பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

வெண்படை நோய்க்கு காகங்கள் மருந்தா?
படக்குறிப்பு, பொள்ளாச்சி அருகே வேட்டையாடப்பட்ட காகங்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூரில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்த சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தன. இறந்த காகங்களின் சடலங்களை மர்ம நபர்கள் எடுத்துச் செல்வதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே பெரியாகவுண்டனூரில் நாகராஜ் என்பவரது தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார். விவசாயி நாகராஜைக் கண்டதும் அந்த நபர் தப்ப முயற்சித்த நிலையில் அப்பகுதியில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். காகங்களைக் கொன்றவர் சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளியான சூர்யா என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட இறந்த காகங்களையும் பறிமுதல் செய்தனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையின் போது வெண்படை நோயைக் குணப்படுத்தும் மருந்து தயாரிப்பதற்கு காகங்களைக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இறைச்சிக்காகவும் காகங்கள் வேட்டையாடப்பட்டனவா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் நோய்களுக்கான மாற்று மருந்துகள் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

வெண்படை நோய்க்கு காகங்கள் மருந்தா?
படக்குறிப்பு, காகங்களை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட சூர்யா

இத்தகைய கட்டுக்கதைகளில் உண்மையில்லை என்கிறார் சித்த மருத்துவர் ஸ்ரீராம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த காலங்களில் விலங்குகள், பறவைகளை வேட்டையாடி மருந்து தயாரிக்கும் வழக்கம் இருந்துவந்தது. வெண்படை நோய்க்கு காகத்தில் மருந்து இருக்கிறது என்பதைப் போல இருமலுக்கு முள்ளெலியில் மருந்து உள்ளது என்கிற நம்பிக்கையும் இருந்தது.

முள்ளெலி சூரணம் கூட ஒரு காலத்தில் விற்கப்பட்டது. அதற்கு எத்தகைய அறிவியல் பின்புலமும் இருக்காது. வன விலங்கு பாதுகாப்பு சட்டம் வந்து வன சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பிறகு விலங்குகள், பறவைகளை வேட்டையாடுவது குற்றமாக்கப்பட்டது. அதன் பின்னர் இத்தகைய நடைமுறைகள் கனிசமாக குறைந்தன. ஆனால் இன்னும் சில இடங்களில் மக்கள் இது போன்ற நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அறியாமையில் செய்வார்களே தவிர ஏமாற்றும் நோக்கம் என்பது இருக்காது. வெண்படை நோய்க்கு சித்த மருத்துவத்தில் நிருபிக்கப்பட்ட நிறைய மூலிகை மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன. இவை அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் மற்றும் மையங்களில் இலவசமாகவே கிடைக்கின்றன.

சித்த மருத்துவ முறையை ஒழுங்குப்படுத்த தனி கவுன்சில் உள்ளது. மருத்துவர்களுக்கு உரிமம் தேவைப்படுகிறது. மக்கள் நிருபிக்கப்பட்ட முறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். துர்திருஷ்டவசமாக இது போன்ற செய்திகள், காலம் சென்ற பழக்கங்களால் சித்த மருத்துவ முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுகிறது. சித்த மருத்துவ முறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வெண்படை நோய்க்கு காகங்கள் மருந்தா?
படக்குறிப்பு, சித்த மருத்துவர் ஸ்ரீராம்

அரசு என்ன செய்யலாம்?

"விலங்குகள் மற்றும் பறவைகளில் மருத்துவ குணங்கள் இருக்கலாம். ஆனால் அவை முறையாக பரிசோதித்து நிருபிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவை தடை செய்யப்படாதவையாக இருக்க வேண்டும். மருத்துவ நோக்கங்கள் என்பதற்காகவே அவற்றை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு நடக்காத பட்சத்தில் மக்கள் மத்தியில் இத்தகைய நம்பிக்கைகள் இருக்கவே செய்யும். சித்த மருத்துவ முறை பற்றிய தவறான புரிதல்களை தவிர்க்க உரிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

தோல் மருத்துவர் சுபாஷினி பிபிசி தமிழிடம் பேசுகையில், "வெண்படை என்பது எதிர்ப்பு சக்தி குறைபாடு வருகின்றது. இதை ஒரு நோய் எனச் சொல்லிவிட முடியாது. மெலனோசைட்ஸ் என்கிற தோல் உயிரினு தன்னைத்தானே அழித்துக் கொள்வதால் இவை வருகின்றது.

இது ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது இல்லை. அதேசமயம் இது இந்த காரணத்தால் தான் வருகிறது என வரையறுத்துக் கூறி விட முடியாது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு அலோபதியில் பல கட்ட சிகிச்சைகள் உள்ளன. இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பரவும். முதல் தேவை இதன் தீவிரத்தை ஆராய்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் பின்னர் பாதிப்பை முற்றிலுமாக குணப்படுத்த மருந்து, லேசர், சர்ஜரி எனப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களிடம் நோயின் தாக்கத்தைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

வெண்படை நோய்க்கு காகங்கள் மருந்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெண்படை நோயால் பாதிக்கப்பட்ட நபர் (கோப்புப்படம்)

அலோபதி முறை மட்டும்தான் உகந்தது எனக் கூறிவிட முடியாது. அலோபதியில் பரிசோதித்து நிரூபணமான சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. நீண்ட கால பாதிப்பு உள்ளவர்களுக்கு கூட சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பொருந்தாத சிகிச்சைகளை முயற்சித்தால் அதன் பாதிப்பு தீவிரமாகும் அபாயங்களும் உள்ளன. இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்," என்றார்.

கோவை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன், "கோவை மாவட்ட உணவகங்களில் நாங்கள் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்வோம். எங்கள் சோதனைகளின் போது மாமிசம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிற சம்பவங்கள் இது வரை வந்ததில்லை. இந்த சம்பவத்திலும் யாரும் புகார் அளிக்கவில்லை. எனினும் இந்த செய்தி கேள்விப்பட்ட பிறகு பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள பணியாளர்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தினோம். அப்போதும் வேறு எந்த புகார்களும் வரவில்லை. பறவை அல்லது விலங்கு மாமிசத்தை தகாத முறையில் பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றம் தான். இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: