ராஜா தேசிங்கு வரலாற்றில் இடம் பிடித்த 'வழுதாவூர் கோட்டை' அரசியல் சூழ்ச்சிகளால் சிதைந்த கதை

வழுதாவூர் கோட்டை
    • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வட தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகித்த வழுதாவூர் கோட்டை தற்போது வெறும் சிதிலங்களாக காட்சியளிக்கிறது. ராஜா தேசிங்குவுடன் தொடர்புடைய இந்தக் கோட்டை இப்படி சிதைந்துபோனது ஏன்?

விழுப்புரத்திலிருந்து முண்டியம்பாக்கம் - திருக்கனூர் வழியாக சென்றால் 28வது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது வழுதாவூர் கிராமம். இங்கு வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது ஒரு சிதிலமடைந்த கட்டடம். உள்ளூர் மக்களால் பங்களா கோட்டை என அழைக்கப்படும் இந்தக் கட்டடம், ஒரு காலத்தில் பிரமாண்டமாக விரிந்து பரந்திருந்த வழுதாவூர் கோட்டையின் ஒரு சிறு பகுதி. இப்போது இந்தக் கட்டடமே, மரங்களும் புதர்களும் சூழ பாழடைந்து காணப்படுகிறது.

அந்தக் கட்டடத்தில் இருந்து சிறிது தூரத்தில், கோட்டையின் மிகப் பெரிய சுற்றுச்சுவர் இருந்த இடத்தில் அதன் சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தற்போது எஞ்சியிருக்கும் பகுதி கோட்டையின் தானியக் களஞ்சியமாக இருந்ததாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இதன் சுற்றுச்சுவர்கள் இப்போதும் நேர்த்தியாக, உறுதியாகவே காணப்படுகின்றன. இந்தக் கட்டடம் செங்கல்லாலும் சுண்ணாம்புக் காரையாலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடத்தின் கீழ் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் அடித்தளமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வராக நதியின் கரையில், புதுச்சேரியின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் வழுதாவூர், ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.பி. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த இடம் இருந்திருக்கிறது என்கிறார், 'பெரம்பலூர் மாவட்ட வரலாறு' புத்தகத்தின் ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஜெயபால் ரத்தினம்.

எழுத்தாளர் ஜெயபால் ரத்தினம்
படக்குறிப்பு, எழுத்தாளர் ஜெயபால் ரத்தினம்

பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சிக்காலங்களில் பெரிதாக முக்கியத்துவம் பெற்றிடாத இவ்வூர், விஜயநகர ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் குறிப்பாக செஞ்சி நாயக்க மரபு உருவானபின் ஓரளவு நிர்வாக முக்கியத்துவம் பெற்றது. விஜயநகர ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, தமிழகப் பகுதிகளில் காலூன்றிய பீஜப்பூர் சுல்தான் அரசின் ஆட்சிக் காலம், அதன் தொடர்ச்சியாக அமைந்த மராட்டிய அரசின் காலகட்டம், தொடர்ந்து வந்த ஆற்காடு நவாபின் ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த பல முக்கிய அரசியல் நிகழ்வுகளிலும் போர்களிலும் வழுதாவூருக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது என்கிறார் ஜெயபால் ரத்தினம்.

"செஞ்சி நாயக்க அரசின் காலகட்டத்தில் வழுதாவூர் ஒரு சீர்மையாக பிரிக்கப்பட்டு செயல்பட்டது. வழுதாவூரில் ஒரு படைப் பிரிவும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதன் காரணமாகவே வழுதாவூரில் ஒரு கோட்டை கட்டப்பட்டது" என்கிறார் ஜெயபால் ரத்தினம்.

நாயக்க அரசு வீழ்ச்சியடைந்து பீஜப்பூர் சுல்தானுக்குக் கீழ் இந்தப் பகுதிகள் வந்தபோது, வேலூர், செஞ்சி, வாலிகண்டபுரம் ஆகிய மூன்று இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு நிர்வாகப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. அதில் செஞ்சி நிர்வாகப் பிரிவில் வழுதாவூர் இடம்பெற்றிருந்தது.

வாலிகண்டபுரம் ஆளுநராக செயல்பட்ட ஷேர் கான் லோடி என்பவர், தனது ஆளுமைக்கு உட்பட்டிருந்த புதுச்சேரி கிராமத்தை கிழக்கிந்திய பிரெஞ்சு வணிகக் குழுவினர் வணிகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தார். அதேநேரம், டச்சு மற்றும் ஆங்கிலேய வணிகக் குழுவினர் செஞ்சி ஆளுநரை அணுகி தாங்கள் வணிக செயல்பாடுகளுக்காக வழுதாவூரில் தளம் அமைத்துக்கொள்ள அனுமதி கோரினர். ஆங்கிலேய குழுவினர் வழுதாவூரில் இருந்து செயல்பட செஞ்சியின் ஆளுநரான நாசிர் முகமதுகான் அனுமதி வழங்கினார்.

வழுதாவூர் கோட்டை

ஷேர் கான் லோடியால் கைப்பற்றப்பட்ட வழுதாவூர் கோட்டை

கி.பி. 1676ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வழுதாவூர் கோட்டையில் நாசிர் முகமதுகான், தங்கியிருந்தபோது வாலிகண்டபுரம் ஆளுநரான ஷேர் கான் லோடி கோட்டையைத் தாக்கினார். அத்தாக்குதலைச் சமாளிக்க முடியாதா நாசிர் முகமதுகான், கோட்டையைக் கைவிட்டு இரவோடு இரவாக செஞ்சிக்கு சென்றுவிட்டார். இதனால், வழுதாவூர் கோட்டை மட்டுமல்லாது அவ்வூரைச் சுற்றியிருந்த மற்ற சில ஊர்களும் ஷேர் கான் லோடியால் கைப்பற்றப்பட்டன. அப்போதிலிருந்து வழுதாவூரும் அதன் கோட்டையும் வாலிகண்டபுரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக மாறின.

பீஜப்பூர் சுல்தானாக இருந்த அடில் ஷா மறைந்த பிறகு, மராட்டிய அரசரான சிவாஜி தெற்கு நோக்கி படையெடுத்தார். சிவாஜிக்கும் ஷேர் கான் லோடிக்கும் இடையே நடைபெற்ற போரில் சிவாஜி வெற்றிபெற்று, வாலிகண்டபுரத்தின் கீழ் இருந்த பகுதிகளை தனதாக்கினார். ஒரு கட்டத்தில் பீஜப்பூர் சுல்தானின் கீழ் இருந்த பகுதிகள் அனைத்தும் சிவாஜியின் கீழ் வந்தன.

அவற்றை நிர்வகிப்பதற்காக செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, செஞ்சி சுபா என்ற நிர்வாகப் பகுதி உருவானது. இதையடுத்து, வழுதாவூரும் அதன் கோட்டையும் செஞ்சி சுபாவுக்குக் கீழ் வந்தன. வழுதாவூர் கோட்டையில் மராட்டிய படைப்பிரிவு ஒன்று செயல்பட்டது.

வழுதாவூர் கோட்டை

சிவாஜி மறைந்த பிறகு தில்லி சுல்தானாக இருந்த ஔரங்கசீப் மராட்டியப் பகுதிகளைக் கைப்பற்ற விரும்பினார். இதற்காக சுல்பிர்கான் என்ற தளபதியின் தலைமையில் பெரும்படை ஒன்றைத் தென்னகம் நோக்கி அனுப்பி வைத்தார். பல ஆண்டு கால கடும் போராட்டத்திற்குப் பிறகு செஞ்சிப் பகுதிகள் சுல்பிர்கானிடம் வீழ்ந்தன. இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நவாபி பகுதி உருவாக்கப்பட்டது. அதன் முதல் நவாபாக சுல்பிர்கான் இருந்தார்.

முகலாயப் பேரரசின் கீழ் கோட்டைகள் ஜாகிர் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டன. சயீத்கான் என்பவர் வழுதாவூர் கோட்டையின் ஜாகிர்தாராக இருந்தார். சயீத் கானுக்குப்பின் அவரது மகனான மகமது கான் வழுதாவூர் ஜாகிர்தார் ஆனார். செஞ்சியின் ஜாகிர்தாராக இருந்த சொரூப் சிங் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் தேசிங்கு ராஜா அதன் ஜாகிர்தாரராக பொறுப்பேற்றுக்கொண்டார். சொரூப் சிங்கிடம் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்த வழுதாவூர் ஜாகிர்தாரான மகமது கான், ராஜா தேசிங்குவிடமும் மரியாதை வைத்து அவருடன் இணக்கமாகவும் நட்புடனும் செயல்பட்டு வந்தார்.

ராஜா தேசிங்கு செஞ்சி ஜாகிர்தாராக செயல்படத் துவங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, ஆற்காடு நவாபான சதக்கத்துல்லா கான் செஞ்சி ஜாகிர் முகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரித் தொகையை செலுத்துமாறு கடிதம் அனுப்பினார். சொரூப்சிங் போல அவரது மகனும் அந்த கோரிக்கையைப் புறம் தள்ளினார். மீண்டும் மீண்டும் கடிதம் அனுப்பியும் பயன் இல்லாததால், நவாப் தனது அதிகாரிகளை நேரில் அனுப்பி வைத்தார்.

ராஜா தேசிங், மகமது கான் கொலை

ராஜா தேசிங்கு தன்னை சந்தித்தவர்களிடம் நிலுவை வரியை செலுத்த முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால், ஜாகிரைக் கைப்பற்றும் நோக்கில் தோடர்மால் என்பவர் தலைமையில் நவாப் தனது படையை செஞ்சிக்கு அனுப்பி வைத்தார். அப்படையுடன் சேத்துப்பட்டு ஜாகிர்தார், கள்ளக்குறிச்சி கோட்டையின் ஜாகிர்தார் ஆகியோரும் படைகளை அனுப்பிவைத்தனர்.

தன்னுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த வழுதாவூர் ஜாகிர்தாரான மகமதுகான், செய்தி அறிந்தவுடன், திருமண ஏற்பாடுகளை கைவிட்டுவிட்டு, தனது படைகளுடன் செஞ்சிக்கு வந்து ராஜா தேசிங்குக்கு உறுதுணையாக நின்றார்.

வழுதாவூர் கோட்டை

இருதரப்புக்கும் இடையில் கடும் போர் நடைபெற்றது. முடிவில் ராஜா தேசிங்கும் மகமது கானும் கொல்லப்பட்டனர். செஞ்சியை நவாபின் படைகள் கைப்பற்றின. வழுதாவூர் உள்ளிட்ட செஞ்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த அனைத்துப் பகுதிகளும் ஆற்காடு நவாப் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாயின.

கி.பி. 1748ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரெஞ்சுப் படைகள் சென்னையைக் கைப்பற்றின. இந்த நடவடிக்கைக்கு ஆற்காடு நவாபான அன்வருதீன் கான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஆற்காடு நவாப் பிரதேசத்தில் இருக்கும் வில்லிய நல்லூரையும் (வில்லியனூர்), வழுதாவூரையும் தங்களுக்கு அளித்தால் சென்னையை விட்டு வெளியேறி விடுவதாக பிரெஞ்சு கவர்னர் தூப்ளே தெரிவித்தார். நவாப் அதனை ஏற்கவில்லை.

இதற்கிடையில், கி.பி. 1749ல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபான அன்வருதீனும் அவரது இளைய மகனும் கொல்லப்படனர். இந்தச் சூழலில் சந்தா சாகிப் ஆற்காடு நவாபாகவும் முசாபர் ஜங் ஹைதராபாத் நிஜாமாகவும் தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டு அந்தந்த இடங்களில் பதவி ஏற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார் தூப்ளே. அதன்படி அவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தங்களுக்கு உதவி செய்தமைக்கான நன்றிக் கடனாக, இவர்கள் பிரெஞ்சு வணிக குழுவின் தலைமையிடமான புதுச்சேரியை சுற்றிலும் அமைந்த ஆற்காடு நவாபுக்கு உட்பட்ட நூறு ஊர்களை தூப்ளேவுக்குப் பரிசாக வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட கிராமங்களில் வழுதாவூரும் அதன் கோட்டையும் இடம்பெற்றிருந்தன. வழுதாவூர் கோட்டையில் பல மாற்றங்களைச் செய்து, அக்கோட்டையை புதுச்சேரி நகரின் மேற்கு வாயிலாக அமையுமாறு ஏற்பாடு செய்துகொண்டார் தூப்ளே.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கி.பி. 1760-ல், வந்தவாசியில் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பிரெஞ்சுப் படை தோல்வியடைந்தது, அப்போரில் ஆங்கிலேயப்படைக்குத் தலைமை தாங்கிய அயர்கோட், தனது படைகளுடன் புதுச்சேரி நோக்கி விரைந்தார்.

புதுச்சேரியை நோக்கி வரும் ஆங்கிலேயப் படையை எதிர்க்க, அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவிட்டது.

தரைமட்டமான கோட்டை

இதனை எதிர்த்தவர்கள் காலில் சங்கிலி பூட்டப்பட்டு, கால்நடையாகவே புதுச்சேரியில் இருந்து வழுதாவூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த கோட்டையில் அடைக்கப்பட்டனர். அதே ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை வழுதாவூரை அடைந்தது. அவர்கள் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை அடித்து, விரட்டிவிட்டுக் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கினர். அயர்கூட்டால் அழிக்கப்பட்ட வழுதாவூர் கோட்டை அதற்குப் பின் புதுப்பிக்கப்படவில்லை.

கோட்டையின் அமைப்பு குறித்த விவரங்கள் முழுமையாக அறியக் கிடைக்கவில்லை என்றாலும், ஆங்கிலேய வரலாற்றாளரான ராபர்ட் ஆர்ம் என்பவரது நூல் வழியே சில விவரங்களை அறியமுடிகிறது என்றார் ஜெயபால் ரத்தினம்.

மகமது கானால் கட்டப்பட்டதாக கூறப்படும் சிதிலமடைந்த பள்ளிவாசலின் தற்போதைய நிலை
படக்குறிப்பு, மகமது கானால் கட்டப்பட்டதாக கூறப்படும் பள்ளிவாசலின் தற்போதைய நிலை

அதன்படி, தரை தளத்தில் கிழக்கு - மேற்காக முன்னூறு கெஜம் ( 274.32 மீ.) நீளமும் வடக்கு - தெற்காக இருநூற்றிப் பத்து கெஜம் ( 192.02 மீ.) நீளமும் கொண்டதாகவும் வெளிப்புற பாதுகாப்புச் சுவர்களுடனும் வட்டவடிவிலான உயர் கோபுரங்களுடனும் கட்டப்பட்ட கோட்டை இருந்ததாகவும் அதனைச் சுற்றி அகழியும் அதனைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியும் அமைந்திருந்தன. கோட்டையின் உட்புறம் குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இப்போது வழுதாவூரில் கோட்டை இருந்த பகுதி ஒரு மேடாகத் தென்படுகிறது. அந்தப் பகுதியை உள்ளூர்க்காரர்கள் கோட்டை பங்களா மேடு என்றழைக்கின்றனர். நீண்ட அகழியும், நாற்புறமும் நிற்கும் சிதைந்த காவற் கோபுரங்களின் சிதிலங்களும் அங்குக் கோட்டை இருந்ததற்கான தடயங்களாக நிற்கின்றன. இந்தப் பகுதியில் மகமத் கானால் கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பள்ளிவாசல் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

கோட்டைக்கு அருகிலேயே உள்ள மற்றொரு பள்ளிவாசலில் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகளும் காணப்படுகின்றன. தேசிங்கு ராஜாவின் நிர்வாகத்தில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் மராட்டியர்களின் வழிவந்த ஐந்து குடும்பங்களும் இன்னமும் இங்கு வசித்துவருகின்றனர்.

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்கள் யாவும் 'பெரம்பலூர் மாவட்ட வரலாறு' புத்தகத்தை எழுதிய ஜெயபால் ரத்தினம் பகிர்ந்தவையாகும்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு