69 பேர் உயிரிழப்பு: பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் போது என்ன நடந்தது?
பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை 6.9 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவானது.
32 லட்சம் மக்கள் வசிக்கும் செபு தீவின் வடக்கு முனையில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் குறைந்தது 69 பேர் இறந்திருக்கக் கூடும் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை மிகவும் அசாதாரணமாக உள்ளதாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ கூறினார்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது செபுவில் இருந்த மக்கள் தெருக்களில் ஒன்றுகூடினர். பண்டாயன் தீவில் ஒரு சர்ச்சின் மணிக்கூண்டு சரிந்து கீழே விழுந்தது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
மின்சார இணைப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கூடுதல் பணியாளர்கள் அனுப்பப்படுவதாகவும் மார்கோஸ் கூறியுள்ளார்.
செபு தீவில் உள்ள போகோ நகரில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவமனைக்கு வெளியே திறந்த வெளியில் சிகிச்சையளிக்கப்பட்டது.
செபுவில் நடைபெற்ற மிஸ் ஆசியா பசிபிக் சர்வதேச அழகுப் போட்டி அரங்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பாரம்பரிய பிலிப்பைன்ஸ் ஆடைகளுடன் போட்டியாளர்கள் மேடையிலிருந்து வேகமாக இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
வணிக வளாக உணவகம் ஒன்றில் மக்கள் நாற்காலிகளுக்கு கீழ் தஞ்சமடைந்து, கடவுளிடம் வேண்டும் தருணத்தை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



