டிரம்ப் அறிவித்துள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு என்ன பலன்?
2019ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த ஹவுடி மோதி நிகழ்வில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, டொனால்ட் டிரம்ப் குறித்து 'ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்' என்ற முழக்கத்தை முன்வைத்தார். அடுத்த ஆண்டு டிரம்ப் இந்தியா வந்தபோது, அவரை வரவேற்க ஆமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைவதன் அறிகுறியாக ஆய்வாளர்கள் கண்டனர். 2024ஆம் ஆண்டு பிரதமர் மோதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அதே போல அமெரிக்காவில் டிரம்பும் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
இரு தலைவர்கள் இடையிலான உறவு மூலமே இந்தியா அமெரிக்கா உறவை ஊடகங்கள் பார்க்கத் தொடங்கின. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு முன்பு போல இல்லை என தெரிகிறது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி இந்தியா மீது 25 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார். அதே போல, பாகிஸ்தானின் எண்ணெய் இருப்புகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு கிடைக்கப் போகும் அனுகூலம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு கிடைக்க போகும் பலன் என்ன என்பதை பார்க்கும் முன் அந்நாட்டில் இந்த ஒப்பந்தத்தை எப்படி பார்க்கிறார்கள் என பார்க்கலாம்.
இது குறித்து கூறும் பிபிசி உருதுவின் மூத்த செய்தி ஆசிரியர் ஆசிப் ஃபரூக்கி, "இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானில் வரவேற்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் இதை நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமான ஒப்பந்தமாகக் கருதுகிறது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான ராஜீய உறவுகளுக்கு பெரிய வெற்றியாகவும் கருதுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை கடந்து வந்துள்ளது. தற்போது பொருளாதாரம் எழுச்சி நிலையை அடைந்திருப்பதாக அரசு கூறுகிறது. இந்த நேரத்தில், 90 சதவிகித ஜவுளி ஏற்றுமதியை கொண்ட பாகிஸ்தானின் ஏற்றுமதிகள் ஊக்கம் பெற்றால், அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும்" என்றார்.
எண்ணெய் இருப்புகளை பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாகவே பாகிஸ்தான் அரசு பல்வேறு தனியார் நிறுவனங்களையும் நாடுகளையும் எண்ணெய் இருப்புகளில் பணியாற்ற அழைப்பு விடுக்க முயற்சிக்கிறது. ஆனால், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பிற காரணங்களால், நிறுவனங்கள் வரவில்லை.
இது பற்றி கூறும் ஆசிப் ஃபரூக்கி, "தற்போது அதிபர் டிரம்ப் இதை வெளிப்படையாகக் கூறியிருப்பதால், பெரிய அமெரிக்க நிறுவனம் தனது தொழில்நுட்பத்துடன் வந்தால், அது தன்னிடம் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளை மேம்படுத்த உதவியாக இருக்கும் என பாகிஸ்தான் கருதுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் சந்தித்து வரும் எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்கவும் இது உதவும் என அரசாங்கம் நம்புகிறது" என்கிறார்.
இந்தியா மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளதை, பாகிஸ்தான் அரசு தனது அரசியல் மற்றும் ராஜீய வெற்றியாகக் காட்டி வருவதாகவும் ஆசிப் ஃபரூக்கி கூறுகிறார்.
அதே நேரம், அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தம் குறித்து கூறும் இன்டிபென்டென்ட் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட் தலைவரான நரேந்திர தனேஜா, இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் வரை, இதை ஒரு ஒப்பந்தமாக கருத முடியாது என்கிறார்.
"அமெரிக்காவில் அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் இல்லை. அங்குள்ள அனைத்து நிறுவனங்களும் தனியார் நிறுவனங்கள், எனவே எந்த நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை செய்தது? அமெரிக்க அதிபர் சொல்வார். உடனே நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு செல்லும் என்பது போல அல்ல இது. அவை மிகப் பெரிய நிறுவனங்கள்" என்கிறார் நரேந்திர தனேஜா.
"அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு சென்று வேலை செய்ய தனது விருப்பத்தைத் தெரிவிக்க முடியும். ஆனால், நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே அங்கு செல்லும். இரண்டாவது விஷயம் , எண்ணெய் இருப்பு எங்கே கண்டுபிடிக்கப்பட்டது? பெரிய எண்ணெய் இருப்புகள் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அவை எங்கே, எவ்வளவு பெரியவை? இந்த விஷயங்கள் அனைத்தும் தெளிவாக தெரியும் வரை, நிறுவனங்கள் அங்கு செல்லாது" என்கிறார் நரேந்திர தனேஜா.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தான் சிறிது காலமாகவே தன்னிடம் அதிக எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புகள் இருப்பதாகக் கூறி வருகிறது. அனைத்து அரசுகளும் இதைச் சொல்கின்றன. மியான்மரும் வங்கதேசமும் பல ஆண்டுகளாக தங்களிடம் அதிக எரிவாயு இருப்புகள் இருப்பதாகக் கூறி வருகின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்கள் சான்றளிக்கும் வரை இந்த இருப்புகள் செல்லுபடியாகாது. இந்த நிறுவனங்கள் அறிவியல் அடிப்படையில் சான்றளிக்கின்றன, மேலும் மொத்த உலகமும் அந்தத் தரவைப் பார்க்க முடியும். அதுபோன்ற எதுவும் இதுவரை நடக்கவில்லை" எனக் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



