You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தக் லைஃப்: நாயகன் கூட்டணி 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதித்ததா? ஊடக விமர்சனம்
நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி ஒன்றிணைவதால், பெரும் எதிர்பார்ப்பை பெற்ற தக் லைஃப் படம் இன்று (ஜூன் 05) வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரும் நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழ் மொழியையும் கர்நாடக மொழியையும் இணைத்து கமல்ஹாசன் பேசிய பேச்சு, கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாலும் இப்படம் குறித்த பரபரப்பு மேலும் அதிகமானது.
இத்திரைப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
தில்லியில் கதை ஆரம்பமாகிறது. வில்லன் ஒருவரிடம் சக வில்லன்களான கமல்ஹாசன் (ரங்கராய சக்திவேல்), நாசர், ஜோஜு ஜார்ஜ் பேச்சுவார்த்தையை முடித்ததும் அவர்களைச் சுடுவதற்கு காவல்துறையினர் அந்த குடியிருப்பைச் சுற்றி வளைக்கின்றனர். அதிலிருந்து, தப்பும் கமல் ஒரு சிறுவனையும் தன்னுடன் அழைத்து வருகிறார். சிறுவன் வளர்ந்து கமலுக்கு நம்பிக்கையான ஆளாக மாறுகிறார். அச்சிறுவன் நடிகர் சிலம்பரசன். அதிகாரத்தைக் கைப்பற்ற ரங்கராய சக்திவேலை சிம்பு எதிர்க்கிறார். எவ்வளவு முறை கொல்ல முயற்சித்தாலும் மரணமடையாத கமல், தனக்கு துரோகம் செய்தவர்களைத் தேடி வந்து பழிவாங்குகிறார். இதற்கிடையே நடக்கும் காட்சிகளின் கோர்வைதான் தக் லைஃப் படத்தின் கதை என்கிறது தினமணி விமர்சனம்.
'எதிலுமே உணர்ச்சிகள் இல்லை'
1994-ல் நடக்கும் காட்சிகளில் நடிகர் கமல்ஹாசனின் இளவயது தோற்றத்தை டீ-ஏஜிங் மூலம் அட்டகாசமாகத் திரைக்குக் கொண்டுவர, விசில் சத்தம் பறக்கிறது என குறிப்பிடுகிறது தினமணி.
அடுத்தடுத்து காட்சிகள் நகர, நாயகன் மாதிரி ஏதோ நல்ல சம்பவம் வரப்போகிறது என நினைத்தால் அதுவும் இல்லை என்றும் இயக்குநர் மணிரத்னம் படமென்றால் கதையுடன் இணைந்த உணர்வுப்பூர்வமான காட்சிகள் எங்காவது நம்மை இழுக்கும், அதுவும் இல்லை என்றும் தினமணி விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
"தக் லைஃப்-ல் அதரப்பழசான கதை, எமோஷன்ஸ் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. நாயகன் கொஞ்சம், செக்கச் சிவந்த வானம் கொஞ்சம் என கலக்கி அடித்திருக்கிறார். சில பிரேம்கள் தேறியதே தவிர ஒட்டுமொத்த படமும் எதை நோக்கிச் செல்கிறது என்பதில் கடுமையாகத் தடுமாறுகிறது. ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் எந்த தூண்டுதலும் இல்லாமல் வெறுமனே காட்சிகள் கடந்து செல்கின்றன." என கூறுகிறது தினமணி.
அண்ணன் - தங்கை பாசம், கணவன் - மனைவி பாசம் என எதிலுமே உணர்ச்சிகள் இல்லை என்று கூறியிருக்கிறது தினமணி.
கார் துரத்தல் சண்டைக் காட்சிகளை எடுத்திருந்த விதம் நன்றாக இருந்தது என்றும் ஆனாலும், ஆக்ஷனுக்கான வலுவான காரணங்கள் எல்லாம் திரைக்கதை, வசனங்களால் பலத்தை இழக்கின்றன என்றும் கூறுகிறது தினமணி.
இதுதவிர, திரைக்கதையில் பலவீனங்கள் வெளிப்படுவதாக பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டியுள்ளது தினமணி. நிறைய இடங்களில் லாஜிக் கேள்விகள் தோன்றினாலும் கமல்ஹாசன் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை என கூறுகிறது. ஆனாலும், கமலின் நடிப்பு மட்டுமே இருந்தாலும் அழுத்தம் என எங்கும் உருவாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
"நடிகர்கள் நாசர், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் கதைக்கு ஏற்ப அவரவர் பங்களிப்பை குறையில்லாமல் செய்திருக்கின்றனர். முக்கியமாக, த்ரிஷா - கமல் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இப்படத்துக்காக ஏ. ஆர். ரகுமான் சிறந்த பாடல்களை அளித்துள்ளார். ஆனால், அவையெல்லாம் வீணடிக்கப்பட்டதுபோல் இருக்கிறது." என கூறியுள்ளது தினமணி விமர்சனம்.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவை பாராட்டியுள்ள தினமணி, இப்படம் மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே சுமாரானது என்றுதான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளது.
'மணிரத்னம் படம் தானா?'
கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி என்கிறது இந்து தமிழ் விமர்சனம்.
"கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் 'அஞ்சுவண்ண பூவே' பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது." என்கிறது இந்து தமிழ்.
'போதும் போதும்' என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே மணிரத்னம் நகர்த்தி இருக்கிறார் என விமர்சித்துள்ள 'இந்து தமிழ்' கமல்-சிம்புவுக்கு இடையிலான காட்சிகளில் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை என கூறியுள்ளது .
த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை என்றும் கூறுகிறது இந்து தமிழ். "இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி." என விமர்சித்துள்ளது இந்து தமிழ்.
அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பிப்பது என, ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது என கூறியுள்ளது இந்து தமிழ்.
"முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் 'இந்தியன்' தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம்.
ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரகுமானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும், இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், 'மிர்சாபூர்' அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை." என எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது இந்து தமிழ்.
முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம் என்றும் 'க்ளாசிக்' அந்தஸ்தை பெற்றுவிட்ட 'நாயகன்' அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரமாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும் என்றும் கூறுகிறது இந்து தமிழ் விமர்சனம்.
'அதல பாதாளத்தில் திரைக்கதை'
இரு எதிரிக்குழுக்களிடையே நடக்கும் சண்டையை காட்டுவது மட்டுமல்ல கேங்ஸ்டர் திரைப்படம், மாறாக அவர்களுக்குள் நடக்கும் கதைகளை காட்டுவதுதான் எனக்கூறியுள்ள இந்தியா டுடே, 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாதி அதை வெளிப்படுத்தியிருப்பதாக கூறுகிறது. படத்தின் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் துரோகம் இழைப்பார்கள் என்ற விவரங்கள் படத்தில் இருப்பதாகக் கூறும் இந்தியா டுடே, இடைவேளைக்கு முன்பு வரை பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக தெரிவித்துள்ளது.
நேருக்கு நேர் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இடைவேளை வரைதான் படம் ஓரளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாகக் கூறுகிறது.
இரண்டாம் பாதி தொடங்கும்போது மணிரத்னத்தின் திரைக்கதை நம்மையும் சேர்த்து அதல பாதாளத்துக்குள் தள்ளிவிடுவதாகவும் அதிலிருந்து திரும்பி வருவதற்கு வழியே இல்லையென்றும் விமர்சித்துள்ளது இந்தியா டுடே. ரங்கராய சக்திவேலுக்கும் அமருக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதைக்களம் அதிலிருந்து விலகிவிடுவதாக விமர்சித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷாவின் இந்திராணி கதாபாத்திரம், பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது இந்தியா டுடே விமர்சனம். கமல்ஹாசனும் சிம்புவுமே தங்களின் நடிப்பால் படத்தை பெரிதளவும் தாங்கியிருப்பதாக கூறுகிறது.
'பலவீனமான கதாபாத்திர வடிவமைப்பு'
டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்தில் கூறுகையில், சுவாரசியமில்லாத திரைக்கதை மற்றும் பலவீனமான கதாபாத்திர வடிவமைப்பு படத்தை மோசமானதாக மாற்றியிருப்பதாக தெரிவிக்கிறது.
மேலும், பல கேங்ஸ்டர் படங்களில் பார்த்து சலித்த அதே குழு மோதல்கள், துரோகம், பொறாமை, பழிவாங்கல் போன்ற உணர்வுகளே இப்படத்திலும் காட்டப்பட்டிருக்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
இருந்தாலும், ஒரு பாரில் பாடகராக இருக்கும் த்ரிஷா, போலீசாக வரும் அசோக் செல்வன், வில்லனின் உறவினராக வரும் 'மிர்சாபூர்' சீரிஸில் வரும் இந்தி நடிகர் அலி ஃபஸல் ஆகியோரின் காட்சிகளால் படத்தின் முதல் பாதி சிறிது ஈர்ப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு