You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிஆர்எஃப்: அனந்த்நாக் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தீவிரவாத அமைப்பு வளர்ந்தது எப்படி?
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி உருது செய்தியாளர், ஸ்ரீநகரில் இருந்து
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான கோகர்நாக்கில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஒரு கர்னல், ஒரு மேஜர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் டிஎஸ்பி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (டிஆர்எஃப்) என்ற சட்டவிரோத ஆயுதக் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்திய ராணுவம் அனந்த்நாக்கில் புதன்கிழமையன்று கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த நடவடிக்கையின்போது, இந்திய ராணுவத்தின் கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோன்சக் ஆகியோருடன் காஷ்மீர் காவல் துறையின் டிஎஸ்பி ஹுமாயுன் முசம்மில் பட்டும் கொல்லப்பட்டார்.
கோகர்நாக்கின் கடோல் கிராமத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, பெரிய அளவிலான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், இதன்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவி பெறப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின்போது "டிஆர்எஃப் அமைப்பைச் சேர்ந்த உஃசைர் கான் உட்பட இரண்டு தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்" என்று ராணுவமும். உள்ளூர் காவல்துறையும் கூறியுள்ளது.
உஃசைர் கான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமறைவாகி டிஆர்எஃப்பில் சேர்ந்தார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
தீவிரவாத சம்பவங்கள்
ஜம்முவின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக ஆயுதம் ஏந்திய தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
செவ்வாயன்று, ரஜோரியின் நார்லா கிராமத்தில் நடந்த என்கவுன்டரின்போது ரவிகுமார் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அதே நேரத்தில் இரண்டு தீவிரவாதிகளும் இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான மக்கள் ஃபாஸிச எதிர்ப்புப் படை (PAFF) இதன் பின்னணியில் இருந்தது என்று ரஜோரியில் நடந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் கூறியிருந்தது.
டிஆர்எஃப் மற்றும் பிஏஎஃப்எஃப் என்றால் என்ன?
ஜம்மு -காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு மாநில அந்தஸ்தை கடந்த 2019 ஆகஸ்டில் இந்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இந்த மாநிலம் ஜம்மு, காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
அதுவரை ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் செயல்பட்டு வந்தன.
கடந்த 2019 முதல், டிஆர்எஃப் மற்றும் பிஏஎஃப்எஃப் போன்ற அமைப்புகள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கத் தொடங்கின.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் டிஆர்எஃப் அமைப்பும், ஜம்முவின் ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகியவற்றில் பிஏஎஃப்எஃப் அமைப்பும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று காவல்துறை கூறுகிறது.
2023 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை அமைச்சகம், ”டிஆர்எஃப் மற்றும் பிஏஎஃப்எஃப் ஆகியவை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான யுஏபிஏ இன் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடத்தல் மற்றும் பிற வன்முறை சம்பவங்களில் அவை ஈடுபட்டுள்ளன," என்று கூறியிருந்தது..
கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பொறுப்புக்கூறல் அமைப்பான நிதி நடவடிக்கை பணிக் குழு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது; கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயமும் அதற்கு உள்ளது என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் பிபிசியிடம் தெரிவித்தார்.
காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய வன்முறையை உள்ளூர் போராட்டமாக முன்னிறுத்த, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பானது டிஆர்எஃப் ஆகவும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பிஏஎஃப்எஃப் ஆகவும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன என்று அவர் கூறுகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் ஜம்முவின் ரஜோரி-பூஞ்ச் பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு டிஆர்எஃப் பொறுப்பேற்றுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் மஃஸ்காம் பகுதியில் நடந்த இதேபோன்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தின் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2020 மார்ச் மாதம் வடக்கு காஷ்மீரின் ஹிந்த்வாரா நகரில் இதேபோன்ற தாக்குதல் நடந்தது. இதில் ஒரு ராணுவ கர்னல், ஒரு மேஜர் மற்றும் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை கோக்கர்நாக்கில் நடந்த தாக்குதல், ஹிந்த்வாராவுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதா?
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை அளிக்க வகை செய்யும் அரசமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் அங்கு ஆயுதமேந்திய தீவிரவாதம் முடிவுக்கு வந்துள்ளது; ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்று இந்திய ராணுவம், போலீஸ் மற்றும் சிவில் நிர்வாகமும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருகின்றன.
கடந்த ஆண்டு ஒன்றரை கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்தது அமைதிக்கான மிகப்பெரிய சான்று என்று பிரதமர் நரேந்திர மோதி முதல் காஷ்மீரின் துணைநிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா வரை கூறியிருந்தனர்.
அதே நேரத்தில் இந்த ஆண்டு இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கிற்கு வந்தனர் என்று சின்ஹா கூறியிருந்தார்.
"ஜம்மு-காஷ்மீரின் எல்லாப் பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது. இப்போது வணிகம் மற்றும் கல்வி நடவடிக்கைகள் நடந்து வருகின்றன; பயங்கரவாதம் அல்ல," என்று சமீபத்தில் சோபோரில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜம்மு-காஷ்மீர் காவல் துறைத் தலைவர் தில்பாக் சிங் கூறியிருந்தார்.
கோகர்நாக் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, "இந்த ஆண்டு 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், அதில் 37 பேர் வெளிநாட்டு தீவிரவாதிகள்" என்று கூறினார்.
உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படுவதில்லை என்பதைக் காட்ட இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"இந்த சூழ்நிலையால் வருத்தம் அடைந்துள்ள பாகிஸ்தான், எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்குள் ஊடுருவலை மேற்கொண்டுள்ளது,” என்றும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி கூறினார்.
பாதுகாப்பு படையினருக்கு சவால்
2019 ஆம் ஆண்டு 370வது பிரிவு நீக்கப்பட்டபோது, ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் பெரிய அளவிலான நடவடிக்கை தொடங்கப்பட்டது; அந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை என்றும் பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"ஆர்ப்பாட்டங்களும், கல் வீச்சுகளும் இப்போது பழங்கதையாகிவிட்டன. இப்போது உள்ளூர் சிறுவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. ஆனால் தீவிரவாத நடவடிக்கைகள் இப்போது முற்றிலுமாக திரைமறைவாகிவிட்டன. இது பாதுகாப்புப் படையினருக்கு புதிய சவாலாக உள்ளது," என்றார் அவர்.
கடந்த ஆண்டு 65 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், 17 பேர் கைது செய்யப்பட்டனர் என்று காவல் துறைத் தலைவர் தில்பாக் சிங் குறிப்பிட்டார்.
காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும், சில உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே ஆயுதம் ஏந்தத் தயாராக இருப்பதாகவும் அரசு புள்ளிவிவரங்களை பார்க்கும்போது நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இதை தீவிரவாதத்தின் முடிவு என்று கூற முடியுமா?
"தீவிரவாதம் முடிவுக்கு வரவில்லை. கடுமையான ராணுவ நடவடிக்கைகளுடன் கூடவே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நிரந்தர அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று கோக்கர்நாக் சம்பவத்தை கண்டித்த முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்