'டீக்கடையில் பேசும்போது பில்லை வெளியிடுவேன்' - ஓயாத ரஃபால் வாட்ச் சர்ச்சை

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலையின் ரஃபால் கடிகாரம் குறித்த சர்ச்சை ஓய்வதாக இல்லை. மாநில அமைச்சர் சினிமா வசனம் மூலம் கிண்டலடிக்கிறார்; காங்கிரஸ் தலைவர் இதுதான் இப்போது பிரச்னையா என்கிறார்.

இந்த விவகாரத்தை வைத்தே 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறப் போவதாகச் சொல்கிறார் அண்ணாமலை.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலையின் ரஃபால் கைக்கடிகாரம் குறித்த சர்ச்சை இப்போதைக்கு ஓய்வதாக இல்லை. அவரது கைக்கடிகாரம் குறித்து தி.மு.க. தரப்பு கேள்விகளுக்குப் பதிலளித்த அண்ணாமலை, விரைவில் தி.மு.க. தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், தி.மு.க. தரப்பு தொடர்ந்து அவர் கடிகாரம் வாங்கிய ரசீது குறித்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே தீவிரம் காட்டிவருகிறார் தமிழ்நாடு மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த விவகாரம் குறித்து நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்ட செந்தில் பாலாஜி, 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் நகைச்சுவை வசனத்தை முன்னிறுத்தி, கேள்வியெழுப்பியிருக்கிறார்.

"பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்… மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்… கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.கவினரின் ஊழல் குறித்து புகார் அளிக்க தனி ஆப் ஒன்றும் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் ஒன்றும் அறிவிக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், இது தொடர்பாகத் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வரும் தி.மு.கவினர் #RafalewatchScam என்ற ஹாஷ்டாக்கை சிறிது நேரத்திற்கு ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹாஷ்டாகின் கீழ் பெரும்பாலும் வசவுச் சொற்கள், கேலிச் சொற்களுடன் கூடிய ட்வீட்களே பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், தி.மு.கவினர் முன்னெடுத்திருக்கும் இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் பங்கெடுக்கவில்லை. இது தொடர்பாகப் பேசியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, "அண்ணாமலை எந்த வாட்சை கட்டினாலும் அதனால், தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?

எதற்காக இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்? அவரும் உண்மையைச் சொல்லிவிட்டுப் போகலாம். ரஃபால் நிறுவனம் கொடுத்திருந்தால், கொடுத்திருந்ததாகச் சொல்லலாம். இதை விவாதப் பொருளாக ஆக்குவது நல்லதல்ல," என்றார்.

இந்த விவகாரம் குறித்து இன்றும் பேசிய அண்ணாமலை, என்றைக்கு இந்த வாட்ச் குறித்து டீக்கடையில் பேசுகிறார்களோ அன்றைக்கு பில்லை வெளியிடுவேன் என்று சொல்லியிருக்கிறார்.

கோயம்புத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க சார்பில், 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய அண்ணாமலை, "ரஃபால் கைக்கடிகாரத்திற்கான பில்லை பிப்ரவரியில் கொடுப்பீர்களா, இல்லை ஏப்ரலில் கொடுப்பீர்களா என்று கேட்டார்கள்.

வாட்ச் பில் என்னிடம்தான் இருக்கிறது. என்றைக்கு இந்த வாட்ச் குறித்து, டீக்கடையில் பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன். கருணாநிதி இருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்திருக்க மாட்டார்.

இவர்கள் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களப்பணியோடு இந்த ரஃபால் வாட்ச்சும் பெரிய பங்காற்றும். வாட்ச் பில் வெளியிடப்படும் தினத்தன்று ஓர் இணையதளம் தொடங்கவுள்ளோம். அதில் கோபாலபுரம் குடும்பம், அனைத்து அமைச்சர்களின் ஊழல்கள், சொத்துகள், பினாமி விவரங்களை பொதுமக்கள் அப்லோட் செய்யலாம்.

இதைப் பேசக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். வேறு யாரும் பேச முடியாது. 2024 தேர்தலில் 25 எம்.பி-க்களை பெற்று, தி.மு.க-வுக்கு முடிவுரை எழுதுவோம்," என்று கூறியுள்ளார்.

தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு தரப்புமே இப்போதைக்கு இந்த கடிகார விவகாரத்தை விடுவதாக இல்லை. பா.ஜ.க. நினைப்பதைப் போல, இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களைப் பிடிக்க முடியுமோ இல்லையோ, ஆனால் தொடர்ந்து செய்திகளில் இருந்து வருகிறது அக்கட்சி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: