப்பெருக்க செயல்முறைக்கு கணிசமாகப் பயன்பட்டிருக்கலாம். இதனால் அவர்களின் பிற்கால வாழ்க்கையில் நோய் அபாயம் அதிகமாக இருந்திருக்கும்."

ஆனால் பஞ்சத்திற்கு முன் அல்லது பின் வாழ்ந்தவர்களில், ஒரு பெண்ணின் ஆயுட்காலத்திற்கும் பிரசவத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

"பஞ்சம் ஏற்பட்டபோது கர்ப்பமாக இருந்த பெண்களில் மட்டுமே இந்த ஆற்றல் பரிமாற்றத்தை நாங்கள் கண்டோம்," என்று முனைவர் யங் கூறினார்.

பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலகட்டத்தில், அவர்கள் வாழ்ந்த சூழலின் தன்மை இதில் ஒரு முக்கியக் காரணியாக இருந்ததை இந்த ஆய்வு காட்டுகிறது.

குழந்தைகள், பெண்கள், வாழ்க்கை, வரலாறு, குழந்தைப் பிறப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

குழந்தை பெற்றுக் கொள்வது ஆயுளை பாதிப்பது ஏன்?

குழந்தைப்பேறு மற்றும் ஆயுள் இடையிலான இந்தத் தாக்கம் எவ்வாறு நடக்கிறது என்ற கேள்வி இதனால் எழுகிறது.

அதற்கான ஒரு விளக்கம் என்னவென்றால், குழந்தைகளைப் பெற்றெடுப்பதால் ஏற்படும் நீண்டகால உடல்நல பாதிப்புகள், கர்ப்ப காலத்தில் நிலவும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளால் மோசமடையக்கூடும்.

எடை அதிகரிப்பு மற்றும் உடல்மீது அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக, இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் தாய்மார்களுக்கு அதிகமாக உள்ளது, என்பது நீண்ட காலமாக அறியப்படுகிறது.

இதற்கு மற்றுமொரு சாத்தியமான காரணம் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் யங்: "ஒரு பெண் கர்ப்பமாகி, பிரசவித்து, தாய்ப்பால் கொடுத்து, ஒரு குழந்தையைப் பராமரிக்கும்போது, ​​அவரது உடல் அதிக ஆற்றலையும் ஊட்டச்சத்துகளையும் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் தாயின் உடலுக்குத் தேவையான ஆற்றலை இழக்கக்கூடும்."

கர்ப்ப காலம், தாய்ப்பால் கொடுப்பது ஆகியவற்றுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே பஞ்சத்தின்போது புதிதாக குழந்தை பெறும் ஒரு தாய்க்கு, அவரது வாழ்வின் பிற்பகுதியில் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவல்ல உடலியல் செயல்பாடுகளைச் செய்வதற்குத் தேவைப்படும் ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களின் ஆயுட்காலம் குறையுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நைஜர், சாட், சோமாலியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பெண்கள் இன்னமும் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்

"இத்தகைய சமூகங்களில், பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு குழந்தையைப் பிரசவிப்பதற்கும் இடையே உள்ள காலம் மிகக் குறைவாக இருக்கும். எனவே, அவர்களின் உடல் பிரசவத்தின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு நேரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதன் விளைவாக உடல்நல பாதிப்புகளும் சேர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது" என்று யங் விளக்குகிறார்.

இருப்பினும், இந்த ஆய்வில் புதிய தரவுகளைச் சேகரிப்பதற்குப் பதிலாக வரலாற்றுத் தரவுகளை மட்டும் பயன்படுத்தியதால், இதைத் தம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது

"பல குழந்தைகளைப் பெற்ற பெண்கள் மத்தியிலும் இத்தகைய தாக்கங்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஆனால் அனைத்து பெண்களும் சமமாகப் பாதிக்கப்படவில்லை" என்றும் யங்கின் ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது, "அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, பஞ்ச காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது ஆகியவை ஆயுட்காலம் குறைவதற்கான இரு முக்கியக் காரணிகளாக இருப்பதாக" யங் விளக்குகிறார்.

எலிகள், பூச்சிகள் போன்ற குறுகிய ஆயுள் கொண்டு வாழ்ந்து பல சந்ததிகளை உருவாக்கும் உயிரினங்களுக்கும், யானைகள், திமிங்கலங்கள் மற்றும் மனிதர்கள் போன்ற நீண்ட காலம் வாழ்ந்து குறைவான சந்ததிகளை உருவாக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பார்த்து விஞ்ஞானிகள் பல்லாண்டுக் காலமாகக் குழப்பமடைந்துள்ளனர்.

ஒரு முக்கியக் கோட்பாடு என்னவென்றால், பலவீனமடையும் செல்களை பழுதுபார்ப்பதற்கான ஆற்றல் இனப்பெருக்க செயல்முறைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகள், பெண்கள், வாழ்க்கை, வரலாறு, குழந்தைப் பிறப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டில், சூடானில் வசிக்கும் பெண்கள் சராசரியாக 4.32 என்ற அளவில் குழந்தைகளைப் பெற்றனர். அதற்கு அடுத்த ஆண்டு நாட்டின் சில பகுதிகளில் பஞ்சம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டது.

நவீன கால பெண்களும் இதேபோல பாதிக்கப்படுகிறார்களா?

ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை, 21ஆம் நூற்றாண்டின் தாய்மார்களுக்குப் பொருந்துமா?

"நவீன சுகாதார அமைப்புகள் அவ்வளவு வலுவாக இல்லாத வரலாற்றுக் காலத்திற்குள் இதைப் பொருத்திப் பார்ப்பது மிகவும் முக்கியம்" என்கிறார் யங்.

"அந்தக் காலகட்டத்தில், பெண்கள் சராசரியாக நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். இது இன்று நாம் காணும் குடும்ப அமைப்புகளைவிடப் பெரியது."

கடந்த 1800களில் இருந்து தற்போது வரை பார்த்தோமானால், உலகம் முழுவதும் பெரும்பான்மை குடும்பங்களில், குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

எஃப்-35 போர் விமானம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 2023ஆம் ஆண்டில், சராசரியாக ஒரு பெண்ணுக்கு இரண்டு (அதற்கு சற்று அதிகமான) குழந்தைகள் என்ற நிலையே இருந்தது. இது கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் கருத்தடை சாதனங்களுக்கு அதிக அணுகல், குழந்தை இறப்பு விகிதம் குறைவது போன்ற காரணிகளால் ஏற்பட்ட மாற்றம்.

இருப்பினும், நைஜர், சாட், சோமாலியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பெண்கள் இன்னும் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஐ.நா. ஆதரவு பெற்ற திட்டமான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு (Integrated Food Security Phase Classification), கடந்த ஆண்டில் சூடான் மற்றும் காஸாவில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது.

இதில் மேலதிக ஆராய்ச்சி தேவைப்படுவதை முனைவர் யங் ஒப்புக்கொண்டாலும், இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது போல, அதிக பஞ்சம், அதிக குழந்தைகளைப் பெறுவது ஆகிய காரணங்களால் ஆயுள் குறைவது போன்ற தாக்கத்தை, உலகின் சில பகுதிகளில் உள்ள பெண்கள் தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்பதை இது குறிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு