You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம்
- எழுதியவர், ஜார்ஜ் டோர், ஆண்டி ட்விக்கி
- பதவி, பிபிசி
"ஆம் நாங்களும் மனிதர்கள்தான் சமைக்கும் போது, இனிப்பு, உப்பு போன்ற சுவைகளை உண்ண நாங்கள் தூண்டப்படலாம்" என்கிறார் சமையல் கலைஞர் முகமது சபீக்.
ரமலானின் போது தங்கள் சுய கட்டுப்பாட்டையும், தங்களைவிட கீழான நிலையில் இருப்பவர்களுக்கு இரக்கம் காட்டுவதற்கும் நோன்பு இருக்கின்றனர். பகல் வெளிச்சம் இருக்கும் நேரத்தில் எந்த உணவோ,பானமோ அருந்தக் கூடாது.
ஆனால் பிரிட்டனின் டெர்பியை சேர்ந்த சபீக்கிற்கு புனித மாதத்தின்போது சமையல் கலைஞராக பணியற்றுவது அந்த பக்தியை மேலும் அதிக அளவு சோதிக்கிறது.''
"அது கடினமானதாக மாறலாம், ஆனால் நீங்கள் தொடர்ந்து பணியாற்றி அதை உங்கள் மனதிலிருந்து அகற்றவேண்டும்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
48 வயதான அவர் , சமையல் சேவைகள் வழங்கும் குர்பான் ஆண்ட் சன் என்ற குடும்ப தொழிலில் சுமார் ஐந்து வருடமாக பணியாற்றி வருகிறார்.
ரமலான் மாதத்தின் போது அவர் ஆயிரக்கணக்கானோருக்கு உணவுகளை சமைத்துவந்திருக்கிறார். இவற்றில் பல, நோன்பு திறக்கும் மக்கள் உட்கொள்ளும் முதல் உணவாக இருக்கும்.
ஒரு சராசரி நாளில் 150 முதல் 300 பேருக்கு உணவு தயாரிப்பதாக அவர் தெரிவித்தார், ஆனால் ரமலானின் போது அது மிக அதிகமாக இருக்குமென கூறுகிறார்.
மெயின் கோர்ஸ் என சொல்லப்பட்டும் முக்கிய உணவை தயாரிக்க தொடங்கும் முன் ஸ்டாட்டர்கள் எனப்படும் தொடக்க உணவுகளை ஜிஎம்டி 09:30 மணிக்கு தயாரிக்க தொடங்குவதாக சபீக் தெரிவித்தார்.
உணவை வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை காரணமாக, 15:00 மணிக்கே வளாகம் முழுவதும் மக்களால் நிரம்பிவிடும் என்றும் சிலர் தங்கள் அண்டை வீட்டாருக்கும் வழங்குவதற்காக உணவுகளை ஆர்டர் செய்வார்கள் எனவும் கூறுகிறார்,
எல்லா சிறந்த சமையல் கலைஞர்களும் தங்கள் உணவை சுவைத்துப் பார்ப்பார்கள், தனது மனதிலும் சலனம் இருக்கும் என்கிறார் முகமது.
"ஆம் நாங்களும் மனிதர்கள்தான், உப்பு ,இனிப்பு மற்றும் பிற சுவைகளுக்காக ஏங்குவோம்," என்கிறார் அவர்.
"ஆனால் எப்போது எச்சரிக்கையாக இருப்பதால் கடவுள் மீதான எங்கள் பக்தி, பிறரைவிட கொஞ்சம் அதிகமாகிறது. எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
"அது சமாளிப்பதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கவேண்டும்."
ரமலானில் பங்கேற்கும் இஸ்லாமியர்கள் பகல் வெளிச்சம் இருக்கும் நேரத்தில் உணவு உட்கொள்ளாமல்,பானம் அருந்தாமல் இருந்தாலும் உணவு தயாரிக்கும் தொழில் எப்போதையும் விட அதிகமாக உழைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு காரணம் நோன்பு திறக்கும் போது தினமும் உட்கொள்ளப்படும் இஃப்தார்தான் காரணம்.
பாரம்பரியமாக சூரிய அஸ்தமானத்தின் போது குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாக இணைந்து உணவை பகிர்வதன் மூலம் பந்தத்தை வலுப்படுத்தி நோன்பு திறப்பார்கள். இதில் சபீக்கும் அவரது பணியாளர்களும் பங்கேற்கின்றனர்.
"எல்லோருக்கும் உணவு கொடுத்தபின், கடையில் அமைதி நிலவும் போதுதான் நாங்கள் ஒன்றாக அனைத்து பணியாளர்களுடன் சேர்ந்து நோன்பு திறப்போம்," என்றார் அவர்.
"அது நல்லது. ஆனால் அந்த நேரத்தில் உங்களால் அதிகம் உணவு உட்கொள்ள முடியாது, நீங்கள் நோன்பை முறித்து ஒரு பானத்தை அருந்திவிட்டு அடுத்த வாடிக்கையாளரை கவனிக்கச் செல்லவேண்டும் ஏனென்றால் அவர்கள் வருவது நிற்காது.''
"சிறிது உணவு உட்கொண்டுவிட்டு பணியை தொடர சென்றுவிடுவோம், பின்னர் தொழுகை முடிந்தபின்னர் கொஞ்சம் உட்கொள்வோம். இது உங்கள் கடவுளிடம் உங்களுக்கிருக்கும் நேர்மையை மதிப்பீடு செய்வதற்கு ஒரு முறை. எனவே இது உணவை உட்கொள்ளாமல் இருப்பது மட்டுமல்ல, இது உங்களை உருவாக்கியவரோடு உங்கள் தொடர்பை மேலும்கொஞ்சம் வலுப்படுத்துகிறது."
ரமலான் ஞாயிறன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு