‘பேலியோ டயட்’ ஆதிமனித உணவுப்பழக்கமா? ஆய்வுகள் சொல்லும் உண்மைகள்

    • எழுதியவர், சிசிலியா பரியா
    • பதவி, பிபிசி உலக சேவை

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் மற்றும் கற்கால உணவு முறை தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று நம்புகிறவர்கள், குகை மனிதர்களின் உணவுப் பழக்கம் என்று நம்பப்படும் உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

இந்த உணவு முறை சமகாலத்தில் 'பேலியோ டயட்' என்று அழைக்கப்படுகிறது.

சருமத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், செரிமான பிரச்னைகளை தீர்க்கவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சிகள், மீன், முட்டை, கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவை அடங்கும். ஏனெனில் இவை வேட்டைச் சமூகமாக இருந்தபோது மனிதர்கள் உட்கொண்டதாக நம்பப்படும் உணவுகள்.

ஆனால், 10, 000 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சிறிய அளவிலான விவசாயம் தொடங்கிய காலத்தில் மிகவும் பொதுவான உணவுகளாக மாறிய தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை இந்த உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

மனிதர்களிடம் வரலாற்றுக்கு முந்தையை உணவு முறை இருந்தது என்பது உண்மையல்ல என்கிறார் அமெரிக்க டியூக் பல்கலைக்கழகத்தின் பரிணாம மானுடவியல் மற்றும் உலகளாவிய ஆரோக்கிய பேராசிரியர் ஹெர்மன் பொன்ட்சர்.

"கடந்த காலத்தில் மனிதர்கள் என்ன உண்டார்கள் என்பது பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன" என்று பிபிசி முண்டோ சேவையிடம் அவர் தெரிவித்தார்.

அவை அனைத்தும் இயற்கையான உணவுமுறை இருந்தது என்ற அனுமானத்தின் அடிப்படையிலான கடந்த காலத்தை பற்றிய நம்பிக்கைகள் என்றும் அவர் கூறினார்.

தன்சானியாவின் ஹட்ஸா பழங்குடியினர்

நம் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கு ஒப்பான நெருக்கமான ஒரு வாழ்க்கையை இன்று வாழ்ந்து வரும் வேட்டை சமூகமான ஹட்ஸா பழங்குடியினர் குறித்து அறியவும் அவர்களுடன் இணைந்து வாழவும் பொன்ட்சர் தன்சானியாவிற்கு பயணித்தார்.

பயிர்களை வளர்ப்பது அல்லது விலங்குகளை வளர்ப்பதற்குப் பதிலாக, ஹட்ஸா பழங்குடியினர் நீண்ட தூரம் பயணித்து, பயணத்தின் போது கிடைத்ததை உட்கொண்டு வாழ்கின்றனர்.

அவர்களின் உடல்நலம் மற்றும் உடலியல் குறித்து கடந்த தசாப்தத்தில் ஆய்வு செய்த போன்ட்ஸர் இதை நன்கு அறிவார்.

காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், தேன் சேகரித்தல், கிழங்கு தோண்டுதல், பெர்ரி பழங்கள் சேகரித்தல் அல்லது தண்ணீர் மற்றும் விறகுகளை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்காக ஒரு நாளைக்கு 10 கிலோமீட்டர் தூரம்வரை அவர்கள் நடக்கிறார்கள்.

ஹட்ஸா மற்றும் உலகின் பிற பழங்குடி சமூகங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, பேலியோ என்று எந்த உணவு முறையும் இல்லை என்று பொன்ட்சர் வாதிடுகிறார்.

வானிலை, காலநிலை உட்பட பல நிலைமைகளைப் பொறுத்து, வேட்டையாடுபவர்களிடம் பல விதமான உணவு முறை இருந்ததாக அவர் கூறுகிறார்.

இன்று நாம் உண்பதைவிட காட்டு விலங்குகள், வேர் காய்கறிகள் மற்றும் பெர்ரிகளில் குறைவான கலோரிகள், உப்பு அல்லது கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான் என்றாலும் ஆய்வு செய்யப்பட்ட சமூகங்களின் பெரும்பாலான உணவுகள் குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சிகள் அல்ல.

நம்முடைய நம்பிக்கைக்கு மாறாக, குகை மனிதர்கள் கார்போஹைட்ரேட், சர்க்கரை நிறைந்த உணவுகள், வேர் காய்கறிகள், தேன் மற்றும் தானியங்களைக் கூட உண்டதாக பொன்ட்சர் கூறுகிறார்.

இந்த மனிதர்கள் என்ன உண்டார்கள் என்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த இரு நூறாண்டுகளுக்கு முந்தைய பதிவுகள் உள்ளன.

அதில், மனிதர்களிடம் ஒரே மாதிரியான பழங்கால உணவு முறை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

“பொதுவாக வேட்டையாடுபவர்கள் உணவில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே சமநிலை உள்ளது. ஆனால் அது மிகவும் வேறுபடும்” என்று பொன்ட்சர் கூறுகிறார்.

நம்முடைய உடல் எடையை அதிகரிக்க வைத்தது எது?

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது மிகவும் கடினம் என்கிறார் பொன்ட்சர்.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று கூறும் அவர், அதில் ஒரு காரணம் புரதம் மற்றும் நார்ச்சத்து நீக்கப்பட்டு, சர்க்கரைகள், எண்ணெய், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் உண்பது என்கிறார்.

“சாதாரண உணவுகளை உண்பதற்கே நம்முடைய உடல் பழக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்கப்படும் பொருட்கள் மரத்திலிருந்தோ, நிலத்திலிருந்தோ அல்லது வேட்டையாடுபவர்களிடம் இருந்தோ நேரடியாக வருவதில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

அந்தக் கண்ணோட்டத்தில், ஆரோக்கியமான முறையில் சாப்பிடுவது எளிதானது அல்ல. நான் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்க முயற்சிக்கிறேன், ஆனால் நான் முழுமையாக அதைக் கடைபிடிப்பதில்லை எனக் கூறும் பொன்ட்சர், சில சமயங்களில் மற்றவர்களைப் போல சுவையான பதப்படுத்தப்பட்ட உணவைக் கண்டு தானும் தூண்டப்படுவதாக கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: