You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலையேற்றத்தின்போது 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்த இந்திய வீரர் 3 நாட்கள் உயிருடன் இருந்தது எப்படி?
நேபாளத்தில் அன்னபூர்ணா மலைப்பாதையில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அனுராக்கின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சகோதரர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் நகரில் வசிப்பவர் அனுராக் (34). அவர் திங்கள்கிழமை அன்னபூர்ணா மலையில் இருந்து இறங்கும் போது முகாம்-III இல் இருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்துவிட்டார். அவர் விழுந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அன்னபூர்ணா மலை உலகின் 10வது உயரமான மலையாகும்.
"அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எங்கள் கவனம் முழுவதும் அவரை விரைவில் குணமாக்குவதில்தான் உள்ளது,” என்று அனுராக் மீட்கப்பட்ட செய்தியை விவரித்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சுதீர் மாலு குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த குழு அவரை ஆழமான பள்ளத்தில் இருந்து கண்டுபிடித்தாக சுதீர் கூறினார்.
ஏழு நேபாள மலையேறுபவர்கள் அனுராக்கை 300 மீட்டர் ஆழமான பள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளனர் என்பதை செவன் சம்மிட் ட்ரெக்ஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் போக்ராவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள ஷெர்பாக்கள் காப்பாற்றினர்
மருத்துவர்கள் அனுராகை தொடர்ந்து கண்காணித்து வருவதாக செவன் சம்மிட் ட்ரெக்ஸின் மேலாளர் தானேஷ்வர் குர்கெய்ன் கூறியுள்ளார்.
"சாங் தவா தலைமையிலான ஏழு நேபாள மலையேறும் வீர்கள் அடங்கிய குழு அவரை கண்டுபிடித்துள்ளது. அவர் வியாழக்கிழமை காலை முகாமுக்கு அருகே 300 மீட்டர் ஆழமான பள்ளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்," என்று Seven Summit Treks ன் தலைவர் மிங்வா ஷெர்பா கூறினார்.
போலந்தின் பிரபல மலையேற்று வீரர் ஆடம் பிலேக்கி மற்றும் அவரது நண்பரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அனுராக்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாக நேபாளி செய்தித்தாள் ’தி ஹிமாலயன் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
"மீட்புக் குழுவில் நேபாள ஷெர்பாக்கள் தவிர, போலந்திலிருந்து இரண்டு மலை ஏறுபவர்கள் இருந்தனர்,” என்று விளையாட்டு பத்திரிகையாளர் ஏஞ்சலா பெனாவைடஸ் ட்வீட் செய்துள்ளார்.
"அனுராக் விழுந்துகிடந்த இடத்திற்கு மூன்று நேபாளிகள் மற்றும் ஒரு போலந்து மலை ஏறுபவர் இறங்கினர். அவர்கள் அனுராக் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பிறகு மீட்புக் குழுவினர் அவரை பள்ளத்தில் இருந்து மெதுவாக வெளியே எடுத்தனர்."என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் ஆபத்தான இடம்
"வேகமாக மோசமடைந்து வந்த வானிலைக்கு இடையே மீட்புக் குழு வேலை செய்தது. பனிப்புயல் அடிக்கடி வரும் இந்த இடம் மலையின் மிகவும் ஆபத்தான இடமாகும்,” என்று பெனாவிடஸ் எழுதியுள்ளார்.
மோசமான வானிலை காரணமாக அனுராக், காத்மாண்டுவுக்குப் பதிலாக போக்ராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மறுபுறம் ராஜஸ்தானின் கிஷன்கர் எம்எல்ஏவான சுரேஷ் தக், மாலு குடும்பத்துடன் தான் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். அனுராக் மாலுவின் தந்தை ஓம்பிரகாஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
"அனுராக் மாலு மீட்கப்பட்டுள்ளார். அனுராக்கின் தம்பி ஆஷிஷ் நேபாளத்தில் இருக்கிறார்,” என்று அனுராக் மாலுவின் தந்தை ஓம் பிரகாஷ் மாலு பிபிசி இந்தி செய்தியாளர் மோஹர் சிங் மீனாவிடம் தெரிவித்தார். மார்ச் 24 அன்று அனுராக் டெல்லிக்குச் சென்றதாகவும், அங்கிருந்து நேபாளத்தின் காத்மாண்டுவுக்குச் சென்றதாகவும் ஓம் பிரகாஷ் மாலு பிபிசியிடம் கூறினார்.
ஆனால் தற்போது அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். அனுராக் மாலு 2010 ஆம் ஆண்டு டெல்லி ஐஐடியில் பி.டெக் முடித்துள்ளார்.
8,000 மீட்டருக்கு மேல் உயரமான 14 மலைகளையும், ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளையும் ஏறும் பணியில் அனுராக் உள்ளார்.
பல்ஜித் கெளரும் பாதுகாப்பாக உள்ளார்
முன்னதாக செவ்வாய்கிழமை, 'அன்னபூர்ணா மலை' உச்சியில் இருந்து இறங்கும் போது, 'நான்காவது முகாம்' அருகே திங்கள்கிழமை காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் பல்ஜித் கெளரும் மீட்கப்பட்டார்.
பல்ஜித் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் மற்றும் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் அவர் பாதுகாப்பாக இருப்பது குறித்து ட்வீட் செய்தனர்.
அவர் விரைவில் குணமடைய முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"கடவுள் அருள் இருந்தால் ஒருவரை யாருமே எதுவும் செய்யமுடியாது. இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தின் ’மவுண்டர் கேர்ள்’ பல்ஜித் கெளர். உலகின் மிக உயரமான சிகரத்தில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டார். நேபாளத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா மலைத்தொடரில் இருந்து பல்ஜித் கெளர் காணாமல் போனார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்,"என்று அக்னிஹோத்ரி ட்வீட் செய்திருந்தார்,
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்