தமிழ்நாட்டில் இன்றும் கோவில்களில் பட்டியல் சாதியினர் வழிபட அனுமதி மறுப்பா? பிபிசி கள ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் இருக்கும் பல கோவில்களுக்குள் சென்று வழிபடுவதில் பட்டியல் சாதியினர் இன்னமும் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்துமு பிபிசி தமிழ் நடத்திய கள ஆய்வில், இன்றளவும் கோவிலுக்குள் சென்று வழிபடுவதில் மாநிலத்தின் பல கிராமங்களில் பட்டியல் சாதியினர் பல சவால்களை எதிர்கொள்வதை அறிய முடிந்தது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இத்தகைய பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஆனாலும், தமிழ்நாட்டின் பல கிராமங்களில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களிலும் பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்?
"அரசாங்க கோவில்தான். அதுக்காக நீங்க எல்லாம் சாமி கும்பிட வரலாமா?"
"உன் தாத்தா கோவிலுக்குள்ள வரல. உன் அப்பாவும் வரலை. நீ மட்டும் வரலாமா?"
"தனியா கோவில் கட்டி கும்பிடுங்க.. எங்க கோவிலுக்கு ஏன் வரணும்?"
திருவண்ணாமலை, தென்முடியனூர் கிராமத்தில் கோவில் வழிபாட்டு உரிமையைக் கோரியபோது பட்டியல் சாதியினர் இந்த வார்த்தைகளை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பல கிராமங்களில் உள்ள கோவில்களில் இதே நிலை நீடிக்கிறது. "பழைய வழக்கத்தை மாற்றுவதற்குச் சிலர் முயல்வதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக" ஆதிக்க சாதியினர் கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள வழுதலம்பேடு ஊராட்சியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
'கோவிலுக்கு உங்க காசு தேவையில்லை' என அவர்கள் (ஆதிக்க சாதியினர்) கூறியதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை" என்கிறார் வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கணபதி.
இதையடுத்து இரு தரப்பையும் அழைத்து கும்பிடிப்பூண்டி டி.எஸ்.பி கிரியாசக்தி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டது. மறுநாள் (ஆகஸ்ட் 9) கோவிலுக்குச் சென்ற பட்டியல் பிரிவு மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
'பட்டா நிலத்துக்குள் பட்டியல் பிரிவு மக்கள் வரக்கூடாது' எனக் கூறி ஆதிக்க சாதியினர் தகராறு செய்துள்ளனர். இதைக் கண்டித்து பட்டியல் பிரிவு மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் வழுதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவி மணிமேகலை உள்பட 7 பேர் மீது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக, வழுதலம்பேடு கிராமத்தின் நிலையை அறிய பிபிசி தமிழ் நேரில் சென்றது. இரு தரப்பிலும் பாதுகாப்புக்கு தலா இரண்டு காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். கோவிலின் முன்பு எஸ்.ஐ ஒருவர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாகவே எட்டியம்மனை வழிபட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதியினர் இடையூறு செய்வதாகக் கூறுகிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.
கடந்த 1997ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு 2001ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அப்போது, 'எங்கள் காலனியில் சாமி ஊர்வலம் வர வேண்டும்' என பட்டியல் பிரிவு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
"இதை ஆதிக்க சாதியினர் ஏற்கவில்லை. அன்றைய மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் கோவிலுக்குள் சென்று பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது."
மீண்டும் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு 2011ஆம் ஆண்டு திருவிழா நடத்தப்பட்டது. அப்போதும் இதே பிரச்னை ஏற்பட்டு கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறுகிறார் சிவக்குமார்.
"அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் இருப்பதால், அது பொதுவானது, ஒரு சாதியினர் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது என அதிகாரிகள் கூறியதை ஆதிக்க சாதியினர் ஏற்கவில்லை" என்கிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கணபதி.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கும்பாபிஷேக நிகழ்வைக் காணச் சென்ற தங்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கூறுகிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த மாலதி.
அதுகுறித்துப் பேசிய மாலதி, நாங்கள் சாமி கும்பிடச் சென்றபோது, சாதியைச் சொல்லித் திட்டினார்கள். எட்டியம்மனை கும்பிட்டால் போதுமென்று வேறு வழியில் சென்றோம். அதிலும் விட மறுத்து அவமானப்படுத்தி அடிக்க வந்தார்கள். அதன் பிறகு சாலையில் உட்கார்ந்து விட்டோம். போலீசார் வந்து சமாதானப்படுத்தி கோவிலுக்குக் கூட்டிச் சென்றார்கள்," என்றார்.
இதன்பின்னர், இரு தரப்பிலும் சுமூகத் தீர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இரு தரப்பிலும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே நாளில் பட்டியல் பிரிவு மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினார். ஆனால், இந்த நிகழ்வை பிற சமூகத்தினர் முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிட்டனர்.
இதன்மூலம் நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறுகிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.
‘அனைவரும் சமம்’ என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதை உறுதிப்படுத்தும் வேலையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
"இரு தரப்பினரையும் ஒன்றாக வழிபட வைக்கும்போதுதான் நிரந்தரத் தீர்வு ஏற்படும். எளிய மக்களின் பக்கம் மாவட்ட நிர்வாகம் நிற்க வேண்டும். அதேநேரம், சட்டம் சொல்வதை பிற சமூகத்தினரிடம் எடுத்துக் கூறியுள்ளோம்" என்கிறார்.

அறநிலையத்துறை கோவில்களில் பட்டியல் சாதியினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
அவர், "கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு கிராமத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் சுமூகமாகப் பேசி மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதாகவும், இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு காணப்பட்டதாகவும்" கூறினார்.
அதோடு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
ஆனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் தற்போது வரை பிரச்னை நீடிப்பதையும் பிபிசி தமிழின் கள ஆய்வில் காண முடிந்தது. இதுதொடர்பாகக் கேட்டபோது, அமைச்சர் சேகர்பாபு, தென்முடியனூர் கிராமத்தில் நிலவும் சாதிப் பாகுபாடு தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் அரசமைப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் மாநில எஸ்.சி, எஸ்.டி, ஆணைய துணைத் தலைவர் புனிதபாண்டியன், "இதுபோன்ற சமூகச் சிக்கல்கள் நேரும்போது, அதை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளை அனைவரும் சமமாக அனுபவிக்கும் வழிவகைகளை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இருப்பதாக" தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



