இஸ்ரேலை காக்க அமெரிக்காவுடன் இணையும் சௌதி, ஜோர்டான்: இரானுக்கு எதிராக புதிய ராணுவ கூட்டணி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலை காக்க அமெரிக்காவுடன் இணையும் சௌதி, ஜோர்டான்: இரானுக்கு எதிராக புதிய ராணுவ கூட்டணி
இஸ்ரேலை காக்க அமெரிக்காவுடன் இணையும் சௌதி, ஜோர்டான்: இரானுக்கு எதிராக புதிய ராணுவ கூட்டணி

மத்திய கிழக்கில் இருந்து வரும் அனைத்து செய்திகளும் உலகம் முழுவதும் வேகமாக பரவி விடுகின்றன. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடத்தப்பட்ட முன்னறிவிப்பு இல்லாத ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பற்றிய செய்திகள் வெளி வந்து பேசப்படுவதற்குள் அடுத்த கணம் காஸாவில் நிகழும் தாக்குதல்களை பற்றி தலைப்பு செய்திகள் வந்துவிடுகிறது.

ஆனால் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் இரண்டு பழைய எதிரி நாடுகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட அசாதாரண மோதலை பற்றி இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த தாக்குதல், ஒரு பேரழிவு தரும் சர்வதேச மோதலைத் தூண்டும் நிலை இருந்ததால் அது விவாதிக்கக் கூடியதாக இருந்தது.

இரானும் இஸ்ரேலும் நேருக்கு நேர் தாக்கிக் கொள்வது இதுவே முதல் முறை. சில ஆய்வாளர்கள் இரானிய தாக்குதலானது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் என்று கூறுகின்றனர் - அதாவது, யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் எல்லாவற்றையும் விட பெரியது. 1991 இல் சதாம் ஹுசைனின் ஸ்கட் ஏவுகணைகளுக்குப் பிறகு இது நிச்சயமாக இஸ்ரேல் மீதான முதல் வெளிப்படையான தாக்குதல் ஆகும்.

300-க்கும் மேற்பட்ட இரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வழியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன அல்லது செயலிழந்தன. ஆனால் ஜெருசலேமில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இருந்து இரவு வானம் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு நடவடிக்கையில் திடீரென ஒளிர்வதை நான் பார்த்தேன். அது, மேலே பறந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதன் பிரதிபலிப்பு. ஒருவேளை ஜிபிஎஸ் வழிகாட்டுதல் அமைப்பு செயலிழந்து, ஏவுகணை நகர்ப்புறத்தில் தரையிறங்கி இருந்தால் பொதுமக்கள் பலரின் உயிரை எடுத்திருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)