You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய-சீன ராணுவத்தினர் மோதலின்போது என்ன நடந்தது? - ராஜ்நாத் சிங் விளக்கம்
அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள இந்திய - சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் விளக்கமளித்தார்.
ராஜ்நாத் சிங் பேசும் முன்னர் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இது குறித்து அமைச்சர் விளக்கமளித்தால் மட்டும் போதாது; விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அவை விதிகள் மற்றும் மரபுகளைக் காரணம் காட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சியினர் செய்த அமளியால் நற்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது ராஜ்நாத் சிங் எல்லை மோதல் குறித்து விளக்கமளித்தார்.
டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புகள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர்; இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.
ராஜ்நாத் சிங் என்ன பேசினார்?
''டிசம்பர் 9 2022 அன்று, தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதியில் உண்மையான எல்லைக் கோட்டை (Line of Actual Control) தன்னிச்சையாக மீறி, அங்கிருந்த நிலையை மாற்ற சீன ராணுவத்தினர் முயன்றனர். நமது ராணுவத்தினர் சீனாவின் இந்த முயற்சியை உறுதியுடன் எதிர்த்தனர்,'' என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
''இந்திய ராணுவம், மக்கள் விடுதலை ராணுவத்துடன் (சீன ராணுவத்தை) சண்டையிட்டு அவர்களை வெளியேற்றியது. எல்லையில் அமைதியைக் கடைபிடிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.''
''இந்திய ராணுவத் தளபதிகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், மக்கள் விடுதலை ராணுவத்தினர் தங்கள் இடங்களுக்கே திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வுக்குப் பின், டிசம்பர் 11ஆம் தேதி அப்பகுதியின் இந்திய ராணுவ கமாண்டர் தமது சீன சகாவுடன் கொடி சந்திப்பு ஒன்றை நடத்தினார்.''
''நமது பிராந்தியத்தின் ஒழுங்கைப் பாதுகாக்க நமது படையினர் முற்றிலும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்; அதற்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்தத் தயாராக உள்ளனர் என்று இந்த அவையிடம் கூற விரும்புகிறேன்.''
இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை; தீவிரமான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை, என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்திய - சீன ராணுவத்தினரின் மோதல் குறித்த விவாதத்துக்கு அனுமதி வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராஜ்நாத் சிங் பேசி முடித்த பின்னர், எதிர்க்கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் அமளி - அமித் ஷா கூறிய காரணம்
இதனிடையே இன்று மக்களவை ஒத்தி வைக்கப்பட்ட பின், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் சீனா மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு ஜாகீர் நாயக்கின் அமைப்பிடம் இருந்து பணம் பெற்றது குறித்த கேள்வியைத் தவிர்க்கவே காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தின்போது அமளி செய்தனர் என்று தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் சீன தூதரகத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியும், ஜாகீர் நாயக்கிடம் இருந்து 50 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளது என்று அமித் ஷா தெரிவித்தார்.
''இந்திய பாதுகாப்பு அமைச்சர் இதுகுறித்து (எல்லை மோதல் குறித்து) விளக்கமளிப்பார் என்று கூறிய பின்னரும் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தில் கேட்கப்பட இருந்த கேள்விகளின் பட்டியலைப் பார்த்த பின்னர் என்னால் காங்கிரஸ் கட்சியின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கேள்வி ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கு வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்வி. அவர்கள் பதிலளிக்கவிட்டிருந்தால் 2005-2007 காலகட்டத்தில் சீன தூதரகத்திடம் இருந்து அவர்கள் 1.35 கோடி ரூபாய் பெற்றிருந்தனர். அது எஃப்.சி.ஆர்.ஏ விதிகளுக்கு முரணானது. அதனால் அந்த அமைப்பின் பதிவை இந்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்று கூறியிருப்பேன்,'' என்று அமைச்சர் சொன்னார் என ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
இந்திய - சீன எல்லையில் என்ன நடந்தது?
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது. இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்