You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியைவிட இரண்டு மடங்கு நிலத்தை கொண்டுள்ள வக்ஃப் – எங்கே, எவ்வளவு சொத்துகள் உள்ளன?
- எழுதியவர், சையத் மோசிஸ் இமாம்
- பதவி, பிபிசி
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வக்ஃப் திருத்த மசோதா தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின்படி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியவர் மற்றும் தானமாக வழங்கப்படும் சொத்தின் உரிமையுடையவர் மட்டுமே அந்த சொத்தை வக்ஃப்-க்கு தானமாக வழங்க முடியும்.
மேலும், சொத்துக்கள் குறித்து சர்வே செய்யும் அதிகாரம் வக்ஃப் ஆணையரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள வக்ஃப் சொத்து தொடர்பான தகராறுகளில் மாவட்ட ஆட்சியரின் முடிவு இறுதியானதாகக் கருதப்படும். இந்த மசோதாவின் கீழ், வக்ஃப் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இறுதியானதாகக் கருதப்படாது.
எதிர்வினை என்ன?
இந்த மசோதாவுக்கு இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
"இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இன்று இஸ்லாமியர்கள் இலக்காக உள்ளனர், நாளை வேறு சில சமூகத்தினர் இலக்காகலாம்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸில் பதிவிட்டார்.
வக்ஃப் திருத்த மசோதா குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புஜல் அகமது அயூபி, "வக்ஃப் நிலம் அரசாங்கத்தின் சொத்தல்ல. மாறாக, அது மக்கள் தங்கள் சொந்த சொத்திலிருந்து தானமாக வழங்கிய நிலம். ஆனால், அரசு நிலத்தை வக்ஃப் ஆக்கிரமித்துள்ளது போல் அரசு சித்தரிக்கிறது" என்றார்.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டி, "இந்தச் சட்டம் இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமைகள் மற்றும் சொத்துக்களில் தலையிடும் என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்தும் நோக்கில் அவர்களை பயமுறுத்தும் ஒரு சதி இது" என்று கூறினார்.
வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலம் உள்ளது?
அரசாங்கத் தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வேவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக நிலங்களை கொண்டதாக வக்ஃப் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்திடம் 17.95 லட்சம் ஏக்கர் நிலமும், ரயில்வேயிடம் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலமும் உள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2009இல் வம்சி தளத்தை உருவாக்கியது. இந்த தளம் வக்ஃப் சொத்துகளுக்கான தரவுத்தொகுப்பாக செயல்பட்டு வருகிறது.
அரசாங்கத் தகவலின்படி, வக்ஃப் வாரியத்துக்கு 9.4 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலப்பரப்பளவு, சில யூனியன் பிரதேசங்களின் மொத்த பரப்பளவைக் கூட மிஞ்சுகிறது.
எடுத்துக்காட்டாக, கோவாவின் மொத்த பரப்பளவு 9.14 லட்சம் ஏக்கராக உள்ளது(3702 சதுர கிலோமீட்டர்). டெல்லியின் மொத்த பரப்பளவு 3.66 லட்சம் ஏக்கராக உள்ளது. (1484 சதுர கி.மீ).
தாத்ரா- நாகர் ஹவேலி யூனியன் பிரதேசம் 1.21 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
அதே நேரத்தில் சண்டிகரின் பரப்பளவு தோராயமாக 28,000 ஏக்கர் ஆகும்.
ஷியா மதத் தலைவர் கல்பே ஜவாத்தின் கூற்றுப்படி, வக்ஃப் சொத்து யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. மேலும், இது ஏன் மற்ற இடங்களில் பொருந்தவில்லை என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"பல கோயில்களில் தங்கத்தின் இருப்பு உள்ளது. இந்தத் தங்கம் ரிசர்வ் வங்கிக்குச் சென்றால், டாலரின் மதிப்பு ரூபாய்க்கு சமமாகிவிடும். அரசாங்கத்தால் அப்படிச் செய்ய முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் கல்பே ஜவாத்.
எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வக்ஃப் சொத்துக்கள் உள்ளன?
வம்சி தளத்தின்படி, வக்ஃபின் 8,72,324 அசையா சொத்துக்களும் 16,713 அசையும் சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில், 97 சதவீத சொத்துக்கள் 15 மாநிலங்களில் மட்டுமே உள்ளன.
வம்சி போர்ட்டலின்படி, 58,890 சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,36,179 சொத்துகள் பற்றிய தகவல், அத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை.
அதே நேரத்தில், 13,000-க்கும் மேற்பட்ட சொத்துகள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தளத்தின்படி, மொத்த வக்ஃப் சொத்துக்களில் 39 சதவீதம் மட்டுமே எந்த சர்ச்சையும் இல்லாமல் உள்ளன.
டெல்லியில், சுமார் 123 வக்ஃப் சொத்துக்கள் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டன. அவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் வக்ஃப்பிடம் திருப்பித் தரப்பட்டன. இது தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், பிப்ரவரி 9, 2022 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் சுமார் 2 லட்சம் சொத்துக்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 60,223 வக்ஃப் சொத்துக்களும், மேற்கு வங்கத்தில் சுமார் 80,480 சொத்துக்களும், ஆந்திராவில் 10,708 மற்றும் குஜராத்தில் 30,881 சொத்துக்களும் உள்ளன. பிகாரில் தோராயமாக 8,600 சொத்துக்கள் உள்ளன.
இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் 2025 இல் அதிகரித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் இப்போது 2,32,000 வக்ஃப் சொத்துக்கள் உள்ளன.
தற்போதைய தரவுகளின்படி, அதிகபட்ச வக்ஃப் சொத்துக்கள் கல்லறைகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வக்ஃப் நிலம் தொடர்பான பிரச்னையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "1913 முதல் 2013 வரை வக்ஃப் வாரியத்தின் மொத்த நிலம் 18 லட்சம் ஏக்கராக இருந்தது. 2013 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் 21 லட்ச ஏக்கர் நிலம் அதிகரித்தது. மொத்தமாக இந்த 39 லட்சம் ஏக்கர் நிலத்தில், 21 லட்சம் ஏக்கர் நிலம் 2013க்குப் பிறகு சேர்க்கப்பட்டது. குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள் 20,000 இருந்தன. ஆனால் பதிவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் அவை பூஜ்ஜியமாகிவிட்டன. இந்த சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன" என்றார்.
வக்ஃப் என்றால் என்ன?
வக்ஃப் சட்டத்தில் இரண்டு வகையான சொத்துகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் வகை வக்ஃப் அல்லாவின் பெயரால், அதாவது அல்லாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் எந்த வாரிசுரிமையும் இல்லாத சொத்து.
இரண்டாவது வகை வக்ஃப் 'அலால் அவுலாத்' -அதாவது வாரிசுகளால் பராமரிக்கப்படும் வக்ஃப் சொத்து.
இந்த இரண்டாவது வகை வக்ஃப்பைச் சுற்றி புதிய மசோதாவில் குறிப்பிட்ட அம்சம் செய்யப்பட்டுள்ளன.
இதில் பெண்களின் வாரிசுரிமை பறிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக வழங்கப்படும் சொத்து வக்ஃப்பின் கணக்கில் வந்தவுடன், மாவட்ட ஆட்சியரால் அதை கணவரை இழந்த பெண் அல்லது பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நலனுக்காக பயன்படுத்த இயலும்.
வக்ஃப் நல மன்றத் தலைவர் ஜாவேத் அகமது, "வக்ஃப் என்பது ஒரு அரபு சொல், அதற்கான பொருள் 'தங்குதல்' என்பதாகும். ஒரு சொத்து அல்லாவின் பெயரால் வக்ஃப் செய்யப்படும்போது, அது நிரந்தரமாக அல்லாவின் சொத்தாக மாறுகிறது. அதன் பிறகு அதில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது." என்றார்.
இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா முஃப்தி ஷஹாபுத்தீன் ரச்வி பரேல்வி, "இந்தத் திருத்தத்தின் மூலம் வக்ஃப் வாரிய சொத்துகள் தொடர்பான தன்னிச்சையான போக்கை மத்திய அரசு கட்டுப்படுத்தும். இது நில மாஃபியாக்களுடன் சேர்ந்து வக்ஃப் சொத்துகளை விற்பனை செய்வதையும், குத்தகைக்கு விடுவதையும் உள்ளடக்கிய வணிக நடவடிக்கைகளைத் தடுக்க உதவும்."என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு