ஜிஎஸ்டி 2.0: கடைகளில் பொருட்களின் விலை குறைந்துள்ளதா? ஆவின் என்ன சொல்கிறது?

ஜிஎஸ்டி 2.0, புதிய ஜிஎஸ்டி அமல், இந்தியா, பொருட்களின் விலை குறைந்துள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் திங்கட்கிழமை முதல் (செப். 22) நடைமுறைக்கு வந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று தெரிவித்தார். புதிய ஜிஎஸ்டியின்படி 375 பொருட்களின் விலை குறையும் என அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, பால் சம்பந்தமான பொருட்கள், பற்பசை, பிரஷ், பல்வேறு வகையான நொறுக்கு தின்பண்டங்கள், பிஸ்கெட், சாக்லேட் போன்றவற்றின் விலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி 2.0 அமலான செப்டம்பர் 22-ஆம் தேதியே விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என பிரதமர் மோதி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.

புதிய ஜிஎஸ்டியின்படி அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதா?

ஜிஎஸ்டி, விலை குறைப்பு , விலை குறைவு, உணவுப்பொருட்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய ஜிஎஸ்டியால் டூத்பேஸ்ட் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டது

புதிய ஜிஎஸ்டியின்படி பால் சார்ந்த பொருட்களின் விலை குறையும் என வணிகர்கள் தெரிவித்திருந்தனர். ஏனெனில், வெண்ணெய், நெய் போன்ற பால் சம்பந்தமான பொருட்களுக்கு முன்பிருந்த 12% ஜிஎஸ்டி தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாலாடைக்கட்டி (பன்னீர்), யுஹெச்டி பாலுக்கு ஜிஎஸ்டி இல்லை என்ற நிலை உள்ளது.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் அமுல் நிறுவனம் 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது. அதேபோன்று, கர்நாடகாவின் பொதுத்துறை பால் நிறுவனமான நந்தினி நிறுவனமும் பால் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்தது.

ஆனால், தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் சார்ந்த பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.

அவர் தன் பதிவில், "ஜி.எஸ்.டி வரி எனப்படுவது பால் பொருள்களின் விலை மீது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையாகும். அந்த வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்கள் வாடிக்கையாளர்களையே சென்றடைய வேண்டும். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவே பொருள்." என தெரிவித்துள்ளார்.

ஆவின் பொருட்களின் விலை குறைப்பு

ஆவின் நிறுவனம்

பட மூலாதாரம், Aavin

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்நிலையில், ஆவின் நிறுவனத்தின் நெய், பன்னீர், யுஹெச்டி பால் ஆகியவற்றின் விலை புதிய ஜிஎஸ்டியுடன் விழாக்கால சலுகையும் சேர்த்து குறைக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆவின் சார்பில் வெளியான அறிவிப்பில் (செப். 19 தேதியிட்ட அறிவிப்பு), "அனைத்து ஆவின் பொருட்களுக்கும் எம்ஆர்பி (பொருளின் மீது விதிக்கப்படும் அதிகபட்ச விலை) விலையை அப்படியே தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஜிஎஸ்டி மாற்றங்களின்படி விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த விலை மாற்றம் செப். 22 முதலே அமலுக்கு வரும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனுடன் விழாக்கால சலுகையாக வெவ்வேறு அளவுடன் கூடிய நெய்க்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பனீர், யுஹெச்டி பாலுக்கும் விழாக்கால சலுகையாக தள்ளுபடியுடன் கூடிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 22 முதல் நவம்பர் 31 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம்

பட மூலாதாரம், Aavin

படக்குறிப்பு, ஆவினில் குறைக்கப்பட்ட நெய்யின் விலை பட்டியல்
ஆவின் நிறுவனம்

பட மூலாதாரம், Aavin

படக்குறிப்பு, ஆவினில் பன்னீர், யுஹெச்டி பாலின் குறைக்கப்பட்ட விலை

ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை என, அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

"ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும்." என அன்புமணி தன் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய ஜிஎஸ்டியின்படி விலை குறைக்கப்படவில்லையா, இந்த விலை தள்ளுபடி விழா காலத்திற்கு மட்டுமானதா என, ஆவின் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபுவிடம் கேட்டோம்.

"ஆவின் நிறுவனத்தில் எல்லா பொருட்களும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் விலை மிக குறைவாகவே உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள விலை பட்டியல், தற்போதைய புதிய ஜிஎஸ்டியுடன் விழா கால தள்ளுபடியையும் சேர்த்தே திருத்தப்பட்டுள்ளது. விழா காலம் முடிந்தும் அந்த தள்ளுபடி தொடருமா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்." என்றார். பாலுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி இல்லை என்றும் தெரிவித்தார்.

மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதா?

ஜிஎஸ்டி, விலை குறைப்பு , விலை குறைவு, உணவுப்பொருட்கள்

பட மூலாதாரம், Getty Images

பால் பொருட்கள் தவிர, ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம் ஆகிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், புஜியா கலவை, மிக்சர் போன்ற நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள், கிளீனிக்கல் டயபர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% முதல் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதா என்பதை சென்னையில் உள்ள சில சிறிய கடைகளில் விசாரித்தோம். பல சிறிய கடைகளில் விலை குறைப்பு அமலாகவில்லை, பழைய விலைகளிலேயே பெரும்பாலான பொருட்கள் விற்கப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, "அக்டோபர் 1 முதல் இந்த விலை குறைப்பு அமலாகலாம். இதுவரை திருத்தப்பட்ட விலையுடன் கூடிய சரக்குகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சில நிறுவனங்கள் பொருட்களின் அளவை உயர்த்தி, விலையை அப்படியே வைத்திருப்பதற்கும் முயற்சிகள் எடுக்கின்றன. எதுவாக இருந்தாலும் அக்டோபர் 1 முதலே தெரியவரும்" என்றார்.

ஆனால், சில பல்பொருள் அங்காடிகளில் திருத்தப்பட்ட விலையை கணினிகளில் பதிவேற்றியுள்ளதாகவும், பொருட்களின் விலை பேக்கேஜில் மாறவில்லையென்றாலும் பில் செய்யப்படும் போது புதிய ஜிஎஸ்டியின்படி குறைக்கப்பட்ட விலையே வசூலிக்கப்படுவதாகவும் கூறினர்

சென்னையைச் சேர்ந்த பல்பொருள் அங்காடி ஒன்றின் நிர்வாகத்திடம் பேசுகையில், "புதிய ஜிஎஸ்டி குறைப்புக்கு ஏற்பவே பில் செய்யப்படுகிறது. ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பால் சம்பந்தமான பொருட்கள், பற்பசை எனப் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது." எனத் தெரிவித்தார்.

"உதாரணத்திற்கு 100 ரூபாய் விலையுள்ள ஒரு பற்பசையின் விலை 13 ரூபாய் குறைந்துள்ளது, ஐஸ்க்ரீம், பிஸ்கெட் போன்றவற்றுக்கு 7-8 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஷாம்பூ 200 ரூபாய் என்றால், 25 ரூபாய் வரை குறைந்துள்ளது" என்று வணிகர்கள் தெரிவித்தனர்.

சிறுகடைகளில் பொருட்களின் விலை எப்போது குறையும்?

விக்கிரமராஜா

பட மூலாதாரம், Vikramaraja

படக்குறிப்பு, ஒரு வாரத்திற்குள் சிறிய கடைகளில் விலை குறைப்பு அமலாகும் என்றார், விக்கிரமராஜா

சிறிய கடைகளில் விலை குறைப்பு அமலாவதில் ஏன் தாமதம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டோம்.

"ஒரு வாரத்திற்குள் சிறிய கடைகளிலும் விலை குறைப்பு அமலாகிவிடும். சில நிறுவனங்கள் பொருளின் அளவை கூட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கின்றன. சிறிய கடைகளில் விலையை கணினியில் பதிவிடுவதற்கான வசதி இல்லை, எனவே பொருட்களில் திருத்தப்பட்ட விலை குறித்து ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடைபெறுகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு