You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித்தை விஞ்சினாரா சல்மான்? - 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக் எப்படி இருக்கிறது?
தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹிட்டடித்த வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'சிசி கா பாய் சிசி கி ஜான்' ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சல்மான் கான் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து 2014ல் வெளியான திரைப்படம் வீரம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வேட்டி சட்டையுடன் கிராமத்து கதையில் அஜித் நடித்திருந்தார். பாசமுள்ள அண்ணனாக, காதலுக்காக அடிதடியை விட்டு சாந்தமான மனிதராக, பின்னர் காதலியின் குடும்பத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்ற மீண்டும் அடிதடியில் இறங்கும் நபராக என அஜித் இந்த படத்தில் அசத்தியிருப்பார்.
பொங்கல் வெளியீடாக ரிலீஸாக மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்று ரீ மேக் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கன்னடத்திலும் ரீ மேக் செய்யப்படம் வீரம் திரைப்படம், தற்போது ஃபர்கஜ் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது.
சிசி கா பாய் சிசி கி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரம்ஜான் ரிலீஸாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வீரம் தமிழில் ஹிட் அடித்ததைப் போன்று அதன் இந்தி தழுவலும் ஹிட் அடித்துள்ளதா?
"நகைச்சுவை என்ற பெயரில் பொறுமையை சோதிக்கிறது"
படத்தின் முதல் பாதி நகைச்சுவை என்ற பெயரில் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் தெரிவித்துள்ளது. `படத்தின் இடைவேளைக்கு பிறகுதான் கதை வேகமெடுக்கிறது. படத்தில் அதிக கதாபாத்திரங்களுக்கு மெனக்கெட்டுள்ள இயக்குநர், அவற்றை வலுவாக அமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. பெயருக்கு வந்து செல்கின்றனர். படத்தின் இசையும் சுமாராகவே உள்ளது. எனினும் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது.
சண்டை இயக்குநர் அனல் அரசுவின் கைவண்ணத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இதுவரை பார்த்திராத வகையில் சண்டைக்காட்சிகள் உள்ளன. எனினும், அதிக கதாபாத்திரங்கள், ஈர்க்காத இசை, சல்மான் கானுக்கு ஏற்ற வகையில் அமையாத பலவீனமான திரைக்கதை போன்றவை இப்படத்தை பாதிக்கின்றன` என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
சல்மானின் வெறித்தனமான ரசிகர்களின் இதயத்தில் இந்த படத்துக்கு ஒரு சிறப்பான இடம் இருக்கும். ஆனால், மற்றவர்களிடம் இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்று இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
`சல்மான் கானின் சகோதரர்களாக வருபவர்களின் காதல் காட்சிகள் நம்பும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் இல்லை. நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே அழகாக இருக்கிறார், தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் வெங்கடேஷின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலர்க்க வைக்கலாம். சல்மானின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தாலும், மற்றவர்களை ஈர்க்க தவறிவிட்டது. மாறிவரும் ரசிகர்களின் ரசனையை புரிந்துகொண்டு எப்படி படம் எடுக்க வேண்டும் என ஒருவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் அமைந்துள்ளது. மூலப்படத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ரீமேக் செய்வது இனியும் பலனளிக்காது` என்கிறது அந்த பத்திரிகையின் விமர்சனம்.
'கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் லாஜிக்கும் இல்லை, மனதை கவரும் விதத்தில் கதையும் இல்லை, அர்த்தமும் இல்லை. ஆனால், நிறைய ஆக்ஷன், டிராமா, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மட்டும் உள்ளன' என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. `சல்மான் கானுக்கு இப்படி ஒரு அசிங்கமான, வித்தியாசமான சிகை அலங்காரத்தை யார் முடிவு செய்தார்கள். அவரது கதாபாத்திரத்துக்கு உண்மையிலேயே இந்த சிகை அலங்காரம் தேவையா? அதற்கும் மேலாக இந்த சிகை அலங்காரத்தில் அவர் அழகாக இருக்கிறாரா? படத்தில் பாடல்களே இல்லையென்றாலும் எந்த குறையும் இருந்திருக்காது.
சல்மான் கான் `க்ரிஞ்ச்`ஆக நடனமாடுவதை இனியும் வேடிக்கை என்று ரசிக்க முடியாது. மணிகண்டனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. படத்தின் இடைவேளைக்கு முன்பான ரயில் சண்டை மற்றும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் சிறப்பாக உள்ளன. சல்மான்கான் தன்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இதேபோல் வெங்கடேஷின் நடிப்பும் நன்றாக உள்ளது` என இந்தியா டுடே கூறியுள்ளது.
என்.டி.டி.வி. வலைதளம் இப்படத்துக்கு 5க்கு 1 ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளது. ` சல்மான்கான் என்னதான் செய்தாலும், அவரைச் சுற்றியிருக்கும் நடிகர்கள் என்னதான் முயற்சித்தாலும், பொழுதுபோக்கிற்கு ஏற்ற ஒரு தருணத்தையும் படம் உருவாக்கவில்லை என்றும் முட்டாள்தனமான, மந்தமான வெட்கப்பட வைக்கும் திரைப்படம் என்றும் என்.டி.டி.வி. வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்