அஸ்வின்: டெஸ்ட் வீரர் என்று ஒதுக்கப்பட்டவர் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வானது எப்படி?

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவில் இன்னும் சில நாள்களில் தொடங்கும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் வலதுகை ‘ஆஃப் ஸ்பின்னரான’ ரவிச்சந்திர அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியானது. அதில் அக்ஸர் படேலுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் கடைசியாக அஸ்வின் விளையாடினார், அதிலும் இருபோட்டிகளில் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்து.

அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் 18 மாதங்கள் கழித்து, சமீபத்தில் ஆஸ்திரேலியத் தொடரில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது பலருக்கும் வியப்பை அளித்தது. இரு போட்டிகளில் பங்கேற்றாலும் அஸ்வின், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னும் ஃபார்மில்தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

நிராகரிப்பும் எழுச்சியும்

கடந்த 2015ம் ஆண்டிலிருந்தே ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அஸ்வின் அதிகமாகச் சேர்க்கப்படவில்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் 2015ம் ஆண்டில் அதிகபட்சமாக 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். அதன்பின் 2016ஆம் ஆண்டில் 2 போட்டிகளிலும், 2017ம் ஆண்டில் 9 போட்டிகளிலும் அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தது. விராட் கோலி கேப்டன் பொறுப்புக்கு வந்தபின், அஸ்வின் ஒருநாள் அணியிலிருந்து அதிகமாகச் சேர்க்கப்படவில்லை.

ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து 5 ஆண்டுகள் நிராகரிக்கப்பட்ட அஸ்வினுக்கு 2022ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கத் தொடரில் மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் சமீபத்தில் ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஏறக்குறைய 2017ம் ஆண்டிலிருந்து விராட் கோலி, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலத்தில் இருந்து, அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் அணியில் முறையான அங்கீகாரமும், இடமும் கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியானவர், அஸ்வினின் பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே உகந்தது எனக் கருதப்பட்டது.ஏறக்குறைய கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாட அழைக்கப்பட்டிருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தன்னால் ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை அஸ்வின் தொடர்ந்து நிரூபித்து வந்தார்.

குறிப்பாக ஐபிஎல் டி20 லீக்கில் அஸ்வினின் பந்துவீச்சும், பேட்டிங்கும் பிசிசிஐ தேர்வாளர்களுக்கு பெரிய நெருக்கடியை அளித்தது. அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியும் ஏன் இந்திய ஒருநாள் அணியில், டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியும், நெருக்கடியும் தேர்வாளர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்துதான் 5 ஆண்டுகள் இடைவெளியில் 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார்.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு அவரின் பந்துவீச்சு சரிவராது என்று நிராகரிக்கப்பட்டு வந்தநிலையில் இப்போது மீண்டும் அஸ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஐசிசி போட்டித் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ‘2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை’, ‘2022ஐசிசி டி20 உலகக் கோப்பை’, ‘2023 ஐசிசி உலகக் கோப்பை’யில் விளையாடி தன்னை நிராகரித்தது தவறு என அஸ்வின் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் ஏன் உலகக் கோப்பை அணிக்குத் தேவை?

இந்திய அணியில் தற்போதுள்ள சுழற் பந்துவீச்சாளர்களிலேயே ஒருநாள் போட்டிகளிலும், உலகக் கோப்பைத் தொடர்களிலும் அதிக அனுபவம் கொண்டவர் அஸ்வின் மட்டும்தான்.

2011 உலகக் கோப்பை, 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும், 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அஸ்வின் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

விராட் கோலியும், அஸ்வினும் மட்டும்தான் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இந்த உலகக் கோப்பைக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

2010ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக 115 ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்றுள்ளார். அதில் 1040 ஓவர்கள் வீசி, 155 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் கவனிக்க வேண்டியது, அஸ்வினின் எக்கானமி ரேட் மட்டும்தான். அஸ்வினின் பந்துவீச்சு எக்கானமி ரேட் 4.94 மட்டுமே இருக்கிறது. இந்த அளவு குறைவாக ஒரு சுழற்பந்துவீச்சாளர் எக்கானி ரேட் வைத்திருப்பது இந்த உலகக் கோப்பைத் தொடரில் அஸ்வினாக மட்டும்தான் இருக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணிக்கு ஆஃப் ஸ்பின்னரின் அவசியம் என்ன?

அது மட்டுமல்லாமல் ஒரு அணிக்கு ஆஃப் ஸ்பின்னர் மிக, மிக முக்கியமாகும். அதிலும் வலது கை ஆஃ ஸ்பின்னர் மிக உத்தமம். ஆனால், உலகக் கோப்பைக்கான அஸ்வின் இல்லாத இந்திய அணியில் ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் என 3 பேருமே இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள், ‘லெக் ஸ்பின்னர்கள்’. இதைத் திருத்தும் வகையில்தான் அஸ்வினைச் சேர்த்துள்ளனர்.

அஸ்வின் வெறும் ஆஃப் ஸ்பின்னர் என்ற வகையில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அவரின் பந்துவீச்சில் பல்வேறு வகைகளில் இருக்கும். குறிப்பாக ஓர் ஓவரில் 6 பந்துகளும் ஒரே மாதிரியாக அஸ்வின் வீசியது இல்லை. ஒரு பந்து ஆஃப் ஸ்பின்னாகவும், மற்றொரு பந்து ‘கூக்ளி’யாகவும், ‘கேரம் பாலா’கவும், ‘ஸ்லோ பாலா’கவும், டாஸ் செய்து வீசுவது, ‘லெக் ஸ்பின்னாக’ வீசுவது என்று தனது பந்துவீச்சில் பல்வேறு வகைகளை அஸ்வின் வெளிப்படுத்தக்கூடியவர் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அஸ்வினின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவது எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். சில நேரங்களில் எதிரணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தவும், விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆபத்பாந்தவனாகவும் அஸ்வின் அணியில் அழைக்கப்படுவார் என்பதை கடந்த காலப் போட்டிகளில் காண முடிந்திருக்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

இந்திய மைதானங்களில் அஸ்வினின் அனுபவம்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மைதானங்களில் விளையாடிய அனுபவம் அஸ்வினுக்கு இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டுமுதல் 2023 வரை இந்தியாவில் மட்டும் 44 போட்டிகளில் அஸ்வின் பங்கேற்றுள்ளார், அதில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் அனுபவத்தை வைத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. அந்த ஆடுகளங்களில் அஸ்வின் போன்ற அனுபவம் நிறைந்த சுழற்பந்துவீச்சாளர் அணியில் இருப்பது பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனம்

உலகக் கோப்பையில் பங்கேற்கும் பல்வேறு அணிகளில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமாகும். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வினின் பந்துவீச்சு எப்போதுமே சிம்மசொப்னமாகவே இருக்கும் என்பது விமர்சகர்களின் கருத்து. இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்தை ‘டாஸ்’ செய்யும் விதமும், லைன் லெங்த்தில் பந்தை ‘பிட்ச்’ செய்யும் விதமும் ஆடுவதற்கு கடும் சிரமத்தை அளிக்கும். இதனால், இடதுகை பேட்டர்கள் அஸ்வினின் பந்துவீச்சில் பொறுமையிழந்து அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்க நேரிடும்.

கிரிக்கெட்டின் 143 ஆண்டுகால வரலாற்றில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை முதன்முதலாக வீழ்த்தியது அஸ்வின் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரே, டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், சாம் கரன், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, நியூசிலாந்தில் டாம் லாதம், டேவான் கான்வே, மார்க் சாப்மேன், சான்ட்னர், பாகிஸ்தானில் ஃபக்கர் ஜமான், இமாம் உல்ஹக், சகீல், முகமது நவாஸ், தென் ஆப்பிரிக்காவில் குயின்டன் டீ காக், டேவிட் மில்லர், பெகுல்க்வே ஆகியோர் முக்கிய இடதுகை பேட்ஸ்மேன்களாகும்.

இவர்களில் பெரும்பாலான பேட்டர்கள் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சர்வதேச தளத்தில் எதிர்கொள்ளாதவர்கள் என்பதால், அஸ்வின் பந்துவீச்சு நிச்சயம் அவர்களுக்கு கடினமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங்கில் இன்ப அதிர்ச்சி கொடுக்கக் கூடியவர்

ஒருநாள் போட்டிகளில் அஸ்வினின் பேட்டிங் என்பது பெரிதாக குறிப்பிடும்படியாக இல்லை என்பது ஏற்புக்குடையதுதான். அஸ்வின் 115 போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும்.

ஏனென்றால், கடந்த 2015ம் ஆண்டுக்கு முன், இந்திய அணியில் அஸ்வின் களமிறங்குவது 9வது அல்லது 8-வது வரிசையில் வருவார். அதனால் அதிகமான ரன்கள் சேர்க்கவும் வாய்ப்பு இல்லை. அது மட்டுமல்லாமல் 2010 முதல் 2015வரை இந்திய அணியில் சச்சின், சேவாக், கம்பீர் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால், அஸ்வினின் பேட்டிங்கிற்கே வேலையிருக்காது என்றே கருதலாம்.

ஆனால், 2015ம் ஆண்டுக்குப்பின்புதான் அஸ்வினின் பேட்டிங் திறமையை மெருகேறியது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2015ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்திய அஸ்வின் 5 சதங்களை விளாசியுள்ளார். பேட்டிங் திறமையில்லாத ஒரு வீரரால் நிச்சயம் சதம் அடிக்க முடியாது என்பதும் ஏற்புக்குடியதே. ஆதலால், அஸ்வினின் வருகை கடைசி வரிசையில் இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

முக்கியமான அணிகளை மிரட்டியவர்

உலகக் கோப்பையில் பங்கேற்கும் முக்கிய அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக அஸ்வின் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் தற்போதுள்ள ஜடேஜா, குல்தீப்பை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அஸ்வின் மட்டும்தான்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் 17 போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் ஆடி, 35 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 12 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிராக 32 விக்கெட்டுகளையும் அஸ்வின் சாய்த்துள்ளார்.

ஆதலால், வலுவான வீரர்களுடன் களத்தில் இறங்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தனி முத்திரை பதித்துள்ளார் என்பதால், அவரின் தேவை இந்திய அணி்க்கு அவசியமானதாகும்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

பகலிரவு ஆட்டங்களில் பிரகாசிப்பவர்

உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடக்க இருக்கின்றன. பகலிரவு ஆட்டங்கள், மின்னொளியில் நடக்கும் ஆட்டங்களில் எப்போதுமே அஸ்வின் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2010 முதல் 2023 வரை 80 பகலிரவு போட்டிகளில் அஸ்வின் பங்கேற்று 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் வீழ்த்திய 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் பகலிரவு ஆட்டத்தின் மூலம் எடுத்தவைதான்.

இந்திய அணியின் வெற்றிகளில் பங்களித்தவர்

அது மட்டுமல்லாமல் அஸ்வின் விளையாடிய 115 ஒருநாள் போட்டிகளில் இந்தியஅணி 67 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி பெற்ற போட்டிகளில் அஸ்வின் மட்டும் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது 67 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின் இடம் பெற்று இந்தியஅணி தோல்வி அடைந்த 41 போட்டிகளில் அஸ்வின் 38 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆதலால் அஸ்வின் ஒரு மேட்ச் வின்னர் என்பதால்தான் அஸ்வினின் தேவை உலகக் கோப்பை நடைபெறும் தருணத்தில் இந்திய அணிக்கு அவசியமாகிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

அஸ்வினை நிராகரிக்க காரணம்என்ன?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, இந்திய அணியில் அஸ்வின் தேவை குறித்து சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ இன்றுள்ள கிரிக்கெட்டில் தரமான சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர், மிகச்சிறந்த விக்கெட் டேக்கர். ஒருநாள் போட்டியில் இடம் பெற வேண்டுமானால், 10 ஓவர்கள் பந்துவீச வேண்டும், 40 ஓவர்கள் களத்தில் பீல்டிங் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் பேட்டிங்கும் செய்ய வேண்டும். இந்த அனுபவம் அஸ்வினுக்கு அதிகம் இருக்கிறது.”

“ அஸ்வினை தேர்வாளர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால், அது அவரின் வயது மற்றும் பீல்டிங் திறனுக்காக மட்டும்தான். மற்றவகையில் அஸ்வினை இந்திய ஒருநாள் அணியில் நிராகரிக்க முடியாது. இந்திய அணியில் ஏற்கெனவே இரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் தேவை அவசியம்” எனத் தெரிவித்தார்.

அஸ்வின் இல்லாத அணிக்கு என்ன சிக்கல்?

இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்காவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 2 ஸ்பெலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள் ஆனால், ஸ்பெலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கல் இருக்கிறார்களா என தெரியாது” என்று கூறினார்.

“ஆசியக் கோப்பையில் குல்தீப் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், இந்திய மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகளுக்கு எதிராக 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். மற்ற அணிகளில் எல்லாம் 2 முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணியில் அஸ்வின் போன்ற வீரர் இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அஸ்வின் தேவை, மேட்ச் வின்னராக இருப்பார்” எனத் தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் வருகை பலம் சேர்க்குமா?

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் வருகை நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய வலுவாக அமையும். ஏனென்றால்,குல்தீப் யாதவ் பந்துவீச்சும், அஸ்வினின் நெருக்கடி தரும் பந்துவீச்சு எதிரணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறும்.

நடுப்பகுதி ஓவர்களில் அஸ்வின் பாரம்பரிய ஆஃப் ஸ்பின்னராகவும், ரிஸ்ட் ஸ்பின்னராகவும் செயல்படக்கூடிய திறமை படைத்தவர். நடுப்பகுதியில் எதிரணி பேட்டர்களை தனது பந்துவீச்சு நுணுக்கத்தாலும், வித்தியாசமான பந்துவீச்சாலும் திணறடித்து விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர் அஸ்வின் என்பதை மறுப்பதற்கில்லை.

குறிப்பாக சென்னை, லக்னோ, அகமதாபாத், கொல்கத்தா, மும்பை போன்ற மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியவை. இங்கு நடக்கும் போட்டிகளில் இந்திய அணியில் அஸ்வின் இருப்பது மிகப்பெரிய பலமாக அமையும் என்று கருதலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: