"சீனாவின் தண்ணீர் குண்டு" : பிரம்மபுத்ராவுக்கு குறுக்கே அணை கட்டுவதால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அப்போது, இந்தியா தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.
ஆனால், தண்ணீர் ஆயுதம் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன?
அதற்கான பதில், திபெத்தில் பிரம்மபுத்திரா நதியில் சீனா உலகின் மிகப்பெரிய நீர் மின்நிலைய அணையைக் கட்டத் தொடங்கியுள்ளதே.
அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, சீனா இந்த அணையை ஒரு "தண்ணீர் குண்டாக" பயன்படுத்த முடியும் என பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்த அணை பற்றி சீனா கூறுவது என்ன? இந்த அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா? இந்த காணொளியில் பார்க்கலாம்.
சீனாவில் யார்லுங் சாங்போ (Yarlung Tsangpo) என்ற பெயரில் ஓடும் இந்த நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் வழியாகப் பயணிக்கும் இந்த நதி. பின்னர் வங்கதேசம் வழியாகப் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்த திட்டம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் என்ன?
பிரம்மபுத்திரா நதியில் அணைக் கட்ட சீனா நீண்ட காலமாகவே திட்டமிட்டு வருகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் (XI Jin Ping) 2021-ஆம் ஆண்டு திபெத்துக்கு பயணம் செய்தார். அப்போது இந்த அணை கட்டுவதற்கான தனது யோசனையை முன் வைத்தார்.
இந்த அணை கட்டப்படும் இடம் நிலத்தில் உள்ள மிக ஆழமான மற்றும் நீளமான பள்ளத்தாக்காகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் ஓடும் யார்லுங் சாங்போ (Yarlung Tsangpo) நதி திபெத்தின் நீளமான நதியாகும். இது நம்சா பர்வா (Namcha Barwa) மலையை யு (U) வடிவம் போலச் சுற்றி வரும். அந்தப் பகுதியில் இந்த அணை கட்டப்படுகிறது.
மோடுவோ ஹைட்ரோபவர் ஸ்டேஷன் (Motuo Hydropower Station) என்றும் அழைக்கப்படும் இந்த திட்டம் நிறைவு பெற்றால், சீனாவில் உள்ள மற்றொரு நீர் மின் உற்பத்தி நிலையமான த்ரீ கோர்ஜஸ் (Three Gorges) அணையை பின்னுக்குத் தள்ளுவதோடு, அந்த அணையைவிட மூன்று மடங்கு அதிக மின்சாரத்தை புதிய அணை உற்பத்தி செய்யக்கூடும்.
இந்த அணையின் கட்டுமானத்தை அரசுக்கு சொந்தமான 'சீனா யாஜியாங் குழுமம்' (China Yajiang Group) என்ற புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனம் கண்காணிக்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் 167 பில்லியின் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்டம் குறித்து சீனா கூறுவது என்ன?
இந்த அணையின் மூலம் சீனாவுக்குக் கிடைக்கவிருக்கும் அரசியல் மற்றும் ராணுவ பலத்தைப் பற்றி சீன ஊடகங்கள் பேசவில்லை. மாறாக, இது உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஊடகங்கள் கூறுகின்றன.
"இந்த அணையில் உருவாக்கப்படும் மின்சாரம் திபெத்தில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்" எனச் சீனாவின் அரசு செய்தி நிறுவனம் ஷின்ஹுவா (Xinhua) தெரிவிக்கிறது. அதேசமயம் வணிக மின் உற்பத்தியும் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரத்தின் மீதான தனது சார்பைச் சீனா இதன் மூலம் அதிகரிக்க விரும்புகிறது.
"இந்தியாவும் பிரம்மபுத்திரா நதியில் பல அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. எனவே, சீனாவின் அணைக் கட்டுமான திட்டத்தை எதிர்க்க எந்த நேர்த்தியான காரணமும் இந்தியாவிடம் இல்லை" என குளோபல் டைம்ஸ் (Global Times) என்ற சீன நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஹூ சிஜின் (Hu Xijin) சீன சமூக ஊடகமான Sina Weibo-வில் கூறினார்.
மேலும் அவர், "சீனா இந்த அணையைப் பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்தவோ, அரசியல் அழுத்தமோ கொடுக்காது" என்றும் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கீழ் உள்ள அணையை மூடியதைக் குறிப்பிட்ட அவர், "இந்தியா தண்ணீர் மற்றும் அணை கட்டுப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடின்றி நடந்துகொள்கிறது. ஆனால் அதே இந்தியா, சீனாவின் நடவடிக்கைகளைத் தன் சொந்த நிலைகளில் வைத்துத் தீர்மானிக்கிறது" எனவும் கூறினார்.
திட்டம் குறித்து இந்தியா கூறுவது என்ன?
இந்திய அரசு இந்த திட்டம் குறித்து உடனடி பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், மார்ச் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஹைட்ரோபவர் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கவனமாகக் கண்காணிக்கிறது என்றும், மக்கள் பாதுகாப்புக்காகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு (Pema Khandu), இந்த அணையை "தண்ணீர் குண்டு" என்றும், மாநிலத்தின் பழங்குடியினருக்கும் வாழ்வாதாரத்துக்கும் இருத்தலியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போகிறது என்றும் கூறினார்.
இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரு பதிவில், இந்த அணை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தைச் சீனா முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தது.
இந்திய ஊடகங்களும் இதேபோன்ற கவலைகளை வெளிப்படுத்துகின்றன.
Hindustan Times மற்றும் Dainik Bhaskar போன்ற ஊடகங்கள், இந்த அணை சீனாவுக்கு நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத் தரும் என தெரிவிக்கின்றன.
மேலும், இது அருணாசலப் பிரதேசம் மற்றும் அசாமில் வறட்சி அல்லது வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கலாம். இது இந்தியாவின் நீர் பாதுகாப்பு கொள்கைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கலாம் எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு நிபுணர் பிரம்மா செல்லனி (Brahma Chellaney), சீனா கடந்த 20 ஆண்டுகளாக திபெத்தில் ரகசியமாக அணைகள் கட்டி வருவதாகக் கூறினார். மேலும், இந்த அணை நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் கட்டப்படுவதால், இது மிகவும் ஆபத்தானது என எச்சரித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



