புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஜித் காத்வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
நவம்பர் 21ஆம் தேதி முதல் இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதில் உள்ள பல்வேறு அம்சங்களின் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும்.
இதனைத் தொடர்ந்து, ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட விதிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது.
- இது தொழிலாளர் விதிமுறைகளின் எண்ணிக்கையை 1,400 லிருந்து சுமார் 350 ஆகக் குறைத்துள்ளது.
- நிறுவனங்கள் நிரப்ப வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை 180 லிருந்து 73 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலார்களுக்கான ஊதிய விதிகள் கடந்த வாரம் அமலுக்கு வந்தன. விரிவான விதிகள் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் அறிவிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
கைக்கு வரும் சம்பளம் குறையுமா?
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பின் படி, இனிமேல் ஊழியரின் சிடிசி (CTC) தொகையில் குறைந்தது 50 சதவீதம் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். இதனால், நிறுவனங்கள் தங்களது சம்பள தொகுப்பு கொள்கைகளை மாற்ற வாய்ப்புள்ளது.
இந்த மாற்றம், ஓய்வுக்குப் பிறகு ஊழியர்கள் பெறும் வருமானத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மாத சம்பளம் குறைய வாய்ப்புள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளன. இப்போது, அடிப்படை ஊதியத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடைக்கு செலுத்தப்படும் தொகையும் அதிகரிக்கும்.
தற்போது, அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பி.எஃப்-க்கு செல்கிறது. அதே நேரத்தில், பணியாளரின் கடைசி அடிப்படை சம்பளம் மற்றும் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.
ஊழியர்கள் எளிதாக பணிநீக்கம் செய்யப்படலாம்

பட மூலாதாரம், Getty Images
- இனிமேல், 300க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதியின்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம். முன்பு, இந்த வரம்பு 100 ஊழியர்களாக இருந்தது.
- ஒரு தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் செய்ய 14 நாட்கள் முன் அறிவிப்பு அவசியம். ஒரே நாளில் பெருமளவு ஊழியர்கள் விடுப்பெடுப்பதும் வேலைநிறுத்தமாக கருதப்படும்.
- நாட்டில் முதல் முறையாக, கிக் (ஓலா, ஊபெர் ஓட்டுநர்கள், ஸொமேட்டோ அல்லது ஸ்விக்கி போன்ற டெலிவரி பார்ட்னர்கள்) மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- நிறுவனங்கள் ஊழியர்களை ஒரு நாளைக்கு 8 முதல் 12 மணிநேரம் வரை வேலை செய்ய வைக்கலாம், ஆனால் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
- ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் வழங்க வேண்டும்.
- ஒப்பந்ததாரர்கள் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேலை செய்ய ஒரே ஒரு உரிமம் (license) போதுமானது. இது அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
- ஒவ்வொரு ஊழியருக்கும் பணிநியமனக் கடிதம் வழங்கப்பட வேண்டும். அதில் அவர்களின் பொறுப்பு, சம்பளம், சமூக பாதுகாப்பு விவரங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
- கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஊழியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
- 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை வழங்கப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பெண் ஊழியர்களுக்கு என்ன நன்மை?
- 'சம வேலைக்கு சம ஊதியம்' விதி அமலில் இருக்கும். அதாவது, ஆண் பணியாளர்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பெண்கள் விரும்பினால், இரவு நேரப் பணிகளிலும் ஈடுபடலாம்.
- அமைப்புசாரா துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வார ஊதியத்துடன் கூடிய விடுப்பு உட்பட மகப்பேறு சலுகைகளும் வழங்கப்படும்.
- குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்துக்கான ஒரு சட்டப்பூர்வ தரநிலை உருவாக்கப்படும். எந்த மாநிலமும் இதற்கு கீழ் சம்பளம் நிர்ணயிக்க முடியாது.
விடுமுறை நாட்கள் மற்றும் பணிக்கொடை விதிகள்

பட மூலாதாரம், Getty Images
- புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்கள் (Fixed-Term Employees- FTEs) இனி ஓராண்டு பணிக்குப் பிறகு பணிக்கொடை பெற தகுதி பெறுவார்கள். முன்பு இந்த தகுதி பெற குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
- ஊழியர்களுக்கான வரி இல்லாத கிராஜுவிட்டி வரம்பு ரூ. 20 லட்சமாக இருந்தது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில், இந்த வரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
- அதாவது, ஒரு ஊழியர் ரூ. 20 லட்சத்திற்கு மேல் கிராஜுவிட்டி பெறும்போது, அது வரி விதிக்கக்கூடிய வருமானமாகக் கருதப்படுகிறது. வரி வரம்பு அதற்கேற்ப பொருந்தும்.
- இனி, 180 நாட்கள் பணியாற்றிய பின்னர், ஒவ்வொரு 20 நாள் பணிக்காக ஒரு நாள் வருடாந்திர விடுப்பு வழங்கப்படும்.
- இதற்கு முன்பு, இந்த விடுப்பை பெற, 240 நாட்கள் பணியாற்ற வேண்டும். இதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
- பணிநேரத்திற்குப் பிறகு அதிக நேரம் பணி செய்தால், வழங்கப்படும் இரட்டிப்பு ஊதியம் தொழில்துறை ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் என்று அரசு கூறுகிறது. இருப்பினும், தொழிலாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வைக்கக்கூடாது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிபுணர்களின் கருத்து என்ன ?
முன்னதாக, அரசு நிறுவனங்களில் மட்டுமே வேலைநிறுத்தத்திற்கு 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிக்கை வழங்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த முன்னறிவிப்பு காலம், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இதற்கு சிஐடியூ (CITU) தேசிய பொதுச் செயலாளர் சுதீப் தத்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்பு, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அனைத்து தொழிற்சாலைகளும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்க அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. இப்போது இந்த வரம்பு 300 தொழிலாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, 299 பேர் வரை தொழிலாளர்கள் இருந்தால் அரசாங்க அனுமதி பெறாமல் பணிநீக்க நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபடலாம்.
"சட்ட பாதுகாப்பில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை விலக்கி வைக்க அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது?" என்று பிபிசியிடம் பேசிய சுதீப் தத்தா கேள்வி எழுப்புகிறார்.
"நமது நாட்டில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் ஐந்து சதவீதம் கூட இல்லை. இப்போது பல தொழிலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது," என அகில் குஜராத் மஜ்தூர் சங்கத்தின் வழக்கறிஞரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான எம்.ஜே. மேமன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் பணிபுரிகிறார்கள். அவர்களால் எந்த வழக்கறிஞரையோ அல்லது தொழிற்சங்கத்தையோ அணுக முடியாது.
நவம்பர் 21, 2025க்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் புகார்களையும் தொழிலாளர் நல ஆணையர் ஏற்பதில்லை என்று மேமன் குற்றம்சாட்டினார்.
ஒரு ஊழியர் ஒரு வருடம் பணிபுரிந்தால், 15 நாட்கள் சம்பளம் பணிக்கொடையாக வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நிறுவனங்கள் 11 மாதங்களுக்குள் ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்தால், பணிக்கொடை வழங்கப்படாது, மேலும் அந்த நபரின் புகாரும் விசாரிக்கப்படாது.
"புதிய சட்டத்தில், அரசாங்கம் தொழிலாளர் நீதிமன்றத்தை ரத்து செய்துவிட்டு, தொழில்துறை நீதி ஆணையம் (Industrial Justice Commission) என்ற அமைப்பை உருவாக்கியது. ஆனால் அதற்கான இரண்டு நீதிபதிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை," என்றும் மேமன் விமர்சித்துள்ளார்.
கூடுதல் நேரம் பணி செய்வது தொடர்பான சட்டம் குறித்துப் பேசிய அவர், "இதுவரை எந்த நிறுவனமும் ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் ஊதியத்தை வழங்கியதில்லை. ஒரு சதவீத தொழில்துறைகள் மட்டுமே இதைப் பின்பற்றுகின்றன" என்றார்.
மறுபுறம், பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பனகாரியா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், பணிநீக்கச் சட்டத்தின் பழைய விதிகள் "மிகவும் கட்டுப்பாடானவை" என்றும், இது வங்கதேசம், வியட்நாம் மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் போட்டித்தன்மையைப் பாதிக்கிறது என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












