You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எப்படி நடந்தது? உடனிருந்த அண்ணன் வீரமணி கூறியது என்ன?
சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பெரம்பூரிலிருக்கும் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது என்ன நடந்தது?
செய்தியாளர்களிடம் பேசிய ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி, "கொலை செய்தவர்கள் உணவு டெலிவரி ஊழியர்கள் போல வந்தார்கள். தம்பி அருகே பாலாஜி என்பவர் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அவருக்குத்தான் உணவு டெலிவரி என்று கூறி வந்தார்கள்.
திடீரென பாலாஜியை அருகிலிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு, தம்பியை வெட்டத் தொடங்கினர்," என்று நடந்ததை விவரித்தார்.
சற்று தொலைவில் இருந்த வீரமணி சத்தம் கேட்டு ஓடி வந்ததாகவும், ஆனால் தன்னையும் அந்தக் கும்பல் வெட்டியதாகவும் கூறினார் வீரமணி.
"என்னை வெட்டியதையும் பொருட்படுத்தாமல், தம்பியை நோக்கி ஓடிச் சென்று பார்த்தேன். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்" என்று கூறினார் வீரமணி.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்ய நீதிபதி உத்தரவு
பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யவும், அங்கு கல்லறையை எழுப்பவும் அனுமதி கோரிய ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 7ஆம் தேதி காலையில், நீதிபதி வி.பவானி சுப்பராயன் தலைமையிலான சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த இந்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்பு இருப்பதாலும், அது குறுகிய சாலை என்பதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஹாத்ரஸ் சம்பவம் போல நடக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆகையால், 40 அடி சாலையாக இருந்தால் மக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் எனக் கூறியவர், 'சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த மூன்று மாற்று இடங்களில் உடலை அடக்கம் செய்யலாம்' எனப் பரிந்துரைத்தார்.
இதுகுறித்து ஆலோசிக்க, மனுதாரர் தரப்புக்கு மதியம் வரை அவகாசம் அளித்த நீதிபதி வழக்கை மதியத்திற்கு ஒத்தி வைத்தார்.
பின்னர் மதியம் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது அளிக்கப்பட்ட தீர்ப்பில், "படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் போத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் அடக்கம் செய்துகொள்ளலாம்" என்று நீதிபதி பவானி சுப்பராயன் தீர்ப்பளித்தார்.
மாயாவதி பேசியது என்ன?
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், "தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியைப் பலப்படுத்த சிறப்பாகப் பணியாற்றியவர் ஆம்ஸ்ட்ராங். பல ஏழைகளுக்காக இலவசமாக வழக்குகளை வாதாடியவர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆம்ஸ்ட்ராங் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலிக்காகக் கொலை செய்தவர்கள் மட்டுமே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
ச்அரசு தீவிரமா செயல்பட்டிருந்தால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கலாம். இந்த வழக்கில் எங்களுக்கு நியாயம் வேண்டும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்கள் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துடன் துணை நிற்கும்" என்று கூறினார்.
மேலும் கட்சித் தொண்டர்கள் இந்தத் தருணத்தில் அமைதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாயாவதி அறிவுறுத்தினார்.
ஆற்காடு சுரேஷ் வழக்குடன் தொடர்பா?
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய வடசென்னை பகுதியின் கூடுதல் ஆணையர் (சட்டம் - ஒழுங்கு) அஸ்ரா கார்க், "விசாரணைக்குப் பிறகு 8 பேரைக் கைது செய்துள்ளோம். ரத்தம் தோய்ந்த 7 ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளோம். ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தின் சீருடை, உணவு டெலிவரிக்கான பை மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்றார்.
விசாரணையின் தொடர்ச்சியாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கும்பலால் ஆற்காடு சுரேஷ் என்பவர் கொல்லப்பட்டார். அப்போது அதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளது என ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தேகித்தனர்.
இப்போது நாங்கள் கைது செய்துள்ள நபர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பியும் ஒருவர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார் கூடுதல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அஸ்ரா கார்க்.
திருமாவளவன் அஞ்சலி
மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "மிகக் கொடூரமான முறையில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். அவரது இழப்பு ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு," என்று கூறினார்.
மேலும், "17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றியவர். தேசியத் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்" என்றவர், அவரது கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் இதுபோன்ற தலித் தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது கவலையளிக்கிறது. பட்டியலின தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." என கோரிக்கை வைத்தார்.
இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி
பெரம்பூரிலிருக்கும் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், "அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய பல இளைஞர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.
என்ன நடந்தது?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அது அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவரது உடல், பெரம்பூரிலிருக்கும் மாநகராட்சி பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)