டிரம்ப் இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை என்ன? நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?
ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், "பல தசாப்தங்களாக சில நாடுகள் நமக்கு எதிராகக் கடும் இறக்குமதி வரியை விதிக்கின்றன. தற்போது நமக்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. அந்தந்த நாடுகளுக்கு எதிராக நாமும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்
அதோடு, "ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் எவ்வளவு வரி வசூலிக்கின்றன என்று தெரியுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"எண்ணற்ற பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிக வரியை நம்மிடம் இருந்து வசூலிக்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா, அமெரிக்க வாகனங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் வரி வசூலிக்கிறது. இந்த முறை அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
அதனால், "ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. பிற நாடுகள் நமது பொருளுக்கு என்ன வரி வசூலிக்கின்றனவே, அதே அளவுக்கு நாமும் அவர்களிடம் இருந்து வசூலிப்போம்" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



