வருமான வரி முதல் யுபிஐ சேவை வரை - ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய 6 மாற்றங்கள்

இன்று 2024-25 நிதியாண்டின் கடைசி நாள். புதிய நிதியாண்டு 2025-26 ஏப்ரல் 1ம் தேதியான நாளை தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வரும் நாள் என்பதால் இந்த நாள் மிக முக்கியானது.

2025-26 நிதியாண்டில் வருமானவரி குறித்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட வரம்புக்குள் சம்பளம் பெறுபவர்களின் வருமான வரி குறையும். யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. ஓய்வூதியத் திட்டங்களிலும் மாற்றம் இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வரிசெலுத்துவோர், மூத்த குடிமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் செய்வோரும் இந்த மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 1 2025 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து காணலாம்.

வருமான வரிக்கான வரம்புகள் மாற்றியமைப்பு

புதிய வருமான வரி முறையில், வருமான வரிக்கான வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன.

இந்த புதிய வருமானவரி வரம்புகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி 12 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்தத்தேவையில்லை.

இது தவிர சம்பளதாரர்களுக்கு நிலையான கழிவாக 75 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதால் 12.75 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

வருமான வரி உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டதோடு, வருமான வரம்பு அடுக்குகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச இருப்பு

ஏப்ரல் 1 முதல் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச பண இருப்புக்கான (Minimum Balance) விதிகள் மாற்றப்படுகின்றன. எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் இந்த மாற்றத்தை அமல்படுத்துகின்றன. குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கு இருக்கும் கிளை நகர்ப்பகுதியா, ஊரகப் பகுதியாக என்பதைப் பொறுத்து குறைந்த பட்ச இருப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இது மட்டுமின்றி இன்னும் ஒரு மாதத்திற்குப் பின்னர் அதாவது மே 1 -ஆம் தேதி முதல் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது.

உங்களின் வங்கிக்கணக்கு உள்ள ஏடிஎம்-க்கு பதிலாக வேறு வங்கியின் ஏடிஎம்மை ஒரு மாதத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தலாம் என்ற எண்ணிக்கை கட்டுப்பாடு குறைக்கப்பட உள்ளது. இத்தோடு மாற்று வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்துவதற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளது.

இதன்படி மாற்று வங்கியின் ஏடிஎம்மிலிருந்து மாதத்திற்கு 3 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். இதன் பின்னர் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் 20 முதல் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி விதிகள்

ஜிஎஸ்டிக்கான புதிய விதிகளும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. ஜிஎஸ்டி இணையதளத்தில் பல்லடுக்கு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வரிசெலுத்துவோருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

இ-வே பில்களை ஜெனரேட் செய்ய வழங்கப்படும் அடிப்படை ஆவணங்கள் 180 நாட்களுக்கு மேல் பழையதாக இருக்கக் கூடாது.

TDS பிடித்தத்திற்கான ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தை நிரப்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.

இது தவிர வணிக நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஜிஎஸ்டி சென்டருக்கு சென்று பயோமெட்ரிக் மூலம் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள்

2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) மத்திய அரசு அறிவித்தது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன்பெற உள்ளனர்.

இதன் மூலம் 25 ஆண்டு மத்திய அரசுப் பணியில் இருந்தவர்கள், அவர்களின் பணிக்காலத்தின் கடைசி 12 மாத அடிப்படை ஊதியத்தின் 50 சதவிகிதத் தொகையை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.

இது பணி ஓய்வுக்குப் பின்னரும் அவர்களின் நிதிப்பாதுகாப்பை உறுதி செய்கிறது.

பாதுகாப்பாக மாறும் யுபிஐ பரிவர்த்தனைகள்

தினந்தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடைபெறும் யுபிஐ இந்திய மக்களிடம் பிரபலமடைந்துள்ளது. ஆனால், பல மக்கள் தங்கள் வங்கிக்கணக்கை யுபிஐ-ல் இணைத்த பின்னர் தங்கள் செல்போன் எண்ணை பயன்படுத்துவதை கைவிட்டு விடுகின்றனர். இது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம்.

இதனால் சில மாற்றங்களை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இதுவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, உங்களின் மொபைல் எண்ணானது யுபிஐ உடன் இணைக்கப்பட்டு, நீண்டநாட்களாக அந்த எண்ணை பயன்படுத்தாமலோ ரீச்சார்ஜ் செய்யாமலோ இருந்தால் வங்கிக்குச் சென்று உங்களின் எண்ணை உறுதி செய்து கொள்ளுங்கள். தவறினால் உங்களின் யுபிஐ ஐடி முடக்கப்படலாம்.

தொடர்ந்து பயன்படுத்தப்படாத மொபைல் எண்களை முடக்க வங்கிகளும் , போன்பே, கூகுள்பே போன்ற யுபிஐ நிறுவனங்களும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி 90 நாட்கள் ஒரு தொலைபேசி எண் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இந்த எண் வேறு நபருக்கு வழங்கப்படும். அதாவது 3 மாதங்களுக்கு மேல் ரீச்சார்ஜ் செய்யாமல் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையசேவை ரத்து செய்யப்பட்டிருந்தால் இந்த எண் புதிய நபருக்கு வழங்கப்படும்.

இந்த எண் யுபிஐ உடன் இணைக்கப்பட்டிருந்தால் ஓடிபி , வெரிஃபிகேஷன் என அனைத்தும் இந்த எண்ணை பயன்படுத்தி செய்யப்படும் என்பதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும். எனவே இந்த எண்களுக்கான யுபிஐ சேவையையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செபியின் விதிகளும் மாற்றம்

ஏப்ரல் 1ம் தேதி முதல் சிறப்பு முதலீட்டு நிதியம் (Special Investment Fund) என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக செபி கூறியுள்ளது. இது மியூச்சுவல் ஃபண்டு மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட் சர்வீஸ்க்கு இடைப்பட்டதாக உள்ளது. இதனை பயன்படுத்த குறைந்த பட்சம் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை மேலாண்மை செய்துள்ள அனுபவம் பெற்ற நிறுவனங்கள் இந்த SIF திட்டத்தை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.

சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (AMC) புதிய நிதிச் சலுகை (NFO) மூலம் பெறப்படும் பணத்தை 30 நாட்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் முதலீட்டாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் தங்கள் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக இந்த அவகாசம் 60 நாட்களாக இருந்தது.

இது மட்டுமின்றி சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வெகுமதி புள்ளிகள் (Reward Points) அளிப்பதிலும் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகின்றன.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு