You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒலிம்பிக் 2024: இந்தியாவிற்கு இரண்டாம் பதக்கம்- வரலாறு படைத்த மனு பாக்கர்
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் மனு பாகர்- சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியான லீ வான்ஹோ - ஒ யே-ஜின்னை வீழ்த்தியது.
ஒ யே-ஜின்தான் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில் தங்கம் வென்ற வீரங்கனையாவார்.
இது 2024 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள இரண்டாம் பதக்கமாகும்.
இந்த பதக்கத்தின் மூலம் ஒலிம்பிக்கில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத அரிய சாதனையை மனு பாகர் படைத்துள்ளார்.
இதன்மூலம், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மனு பாகர்.
இதற்கு முன்பு சனிக்கிழமை நடந்த (ஜூலை 28) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிபிசியின் வளரும் வீராங்கனை-2020 விருது வென்றவர்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் 2020-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'வளரும் வீராங்கனை'க்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை விருதுகள் பட்டியலில் வளரும் இளம் வீராங்கனை ஒருவர் 'பிபிசி வளரும் வீராங்கனை' விருது வழங்கி கவுரவிக்கப்படுவார். அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான விருதை மனு பாக்கர் வென்றார்.
சிறந்த இந்திய வீராங்கனைகளையும் அவர்களது சாதனைகளையும் கௌரவிப்பதே 'பிபிசி சிறந்த இந்திய வீராங்கனை' விருதின் நோக்கம். அத்துடன், வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பதும், அவர்களது சாதனைப் பயணத்தை உலகிற்கு தெரியப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.
16 வயதில் 2 தங்கம் வென்ற மனு பாக்கர்
ஹரியானா ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு. இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை மரைன் என்ஜினியர்.
2018-இல் மனு மெக்சிகோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு (ISSF) போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்றார். பிறகு இரண்டாவது தங்கப்பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் (Mixed) வென்றார் மனு.
16 வயதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மனு. இந்தச் சாதனையைப் படைத்த இளம் வீராங்கனை மனு ஆவார்.
அப்போதைய போட்டிக்குப் பிறகு பிபிசியின் நிருபர் சரோஜ் சிங், மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கரிடம் பேசினார்.
இந்தக் கலந்துரையாடலில், தான் ஒரு மரைன் என்ஜினீயர் என்றும், அந்த வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் கூறினார் ராம் கிஷன்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
மகளுக்காக வேலையை விட்ட தந்தை
பள்ளி பயிலும் போது முதல் முறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட மனு, துல்லியமாகக் குறிவைத்து சுட்டதை கண்டு ஆசிரியர்கள் வியந்தனர் என மனுவின் தந்தை ராம் கிஷன் கூறுகிறார்.
பிறகு, பயிற்சி மேற்கொண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளால் பங்கெடுக்கத் துவங்கினார்.
ஆனால், மனு உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது பிரச்னையாக இருந்தது. மேலும், அப்போது அவர் வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெறுவதற்கான வயதை எட்டவில்லை. ஆகவே, அவர் போட்டி நடக்கும் இடங்களுக்குத் தனியாக வாகனம் ஓட்டிச் செல்ல இயலவில்லை.
எனவே, மகளின் கனவை நினைவேற்ற மனுவின் தந்தை ராம் கிஷன் தனது வேலையை விட்டு நின்றுவிட்டார்.
வேலையை ராஜினாமா செய்த பிறகு, மனு பாக்கரை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார் ராம் கிஷன்.
"துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற நிறைய பணம் செலவாகும். ஒரு பிஸ்டலின் விலை 2 லட்சம் ரூபாய். இதுவரை நாங்கள் மனுவுக்காக 3 துப்பாக்கிகள் வாங்கியுள்ளோம். மனுவின் விளையாட்டுக்காக மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம்," என்று ராம் கிஷன் பாக்கர் கூறுகிறார்.
பிஸ்டல் உரிமம் பெறப் போராடிய மனு
இந்தியாவுக்காக மெக்சிகோவில் 2 தங்கப்பதக்கம் வென்ற போது மனு பாக்கர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் பெற இரண்டரை மாதங்கள் காத்திருந்துள்ளார்.
பொதுவாக, வீரர்கள் ஒரே வாரத்தில் இதற்கான உரிமம் பெறுவர்.
அந்த நிகழ்வினை நினைவுகூர்ந்து பெரிய ராம் கிஷன் பாக்கர், "2017-ஆம் ஆண்டு மே மாதம், வெளிநாட்டில் இருந்து ஒரு பிஸ்டலை இறக்குமதி செய்ய விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்கள் விண்ணப்பத்தை ஜாஜர் மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது,” என்றார்.
"பின்னர் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. அப்போது உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் ‘தற்காப்புக்காக’ என்று காரணம் குறிப்பிடப்பட்டது தெரியவந்தது,” என்றார்.
இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயம் குறித்து விசாரித்து, 7 நாட்களில் உரிமம் வழங்கப்பட்டது.
மனு பாக்கரின் வகுப்பு தோழர்கள், இவரை ‘ஆல்-ரவுண்டர்’ என அழைத்து வந்துள்ளனர். ஏனெனில், மனு பாக்கர் குத்துச்சண்டை, தடகளம், ஸ்கேட்டிங், கராத்தே, ஜூடோ என பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வந்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)