ஊடகங்களில் வெளிவராத வரைபடம்: பாலத்தீனம் தனி நாட்டுடன் 2008-ல் புதிய தீர்வை முன்வைத்த இஸ்ரேலிய பிரதமர்

    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர்

"நான் இப்போது உங்களுக்கு முன்மொழிவதைப் போல, அடுத்த 50 ஆண்டுகளில் எந்தவொரு இஸ்ரேலிய தலைவரும் உங்களுக்கு முன்மொழிவதை நீங்கள் காண முடியாது."

"கையெழுத்திடுங்கள்! கையெழுத்திடுவதன் மூலம் வரலாற்றை மாற்றுவோம்!"

அது 2008ஆம் ஆண்டு.

அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரக்கூடும் என்று தான் நம்பிய ஓர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு பாலத்தீன தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று சாத்தியமற்றதாகத் தோன்றும், இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாக அந்த ஒப்பந்தம் இருந்தது.

அது செயல்படுத்தப்பட்டிருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 94 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளில் ஒரு பாலத்தீன நாடு உருவாகியிருக்கும். ஒல்மெர்ட் வரைந்த அந்த வரைபடம் தற்போது கிட்டத்தட்ட ஒரு கற்பனை நிலையை அடைந்துள்ளது.

அந்த வரைபடம் குறித்துக் கடந்த ஆண்டுகளில் பல்வேறு விளக்கங்கள் வெளியாகியிருந்தாலும், அதை அவர் இப்போது வரை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியதில்லை.

ஆவணப்படத் தயாரிப்பாளர் நார்மா பெர்சியின், சமீபத்திய தொடரான "இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்கள்: அக்டோபர் 7க்கான பாதை" திங்கள்கிழமை முதல் ஐப்ளேயரில் (iPlayer) கிடைக்கிறது.

இதில், 2008 செப்டம்பர் 16ஆம் தேதி ஜெருசலேமில் நடந்த சந்திப்பில் மஹ்மூத் அப்பாஸுக்கு காட்டியதாக அவர் கூறும் வரைபடத்தை ஒல்மெர்ட் முதல் முறையாக வெளிப்படுத்துகிறார்.

"இந்த வரைபடத்தை நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை" என்று அதில் கூறுகிறார்.

மேற்குக் கரையின் 4.9 சதவீத பிரதேசத்தை இஸ்ரேலுடன் இணைக்க ஒல்மெர்ட் முன்மொழிந்த திட்டம் இந்த வரைபடத்தில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 1990களின் இறுதி காலத்திலிருந்து முன்மொழியப்பட்ட முந்தைய திட்டங்களைப் போலவே, ஒல்மெர்ட்டின் திட்டத்திலும் முக்கிய யூதக் குடியேற்றப் பகுதியும் இணைந்திருக்கும்.

அதற்குப் பதிலாக, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியின் ஓரங்களில் உள்ள இஸ்ரேலிய பகுதியை, இஸ்ரேல் விட்டுக்கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட் கூறினார்.

இரண்டு பாலத்தீன பிரதேசங்களும் ஒரு சுரங்கப்பாதை அல்லது நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படும். இதுவும் முன்பே விவாதிக்கப்பட்ட ஒரு யோசனையாகும்.

ஆவணப்படத்தில், இதற்கு பாலத்தீன தலைவர் தெரிவித்த பதிலை நினைவு கூர்ந்தார் ஒல்மெர்ட்.

"பிரதமர் அவர்களே, இது மிகவும் தீவிரமானது. மிக, மிக, மிகத் தீவிரமானது" என்று அந்த பாலத்தீனத் தலைவர் கூறியதை நினைவுகூர்ந்தார் ஒல்மெர்ட்.

முன்மொழிந்த திட்டமும் தீர்வும் என்ன?

முக்கியமாக, ஒல்மெர்ட் முன்மொழிந்த திட்டத்தில் ஜெருசலேமை சுற்றியுள்ள நுணுக்கமான பிரச்னைக்கான ஒரு தீர்வும் அடங்கியிருந்தது.

இரு தரப்பும் நகரத்தின் சில பகுதிகளைத் தங்களது தலைநகரமாக அறிவிக்கக் கூடும்.

அதே நேரத்தில், பழைய நகரம், அதன் புனித தலங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் உட்பட 'புனித பகுதி'யின் நிர்வாகம், இஸ்ரேல், பாலத்தீனம், சௌதி அரேபியா, ஜோர்டான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பொறுப்பாளர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த வரைபடம் யூத குடியேற்றங்களுக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.

மேலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், மேற்குக் கரை மற்றும் ஜோர்டான் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த பல்வேறு குடியிருப்புகள் அகற்றப்பட்டிருக்கும்.

முந்தைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷாரோன், 2005ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான யூத குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது, இஸ்ரேல் வலதுசாரி தரப்பினரால் இதுவொரு தேசியத் துயரமாகக் கருதப்பட்டது.

மேற்குக் கரையின் பெரும்பகுதியை வெளியேற்றுவது மிகவும் கடினமானது மற்றும் சிக்கலானது. பல்லாயிரக்கணக்கான குடியேறிகளை இடம் மாற்றும்போது, வன்முறை அபாயமும் அதிகம்.

ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததால் அப்படியான ஒரு சிக்கல் எழவில்லை.

அவர்களது சந்திப்பின் முடிவில், பாலத்தீன தலைவர் கையெழுத்திடும் வரை வரைபடத்தின் நகலை மஹ்மூத் அப்பாஸிடம் ஒப்படைக்க ஒல்மெர்ட் மறுத்துவிட்டார்.

ஆனால் தனது நிபுணர்களிடம் அந்த வரைபடத்தைக் காட்டி, அதிலுள்ள முன்மொழிவை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி, மஹ்மூத் அப்பாஸ் அதை நிராகரித்துவிட்டார்.

திட்டத்தைத் தொடர முடியாதது ஏன்?

ஆகையால், அடுத்த நாள் வரைபட நிபுணர்களுடன் சந்திக்க இருவரும் ஒப்புக்கொண்டதாக ஒல்மெர்ட் தெரிவித்தார்.

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை முன்னெடுக்கத் தயாராவதைப் போல் உணர்ந்தவாறு, அன்று நாங்கள் பிரிந்தோம்," என்று ஒல்மர்ட் கூறினார்.

ஆனால் அதன் பிறகு வரைபட நிபுணர்களுடனான அந்தச் சந்திப்பு நடக்கவே இல்லை. அன்றிரவு அவர்கள் ஜெருசலேமில் இருந்து புறப்பட்டபோது காரில் இருந்த சூழல் குறித்து அதிபர் மஹ்மூத் அப்பாஸின் தலைமை அதிகாரி ரஃபிக் ஹுசைனி நினைவுகூர்ந்தார்.

"நிச்சயமாக, நாங்கள் சிரித்தோம்," என்று அவர் ஆவணப் படத்தில் கூறுகிறார்.

இந்தத் திட்டம், இனி தொடர முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக பாலத்தீனர்கள் நம்பினர். மறுபுறம், தனக்குத் தொடர்பில்லாத ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருந்ததோடு, தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக ஒல்மெர்ட் அறிவித்திருந்தார்.

தோல்விக்கு என்ன காரணம்?

"ஒல்மெர்ட் எவ்வளவு நல்லவர் என்றாலும், அவர் ஒரு அதிகாரமற்ற தலைவர் என்பதில் சந்தேகமில்லை," என்று கூறிய ஹுசைனி, "அதனால், இந்தத் திட்டத்தை எந்தவிதத்திலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது" என்றும் தெரிவித்தார்.

காஸாவின் சூழலும் சிக்கலாக இருந்தது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருந்து மாதக்கணக்கில் நடந்த ராக்கெட் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டிசம்பர் இறுதியில் ஆபரேஷன் காஸ்ட் லீட் எனப்படும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உத்தரவிட்டார் ஒல்மெர்ட்.

இதன் விளைவாக மூன்று வாரங்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது.

ஆனால், அப்பாஸ் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தால் "மிகவும் புத்திசாலித்தனமான முடிவாக" இருந்திருக்கும் என்கிறார் ஒல்மெர்ட்.

ஏனெனில், எதிர்காலத்தில் எந்தவொரு இஸ்ரேல் பிரதமரும் அதை ரத்து செய்ய முயன்றால், இதன் "தோல்விக்கு இஸ்ரேல்தான் காரணம்" என்று அப்பாஸ் உலகுக்குத் தெரிவித்திருக்கலாம்" என்றும் கூறுகிறார்.

பின்னர், பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் தேர்தல்கள் நடைபெற்றன. பாலத்தீன அரசுரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த லிகுட் கட்சியின் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமரானார். பிறகு, ஒல்மெர்ட்டின் திட்டமும் வரைபடமும் செயல்படுத்தப்படவில்லை.

முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட், அப்பாஸின் பதிலுக்காக இப்போதும் காத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவரது திட்டமும் இஸ்ரேல்-பாலத்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போன பல்வேறு திட்டங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

கடந்த 1973ஆம் ஆண்டில், முன்னாள் இஸ்ரேலிய ராஜதந்திரி அப்பா எபான், "பாலத்தீனர்கள் வாய்ப்புகளைத் தவறவிடுவதில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அதன் பிறகு, இந்தச் சொற்றொடரை இஸ்ரேலிய அதிகாரிகள் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் 1993ஆம் ஆண்டு இரு தரப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து பிரச்னை இன்னும் சிக்கலாக மாறியது.

வெள்ளை மாளிகை தோட்டத்தில் யிட்ஸாக் ரபீன் மற்றும் யாசர் அராஃபத் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியதன் மூலம் தொடங்கிய அமைதி முயற்சி, சில நேரங்களில் உண்மையாகவே நம்பிக்கை அளித்தாலும், அதற்கிடையில் பெரும் துயரங்களும் நிகழ்ந்தன. இறுதியில், அது தோல்வியில்தான் முடிந்தது.

அதற்கான காரணங்கள் மிகவும் சிக்கலானவை என்பதோடு அதற்கான பொறுப்பைப் பல்வேறு தரப்பினரும் ஏற்க வேண்டும். உண்மையில், சூழ்நிலையும் ஒருபோதும் சரியாக அமையவில்லை.

நான், 24 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக அமையாத இந்தச் சூழலை நேரில் கண்டேன். 2001ஆம் ஆண்டு ஜனவரியில், எகிப்திய ஓய்வு நகரமான தபாவில், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் ஓர் ஒப்பந்தத்திற்கான வடிவத்தைக் கண்டறிந்தார்கள்.

பாலத்தீன பிரதிநிதி ஒருவர், ஒரு காகிதத்தில் மேலோட்டமான வரைபடம் ஒன்றை வரைந்து, சாத்தியமான பாலத்தீன அரசின் தோராயமான தோற்றத்தை அவர்கள் முதன்முறையாக பார்ப்பதாக என்னிடம் கூறினார்கள்.

ஆனால் மேற்குக் கரை மற்றும் காஸா தெருக்களில் வன்முறை வெடித்ததால் பேச்சுவார்த்தைகள் பலனற்றதாகி விட்டன. இந்த வன்முறையானது முந்தைய செப்டம்பரில் தொடங்கிய "இன்டிபாடா" எனப்படும் இரண்டாவது பாலத்தீன எழுச்சியின் ஒரு பகுதியாகும்.

மீண்டும், இஸ்ரேல் ஒரு அரசியல் மாற்றத்தின் மையத்தில் இருந்தது. பிரதமர் எகுட் பராக் ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு ஏரியல் ஷாரோன் அவரை எளிதாகத் தோற்கடித்தார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒல்மெர்ட் உருவாக்கிய வரைபடத்தைப் போலவே, காகிதத்தில் வரையப்பட்ட அந்த வரைபடமும், அது என்ன தீர்வை முன்வைத்திருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)