பாகிஸ்தான் தேர்தல்: தன்னை வெற்றிபெற வைக்க மோசடி நடந்ததாக கூறி, பதவி விலகிய அரசியல்வாதி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரான்சிஸ் மாவோ
- பதவி, பிபிசி நியூஸ்
பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி ஒருவர் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
வாக்குப்பதிவின் போது தம்மை வெற்றி பெற வைக்க மோசடிகள் நடந்ததாக அவர் கூறுகிறார்.
ஜமியத்-இ-இஸ்லாமி கட்சியின் ஹபீஸ் நயீம் உர் ரஹ்மான், மாகாணத்தின் பிஎஸ்-129 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதி கராச்சி நகரில் உள்ளது.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தன்னை விட அதிக வாக்குகளைப் பெற்றதாகவும் ஆனால் பின்னர் அந்த வேட்பாளரின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் ரஹ்மான் கூறினார்.
மேலும், "இப்படி மோசடி செய்து தான் எங்களை ஜெயிக்க வைக்க வேண்டுமென யாராவது நினைத்தால், அதை நாங்கள் கண்டிப்பாக பொறுத்துக்கொள்ளமாட்டோம்" என்று கூறி, தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

பட மூலாதாரம், REUTERS
இப்போது யாருக்கு அந்த சீட் கிடைக்கும்?
"பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். வெற்றிக்கு தகுதியானவர் அந்த வெற்றியைப் பெற அனுமதிக்க வேண்டும், மக்களால் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும், யாரும் கூடுதலாக எதையும் பெறக்கூடாது,'' என்றார் ரஹ்மான்.
தொடர்ந்து பேசிய ஹபீஸ் நயீம் உர் ரஹ்மான், "நான் 26 ஆயிரம் வாக்குகளை பெற்றேன், சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்ட பிடிஐ ஆதரவு வேட்பாளர் சைஃப் பாரி 31 ஆயிரம் வாக்குகளை பெற்றார், ஆனால் இறுதி முடிவில் சைஃப் பாரிக்கு 11 ஆயிரம் வாக்குகள் மட்டுமே காட்டப்பட்டன" என்றார்.
ஹபீஸ் நயீம் உர் ரஹ்மானின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
பிஎஸ்-129 நாடாளுமன்ற இருக்கைக்கான பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்த பிறகு, அந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், கடந்த வியாழன் அன்று நடைபெற்ற பாகிஸ்தானின் தேர்தல் நியாயமானதா என்பது குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் மோசடி குறித்த குற்றச்சாட்டுகள்
இந்தத் தேர்தல்களில் பெரிய அளவில் வாக்கு மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கவே இந்த முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
அக்கட்சியின் தேர்தல் சின்னமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிஐ வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே இதன் பொருள்.

பட மூலாதாரம், Getty Images
சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி
பல தடைகளையும் மீறி நாடு முழுவதும் அதிகளவில் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்று இம்ரான் கானுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
265 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பிடிஐ ஆதரவு பெற்ற 93 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் இந்த சுயேச்சை வேட்பாளர்களின் குழு பாகிஸ்தானின் வேறு எந்த கட்சியையும் விட அதிக முன்னிலையில் இருந்தது.
தங்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதமும் மற்ற கட்சிகளை விட அதிகமாக இருப்பதாகவும் பிடிஐ கூறுகிறது.
வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாக பிடிஐ கட்சி பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது மற்றும் பிஎஸ்-129 தொகுதியில் இருந்து ஜமியத்-இ-இஸ்லாமி வேட்பாளர் வெளியேறும் முடிவையும் அக்கட்சியினர் வரவேற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி
இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்றாலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் என்ற கட்சியும் (பிஎம்எல்- என்) மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (பிபிபி) இணைந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியிருப்பதாக இந்த வார தொடக்கத்தில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் பிஎம்எல்- என் 75 இடங்களையும், மூன்றாவது இடத்தில் இருந்த பிபிபி கட்சி 54 இடங்களையும் பெற்றது.
ஆட்சி அமைப்பதற்காக பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கிடைக்கும் 70 இடங்களும் அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
ஆனால், இந்த கூடுதல் இடங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கிடைக்காது.

பட மூலாதாரம், Getty Images
நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ சர்தாரி கூட்டணி
இவ்வாறு செய்தால், ஆட்சி அமைக்கத் தேவையான 169 இடங்களை இந்தக் கூட்டணி எளிதாகப் பெறும் என்பது அவர்களின் கணக்கு.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை 2022ஆம் ஆண்டில் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக இணைந்து செயல்பட்டன. அப்போது நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ஏற்றிருந்தார்.
இந்த முறையும் அவர்தான் நாட்டின் புதிய தலைவராக முன்னிறுத்தப்படுகிறார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தேர்தலுக்கு சில நாள்கள் முன்பு, அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறை தண்டனைகளையும் ஒருசேர அவர் அனுபவிக்க வேண்டும்.
71 வயதான இம்ரான் கான், தான் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதியாக இது நடந்துள்ளதாகவும் கூறுகிறார்.
இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தானின் தற்காலிக அரசு நிராகரித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












