You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘என் வயது 45, என் உடலின் வயது 22’ - இளமையை தக்க வைக்க அமெரிக்க தொழிலதிபர் என்ன செய்கிறார் தெரியுமா?
- எழுதியவர், லாரா லீவிங்டன்
- பதவி, பிபிசி
மரணத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் முதுமையினால் நம் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியும் என சில வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்நாள் இரட்டிப்பாகியிருக்கலாம், ஆனால் நம்மில் பலர் வயதாகும்போது நம் அன்புக்குரியவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கண்டு கலங்கியிருப்போம்.
அதைத் தவிர்ப்பதற்காக, ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.
பல நவீன சிகிச்சைகள் வழியாக நமது உடலில் ஏற்படும் வீக்கத்தையும், நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும் முயற்சிகள் நடைமுறையில் இருக்கின்றன.
நம் உடலில் ஏற்படும் செல்லுலார் வீழ்ச்சியை எதிர்த்து சத்து மாத்திரைகள் மூலமாக அதை சரிசெய்யும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதுபோன்ற சிகிச்சைகள் வழியாக அதிக பொருளீட்ட முடிகிறது என்பதை இதைச் சார்ந்த வணிக வாய்ப்புகள் இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருப்பது உறுதிப்படுத்துகிறது-
இத்தகைய ஆய்வுகள், சிகிச்சைகள் பணம் ஈட்டும் முயற்சியா அல்லது மருத்துவத்துறையின் வளர்ச்சியா என்பதை அறிந்து கொள்ள கலிஃபோர்னியாவுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டேன்.
மாறாத இளமை
45 வயதான தொழில்முனைவோரான பிரையன் ஜான்சன் தனது உடலின் வயதைக் (Biological Age) குறைக்க பல லட்சம் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறார்.
வயதாகும் போது நமது உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் என பல நோய்கள் மனிதர்களுக்கு ஏற்பட அவர்களின் வயது ஒரு காரணமாக இருக்கிறது.
முதுமையை தள்ளிப் போடுவதன் மூலமாக இதுபோன்ற நோய் ஏற்படும் காரணங்களையும் குறைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஜான்சனின் ஆடம்பரமான வெனிஸ் கடற்கரை வீட்டில் ஒரு படுக்கையறை கிளினிக்காக மாற்றப்பட்டுள்ளது. தினமும் பல மணி நேரத்தை அங்கு அவர் செலவிடுகிறார்.
அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழும் ஜான்சன், தனது காலை உணவை 6 மணிக்கு எடுத்துக் கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு அந்த தினத்திற்கான தனது கடைசி உணவை சாப்பிடுகிறார். இது தவிர அவரின் உடலை சோதனை செய்து பரிந்துரைக்கப்பட்ட 54 சத்து மாத்திரைகளையும், சில பெயர் குறிப்பிடப்படாத மருந்துகளை அவர் எடுத்துக் கொள்கிறார்.
இந்த மருந்துகளின் அளவும், நேரமும் அவ்வப்போது எடுக்கப்படும் அவரின் உடல் பரிசோதனையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன
அவரது தினசரி நடைமுறையில் கடினமான உடற்பயிற்சியும், சிகிச்சைகளும் உள்ளன.
அவர் மேற்கொண்டு வரும் தோல் லேசர் சிகிச்சை அவரது தோலின் வயதை 22 வயதாக குறைத்துள்ளது. ஜான்சனின் உடலில் உள்ள பிற பாகங்களை விட மிகவும் வயது குறைந்ததாக அவரது தோல் இருக்கிறது என என்னிடம் கூறினார்.
"என்னை உற்சாகமூட்டுவதிலும், எனது அழகை மெருகூட்டுவதிலும் என் தோல் மிக முக்கிய பாகமாகும்," என்று ஜான்சன் கூறுகிறார்.
உடல்நலத்தில் அதிக கவனம் கொண்டுள்ள ஜான்சன், தினமும் 5 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறார். சர்க்கரை முடிந்தவரை தவிர்க்கிறார். இதுமட்டுமல்லாது அவரது உடலின் நடவடிக்கைகளை கண்காணிக்க தீவிரமான கண்காணிப்பு சாதனங்களை பயன்படுத்துகிறார்.
ஆனால் ஜான்சனின் வாழ்க்கைமுறை பற்றி என் நண்பர்களிடம் பகிர்ந்தபோது, 'இது மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, அனைவருக்கும் ஏற்றதில்லை' என்று அவர்கள் கருதினர்.
நீண்ட ஆயுளை எப்படி பெறுவது?
"உங்கள் ஆயுளை அதிகமாக்குவதில் 7% மட்டுமே மரபணுவுக்கு தொடர்பு இருக்கிறது. மீதி 93% உங்கள் வாழ்க்கை முறை சார்ந்து ஆயுள் அதிகரிக்கிறது," என்று பக் இன்ஸ்டிடியூட் ஃபார் ஏஜிங் ரிசர்ச்சின் தலைமை நிர்வாகி எரிக் வெர்டின் கூறுகிறார்.
"ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் நபர்கள் 95 வயது வரை உயிர் வாழ்கிறார்கள். இது மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை விட 15 முதல் 17 வருடங்கள் அதிகமாகும்," என்று எரிக் என்னிடம் தெரிவித்தார்.
ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது என்ன என்று எரிக்கும், இன்னும் பலரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரோக்கியமான உணவும், சர்க்கரையைத் தவிர்ப்பதும், சரியான தூக்கமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியமான அம்சங்கள்.
"நிறைய உடற்பயிற்சி, சில மணி நேர விரதம், நல்ல தூக்கம், நிறைய சமூக தொடர்புகள், மிகக் குறைந்த ஆல்கஹால். இதைத்தான் நான் தினமும் கடைபிடிக்கிறேன்," என்று எரிக் கூறினார்.
மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, "உங்கள் 24 மணி நேரத்தில் குறைந்தது 14 மணி நேரத்தை எதுவும் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் ஆழமான விளைவைக் கொண்டுள்ளது," என்றார்.
'உடல் ஆரோக்கியத்தை கண்காணியுங்கள்'
வயதாகும்போது நம் உடலை நன்கு கண்காணிப்பது முக்கியமானது. உடல்நலத்தை சரியான இடைவெளியில் கண்காணிப்பதன் மூலம் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும்.
இந்த நடைமுறையை வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றவேண்டும். ஒவ்வொரு தனிநபரும் தங்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப தனித்தனியே இதை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்வியல் மாற்றங்கள் பெரிய அளவில் தாக்கத்தை நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.
மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகமாக்குவது தொடர்பாக ஆய்வுகளில் ஈடுப்பட்டு வரும் அனைவரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் டிராக்கர்களை உடலில் அணிவதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர்.
உடலில் செயல்பாடுகளை கண்காணிக்க ஸ்மார்ட் வாட்ச், தூக்கத்தின் அளவை கண்காணிக்க ஸ்மார்ட் மோதிரம்(வாட்சை விட தூங்கும் போது மோதிரம் அணிந்து கொள்வது வசதியானது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என பல டிராக்கர்களை தினமும் பயன்படுத்துகின்றனர்.
நானும் சில காலம் குளுகோஸ் மானிட்டரை பயன்படுத்தினேன். எனக்கு சர்க்கரை நோய் இல்லாத போதும், தினமும் அதை பயன்படுத்த தொடங்கிய பிறகு என் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஏற்பட அவை தூண்டுதலாக அமைந்தன.
ஆயுள் அதிகரிப்பது சிக்கலா?
மனிதர்களின் ஆயுட்காலம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அதிகமானது.
இப்போது மருத்துவத்துறையில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழ்ந்த பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து இருக்கிறது.
ஆனால் ஆயுட்காலம் அதிகரிப்பதால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு முதுமை ஒரு நோயாக வரையறுக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
முதுமையை குறிக்க ஒரு வயது நிர்ணயிக்கப்பட்டால், முதியவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைகளின் கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கும்.
குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களை 'நோயுற்றவர்கள்' என்று முத்திரை குத்தும் அபாயமும் உள்ளது.
மேலும் ஆரோக்கியமான வாழ்க்கையினால் மனிதர்கள் கூடுதலாக சில ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டி வரும். மனிதர்களின் வேலை நேரமும் அதிகரிக்கக்கூடும்.
என் கலிஃபோர்னியா பயணத்திற்கு பிறகு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்ற முனைப்புடன் வீடு திரும்பினேன். நல்ல தூக்கம், தினசரி உடற்பயிற்சி, நல்ல உணவு என என்னுடைய தினசரி வாழ்க்கை முறை மாற்றினேன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்