You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் அண்டை நாடு உள்பட 12 நாட்டவர் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் புதிய உத்தரவு
பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
டிரம்ப் கையெழுத்திட்ட பிரகடனம், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை பகுதியளவு கட்டுப்படுத்துகிறது.
டிரம்பின் இந்த பிரகடனம் ஜூன் 9-ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
'அமெரிக்கர்களைப் பாதுகாக்கும்' - வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகெய்ல் ஜாக்சன் கூறுகையில், "நமது நாட்டிற்கு வந்து நமக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஆபத்தான வெளிநாட்டவர்களிடம் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான தனது வாக்குறுதியை அதிபர் டிரம்ப் நிறைவேற்றுகிறார்." என்று கூறினார்.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் பேசிய அவர், "இந்த கட்டுப்பாடுகள் நாடு சார்ந்தவை. சரியான சோதனை இல்லாத, அதிக விசா காலாவதி விகிதங்களைக் காட்டும் அல்லது அடையாளம் மற்றும் அச்சுறுத்தல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தவறும் நாடுகளும் இதில் அடங்கும். அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்க மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் செயல்படுவார்," என்றார்.
கொலராடோ தாக்குதலை சுட்டிக்காட்டிய டிரம்ப்
அமெரிக்க அபிதர் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பயணத் தடையை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொலராடோவில் நடந்த சமீபத்திய தாக்குதல், "முறையாக சரிபார்க்கப்படாமல்" அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினரின் "தீவிர ஆபத்துகளை" விளக்குகிறது என்று கூறி அவர் அந்த வீடியோவை தொடங்குகிறார்.
விசா காலாவதியாகி வருபவர்களை அவர் தற்காலிக பார்வையாளர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
"நாங்கள் அவர்களை விரும்பவில்லை" என்று டிரம்ப் வீடியோவில் கூறுகிறார்.
கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த நபரும் அவரது குடும்பத்தினரும் எகிப்திய குடிமக்கள் ஆவர்.
ஆனால், டிரம்ப் உத்தரவின் பேரில் குறிவைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் எகிப்து இல்லை.
ஹார்வர்டுக்கு மீண்டும் குறி
டிரம்ப் அறிவித்த 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணக் கட்டுப்பாடுகளுடன், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான வெளிநாட்டு மாணவர் விசாக்களை கட்டுப்படுத்தும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
"நமது கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டிருக்க விரும்புகின்றன, ஆனால் வெளிநாட்டு மாணவர்கள் நம் நாட்டை நேசிக்கக் கூடிய மக்களாக இருக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்" என்று வெள்ளை மாளிகையின் உண்மை தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு ஹார்வர்ட் சிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனமாக இருந்ததாகவும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சொந்த மகள் 2010 களில் அங்கு படித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்டத்தின் (SEVP) கீழ் வெளிநாட்டு மாணவர்களை வளாகத்தில் சேர்ப்பதற்கான ஹார்வர்டின் சான்றிதழை டிரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் ரத்து செய்ய முயன்றது.
ஆனால் ஒரு அமெரிக்க நீதிபதி அந்த உத்தரவைத் தடுத்தார். ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தேவைகளை பூர்த்தி செய்ய 30 நாள் அவகாசம் வழங்குவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியது.
யூத எதிர்ப்புக்கு எதிராக ஹார்வர்ட் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதன் பணியமர்த்தல் மற்றும் சேர்க்கை நடைமுறைகள் பாரபட்சமானவை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு