You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் தொடரும் முக்கியப் பிரமுகர்களின் கொலைகள் - என்ன நடக்கிறது? திமுக கூறுவது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மர்ம மரணம், சேலத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை, தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை என தமிழ்நாட்டில் முக்கியப் பிரமுகர்களின் கொலைகள் தொடர்கின்றன.
கடந்த சில நாட்களுக்குள் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சில கொலைகள், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன.
சம்பவம் 1: திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்
திருநெல்வேலியின் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த மே மாதம் 2ஆம் தேதி காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதற்குப் பிறகு மே 4ஆம் தேதியன்று அவரது தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி சடலமாகக் கிடந்தார். அவரது உடல் அருகில் சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்ட கடிதங்களும் கிடைத்தன.
பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை இந்த வழக்கை விசாரித்தது. ஆனால், தற்போதுவரை அவரது மரணம் குறித்த மர்மம் விலகவில்லை. இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சம்பவம் 2: பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டிக் கொலை
மே மாதம் 20ஆம் தேதி திருநெல்வேலியில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் மே 20ஆம் தேதி கேடிசி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காகச் சென்றார்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று அரிவாளால் கழுத்திலும் முகத்திலும் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இந்தச் சம்பவம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்குப் பிறகே தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
அவரது இறுதி ஊர்வலம் நான்கு மணிநேரம் நடைபெற்றது. இந்த வழக்கில் எட்டு பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் 3: சேலம் அதிமுக பிரமுகர் கொலை
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், மாநகராட்சி மண்டலக் குழு முன்னாள் தலைவருமான சண்முகம் ஜூலை 3ஆம் தேதி கொல்லப்பட்டார்.
அன்று இரவு அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி கொலை செய்தது.
டகாவல்துறை விசாரணையில் 55வது வார்டு மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாருக்கும் சண்முகத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும் அதன் காரணமாக இந்தக் கொலை நடந்ததும் தெரிய வந்தது. இதில் சதீஷ்குமார் உட்பட 9 பேர் கைது செய்யப்பனர்.
சம்பவம் 4: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதியன்று மாலையில் பெரம்பூரில் அவர் கட்டி வரும் வீட்டிற்கு அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிமுக விமர்சனம்
கடந்த மூன்று மாதங்களுக்குள் இத்தனை ஹை - புரொஃபைல் கொலைகள் நடந்திருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி கடுமையாகவே விமர்சித்து வருகின்றன.
சனிக்கிழமையன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் நடந்த தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களைப் பட்டியலிட்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதலர்களுக்குத் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டபோதும் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. இப்போது ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியிருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தைப் பொறுத்தவரை அதை அரசியல் கொலையாகப் பார்க்க வேண்டியதில்லை என சென்னை பெருநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்திருக்கிறார்.
"இது அரசியல் காரணங்களுக்கான கொலை இல்லை. அப்படியிருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல்ரீதியான காரணங்களைத் தாண்டி, குழு ரீதியான பிரச்னைகள் இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலைக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது” என்கிறார் சந்தீப் ராய் ரத்தோர்.
திமுக சொல்வது என்ன?
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் இதேபோல அடுத்தடுத்து நடந்த இரு தி.மு.க. பிரமுகர்களின் கொலைகள், உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குச்சாவடியில் தி.மு.க. பிரமுகர் மிரட்டிய காணொளி வெளியானது ஆகியவை சட்டம் - ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பின.
ஆனால், இந்தக் கொலைகளை வைத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புவது தவறானது என்கிறது தி.மு.க.
"காங்கிரஸ் தலைவர் மரணத்தில், அது கொலையா, தற்கொலையா என்பது இப்போது வரை முடிவாகவில்லை. அதேபோல, சேலம் படுகொலையில், இரு தனி நபர்களுக்கு இடையிலான பகையால் கொலை நடந்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலை மிகவும் வருந்தத்தக்க விஷயம். அவர் ஒரு கட்சித் தலைவர் என்பதால், கூடுதல் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து அவரும் காவல்துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும்," என்கிறார் தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
மேற்கொண்டு பேசிய அவர், "இதுபோல பகைகளால் நடக்கும் கொலைகள் எல்லா நாட்டிலும் நடக்கின்றன. இப்படி குற்றங்கள் நடந்த பிறகு அரசு என்ன செய்கிறது என்பதுதான் முக்கியமானது. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இடைவிடாமல் வழக்குகளை நடத்தி தண்டனை வாங்கித் தருவதாக காவல்துறை உறுதியளித்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
ஆனால், 'அரசியல்ரீதியாக முக்கியப் பிரமுகர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டால், அவை மொத்தமாகச் சேர்ந்துதானே பார்க்கப்படும்?' என்று கேட்டபோது, அதை மறுப்பதற்கு இல்லை எனவும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
"ஆமாம். அதை மறுப்பதற்கு இல்லை. இதுபோன்ற அரசியல் தலைவர்கள் கொல்லப்படும்போது நிச்சயமாக நாங்கள் பதில் சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆனால், விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)