அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் அண்ணாமலை என்ன ஆவார்?
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்படுகிறதா என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்குச் சென்ற எடப்பாடி கே. பழனிசாமி, அதைப் பார்வையிட்டார். மாலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணியும் கே.பி.முனுசாமியும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதற்குப் பிறகு, தம்பிதுரை முதலில் அமித் ஷாவின் இல்லத்திற்குச் சென்றார். பிறகு சுமார் 8 மணியளவில் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் அங்கே சென்றனர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிகிறது.
அமித் ஷா உடனான சந்திப்பு முடிந்து வெளியில் வந்த எடப்பாடி கே. பழனிசாமி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில் இரவு 10:15 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என தமிழிலும் ஹிந்தியிலும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்தியது.
இதையடுத்து, டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்கப் போகிறாரா, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி உருவாகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
டெல்லியிலிருந்து தமிழ்நாடு புறப்படும் முன்னதாக விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அமித் ஷாவுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி," தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். " என்றார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கப் போகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், மக்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அதனை தீர்ப்பதில் முனைப்பாக இருக்கும் கட்சியே அதிமுக எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி என்ன காரணத்திற்காக டெல்லி சென்றார்? இந்தப் பயணத்தின் மூலம் அதிமுகவுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்ன?
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுடன் நடத்திய விரிவான நேர்காணல் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



