பிரியங்கா போட்டியிடும் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் என்ன? பிபிசி கள ஆய்வு

காணொளிக் குறிப்பு,
பிரியங்கா போட்டியிடும் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் என்ன? பிபிசி கள ஆய்வு

வயநாடு மக்களவைத் தொகுதி, ஆறே மாதங்களில் இரண்டாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால் தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வயநாடு இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

‘‘ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றியதால் இந்தத் தேர்தல் வந்துள்ளது. அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வயநாடு மக்களுடன் நான் இருப்பேன் என்று உறுதியளித்தார். ஆனால் அவருக்கு ராய்பரேலி தான் முதல் முன்னுரிமையாகி விட்டது. வயநாடு அடுத்ததாகிவிட்டது. இப்போது அவரது சகோதரியை அழைத்து வந்து, எம்பியாக்க முயற்சி செய்கிறார்.’’ என்று வயநாடு மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம் சாட்டுகிறார்.

‘‘கடந்த தேர்தலின்போது, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருந்தார். இங்குள்ள மக்கள் ஏதுமறியாதவர்கள். தங்கள் தொகுதியின் எம்.பி. பிரதமராக வந்தால் நன்றாயிருக்குமென்று கருதி, அவரை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் ராய் பரேலியிலும் போட்டியிட்டு, வயநாடு மக்களைக் கைவிட்டு விட்டார்.” என்கிறார் வயநாடு தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோகேரி.

‘‘தேர்தலில் போட்டியிடுவதும், பதவியை ராஜினாமா செய்வதும் ஜனநாயக உரிமை. பல காரணங்களுக்காக பல இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதை சிபிஎம் குற்றம்சாட்டுகிறது என்றால், சேலக்கரை இடைத்தேர்தல் ஏன் நடந்தது? இதே பதில்தான் சிபிஎம் கட்சிக்கும். அமைச்சர் ராதாகிருஷ்ணன், ஆலத்துார் மக்களவைத் தொகுதியில் நிற்பதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.’’ என்கிறார் வயநாடு மாவட்டத்தின் தலைநகரமான கல்பெட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சித்திக்.

கல்பெட்டாவைச் சேர்ந்த சுனிதா சீனிவாஸ் பிபிசி தமிழிடம், ‘‘பிரியங்கா காந்தி மிகப்பெரிய தலைவர். இங்குள்ள மக்கள் மிகவும் சாதாரணமானவர்கள். அவர் இருக்கும் இடத்துக்குப் போனாலே, நம்முடைய மொபைல் ‘ஜாம்’ ஆகி விடுகிறது. அப்படியிருக்கையில், அவரை எப்படி அணுக முடியுமென்று தெரியவில்லை. நமக்கு மக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு பிரதிநிதி தான் தேவை.’’ என்கிறார்.

முழு விவரம் காணொளியில்.

செய்தியாளர்: சேவியர் செல்வகுமார்

ஒளிப்பதிவு: ஜனார்த்தனன், பிபிசி தமிழுக்காக

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)