You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் பள்ளி தாளாளரின் ஒரே மகள் உயிரிழப்பு - என்ன நடந்தது?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் காமாட்சி நண்பர்களுடன் ஆர் சி பி வெற்றி விழாவை காண சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பை அவரது குடும்பத்தினர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது உடல் இன்று (ஜூன் 5) பெங்களூருவிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
பெங்களூருவில் ஆர் சி பி அணியினரின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் காயமடைந்துள்ளனர் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி தாளாளரின் மகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் காமாட்சி (வயது 29) என்பவரும், பெங்களூரு ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மூர்த்தி, உடுமலை மைவாடி பிரிவு அருகில் விவேகானந்தன் பள்ளி என்ற தனியார் பள்ளியின் தாளாளராக இருக்கிறார். இவருடைய ஒரே மகள் காமாட்சி. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
தன்னம்பிக்கைப் பேச்சாளரான மூர்த்தி, கல்லுாரிகளில் மாணவர்களிடையே உரையாற்றுவார். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு நன்னெறி வகுப்புகள் எடுப்பவர். காமாட்சி, பொறியியல் முடித்து விட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில், இவரது உடல் உடுமலை அருகே மைவாடி பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்த உடன் பெற்றோர்கள் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் காமாட்சி தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
'வெற்றிக் கொண்டாட்டத்தை காண நண்பர்களுடன் சென்றார்'
பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க டிக்கெட் வாங்க முயற்சி செய்து கிடைக்காத காரணத்தால், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை நேரில் பார்ப்பதற்காக தனது அறை நண்பர்களுடன் சென்றுள்ளார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்துக்காக பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டதும் இவர் அங்கு செல்ல ஒரு காரணமென்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனது மகள் காமாட்சியின் மரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூர்த்தி, ''எனது மகள் பெரிதாக எதற்கும் ஆசைப்பட மாட்டாள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக, ஒரு கிரிக்கெட் மேட்ச்சையாவது நேரடியாகப் பார்க்க வேண்டுமென்று ரொம்பவும் ஆசைப்பட்டாள். பலமுறை முயற்சி செய்தும் அவளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் நேற்று தனது தோழிகளுடன் அங்கு சென்றிருக்கிறாள். எப்போது எங்கு சென்றாலும் எங்களிடம் சொல்லாமல் அவள் போகவே மாட்டாள். நேற்று எங்களிடம் எதுவும் சொல்லவில்லை.'' என்றார்.
''அதன்பின் நடந்ததை அவள் நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது. நாங்கள் சென்றடைய இன்று அதிகாலை 3:00 மணியாகிவிட்டது. காலை 5 மணிக்கெல்லாம் பிரேத பரிசோதனை முடித்துக் கொடுத்து விட்டார்கள். பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்போதுதான் (காலை 10:00 மணி) உடலை எடுத்துக் கொண்டு சேலம் வந்து கொண்டு இருக்கிறோம். ஸ்டேடியத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில்தான் எனது மகள் இறந்ததாக உடனிருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எங்களால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.'' என்றார்.
- 'வெளியே கூட்ட நெரிசல், உள்ளே ஆர்சிபிக்கு பாராட்டு விழா' - கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன?
- கூட்ட நெரிசல், தடியடி, மயங்கிய ரசிகர்கள் - ஆர்சிபி கொண்டாட்டத்தில் நடந்ததை விவரிக்கும் புகைப்படங்கள்
- கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: பெங்களூருவில் என்ன நடந்தது? கோலி கூறியது என்ன?
- இந்தியாவின் அண்டை நாடு உள்பட 12 நாட்டவர் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் புதிய உத்தரவு
ஆர் சி பி அணியினர் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ பி எல் கோப்பையை வென்றதை அடுத்து, அவர்களுக்கான வெற்றிக் கொண்டாட்டங்கள் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி அணியினருக்கான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவை காண ரசிகர்கள் பலரும், வெற்றிக் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்க்க பலரும் கூடியிருந்தனர். இரண்டு லட்சம் பேர் எதிர்பாராத வகையில் கூடிவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கூராய்வு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஜூன் 4-ம் தேதி இரவு ஒப்படைக்கப்பட்டு விட்டது. நெரிசலில் சிக்கி காயமடைந்த சிலர் 'பௌரிங் அண்ட் லேடி கர்சன்' மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல்
திவ்யான்ஷி, பெங்களூரு
அக்ஷதா பய் (26), உத்தர் கன்னடா
பூமிக் (19), பெங்களூரு
சஹானா (23), கோலார்
சின்மயா ஷெட்டி (19), பெங்களூரு
மனோஜ் குமார் (20), தும்கூர்
ஸ்ரவணா (20), சிக்கபல்லபூர்
ஷிவா (எ) ஷிவலிங்க ( 17), யதகிரி
பூர்ண சந்திரா (20), மாண்டியா
காமாக்ஷி தேவி (29), தமிழ்நாடு
ப்ரஜ்வல் (22), பெங்களூரு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு