தக்காளி: பெங்களூருவில் திருடி சென்னையில் விற்று லட்சங்களை சம்பாதித்த இவர்கள் சிக்கியது எப்படி?

    • எழுதியவர், மாயகிருஷ்ணன்.க.
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு தெலங்கானாவில் தக்காளி ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் தக்காளியை யாரும் எடுத்துச் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேபாளத்தில் இிருந்து தக்காளியை குறைந்த விலைக்கு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சி செய்த சம்பவமும் அரங்கேறியது.

தக்காளியை விலை உயர்வையடுத்து விவசாய நிலங்களில் தக்காளியை திருடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர். அவர்கள் பெங்களூரில் இருந்து எப்படி தக்காளியை கடத்தி வந்தார்கள், எப்படி சிக்கினார்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அரங்கேறிய கார் விபத்து நாடகம்

ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி இரவு சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகாவை சேர்ந்த விவசாயி மல்லேஷ் தனது நிலத்தில் பயிர் செய்திருந்த 250 பெட்டி( 1.5டன்) தக்காளியை கோலார் நகரில் உள்ள தக்காளி சந்தைக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றார்.

அவரது வாகனம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆர். எம். சி யார்டு அருகில் வந்த பொழுது அந்தப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தவர்கள் லாரியை திடீரென வழிமறித்து தங்கள் கார் மீது மல்லேஷ் வந்த லாரி மோதி விட்டது எனவும் விபத்துக்கான இழப்பீடு தொகை கேட்டு வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர்.

விபத்து ஏற்படாத நிலையில் எப்படி இழப்பீடு தருவது என்று மல்லேஷ் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு விவசாயி மல்லேஷையும், டிரைவர் சிவன்னாவையும் கீழே தள்ளிவிட்டு காரில் வந்தவர்கள் லாரியை சென்னைக்கு கடத்தி சென்றனர்.

பின்னர் சென்னை புறநகர் பகுதியில் 2 டன் தக்காளியை 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை பிரித்துக் கொண்டனர். பின்பு சந்தேகம் ஏற்படாதவாறு வாகனத்தை மீண்டும் பெங்களூர் தேவனஹல்லி புறநகர் பகுதியில் நிறுத்தி சென்று விட்டு சென்றதாக வழக்கை விசாரித்த பெங்களூரு ஆர். எம். சி. யார்டு போலீசார் கூறினர்.

காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்

தக்காளியை திருடிச் சென்றவர்கள் குறித்து விவசாயி மல்லேஷ் ஆர்.எம். சி. யார்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடினர். தக்காளி லோடு ஏற்றி வந்த லாரியை தொடர்ந்து வந்த காரின் பதிவெண்ணை கொண்டு கார் யாருடையது என்பதை கண்டுபிடித்து விசாரணை வளையத்தை விரிவுபடுத்தினர். தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

பெங்களூரில் இருந்து போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு வந்து அங்கு தமிழக போலீசார் உதவியுடன் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கர் மற்றும் அவரது தோழி சிந்துஜாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

தக்காளி கடத்தல் சம்பவம் குறித்து பெங்களூரூ துணை போலீஸ் கமிஷனர் வடக்கு பிரிவு சிவப்பிரகாஷ் தேவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தந்த புகாரின் அடிப்படையில் லாரியுடன் தக்காளியை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு பாஸ்கர், சிந்துஜா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

200 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் அவர்கள் வந்த கார் பதிவெண்ணின் அடிப்படையில் விசாரித்து ஆதாரத்துடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று குற்றவாளிகளையும் தேடி வருகிறோம்" என்று கூறினார்.

"மே, ஜூலை மாதங்களில் தக்காளி விலை அதிகம்"

கடந்த மூன்று ஆண்டுகளாகவே மே, ஜுன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரத்துடன் நம்மிடம் தொலைபேசியில் பேச தொடங்கினார் கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி குமரேசன்.

"ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெய்த அதிக மழை மற்றும் சூழல் மாறுபாடு காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர தொடங்கியது. இந்த விலை உயர்வு இப்பொழுது மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாகவே மே ஜூலை மாதங்களில் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.

2019-மே மாதத்தில் ரூபாய் 52-க்கும் 2020 ஜூலையில் கிலோ 46-க்கும் 2021 நவம்பரில் 99- க்கும், 2022 மே மாதத்தில் 76-க்கும் விற்கப்பட்டுள்ளது. தற்பொழுது 2023-ஜூலை மாதத்தில் 110 லிருந்து 130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்று கூறினார். தக்காளி விலை உயர்வுக்கு பருவம் தவறிய மழை, அதிக வெப்பம் என்று காரணம் கூறப்பட்டாலும் விவசாயிகள் மாற்றுப் பயிர்களை தேர்வு செய்து பயிரிட தொடங்கியதன் காரணமும் தக்காளியை உற்பத்தி குறைவதற்கு காரணமாகும். இன்னும் 15 முதல் 20 நாட்களில் விலை சீரான நிலைக்கு திரும்பும்" என்றும் உறுதியுடன் கூறினார்.

மேலும் தக்காளியை யாரும் தேக்கி வைக்க முடியாது ஏனெனில் இது அழுகும் பொருளாகும். ஒரு சில ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மட்டும் அதை தேக்கி வைக்க வாய்ப்பு உள்ளது என்ற போதிலும் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மேல் இதை தேக்கி வைக்க முடியாது எனவே நிலைமை விரைவில் சீரடையும் என்றும் தெரிவித்தார்.

"தக்காளிக்கு பதிலாக சமையலில் எலுமிச்சை"

தக்காளி விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் அதற்கு மாற்று வழியும் உள்ளது என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் புனிதா.

"நான் உளுந்தூர்பேட்டை நகர் பகுதியில் வசித்து வருகின்றேன். நடுத்தர குடும்பம் என்பதால் அதற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டு சமையல் உட்பட அனைத்து செலவுகளையும் பார்க்க வேண்டும். தற்பொழுது தக்காளியின் விலை ரூபாய் 100க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே எங்கள் வீடு மட்டுமல்லாது எங்கள் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் மக்கள் தக்காளியை மிகுந்த எச்சரிக்கையுடனே பயன்படுத்தி வருகின்றார்கள்.

குறிப்பாக ரசம் வைப்பதற்கு தக்காளிக்கு மாற்றாக எலுமிச்சையை நாங்கள் பயன்படுத்த தொடங்கி விட்டோம். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் ரசம் வைத்து சாப்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றோம் நன்றாக உள்ளது என்றும் கூறினார். மிளகாய்வற்றல், கொத்தவரங்காய், மாங்காய்வற்றல் இருப்பது போல் தக்காளி வற்றல் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்றும் கூறினார்.

உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூபாய் 80

கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சசிகலா தக்காளி தட்டுப்பாடு மற்றும் அதன் விளைச்சல் உயர்வு குறித்து பிபிசி தமிழிடம் நேரில் கூறியதாவது, "தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கோடைகாலத்தில் பயிர் செய்யும் பொழுது மகசூல் குறையும் என்ற போதிலும் இந்த வருடம் கூடுதல் வெப்பம், அண்டை மாநிலங்களில் கூடுதல் மழை போன்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக தக்காளி விளைச்சல் சற்று குறைவாகவே இருந்துள்ளது.

இருப்பினும், தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாடி தோட்டம் அமைத்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தலுக்காக மானிய விலையில் விதைகள், நிழல் வலை மற்றும் நில வலை போன்ற உபகரணங்களையும், இயற்கை உரங்களையும் மானிய விலையில் வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும் தற்பொழுது உழவர் சந்தையில் கிலோ ரூபாய் 80-க்கு தக்காளி தோட்டக்கலைத் துறை மூலமாக விற்பனை செய்யப்படுவதையும் தெரிவித்தார்.

தற்பொழுது மட்டுமல்லாது வரும் காலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் தக்காளியை பாதுகாப்புடன் பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள் வழங்க இருப்பதாகவும் ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: