குரங்குடன் மனிதனைச் சேர்த்து புதிய உயிரை உருவாக்க முயன்ற விஞ்ஞானிகள் - என்ன ஆனது தெரியுமா?

டார்வின், குரங்கு, மனிதன், குரங்கு மனிதன், பரிணாம வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹார்னெட் இதழின் கார்ட்டூனில் டார்வின், குறித்து வரையப்பட்ட கேலி சித்திரம்
    • எழுதியவர், டேலியா வென்ச்சுரா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

(2022- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

1871ஆம் ஆண்டில் ஆங்கில இயற்கையியலாளர் சார்லஸ் டார்வின் வெளியிட்ட ஒரு நூல் அறிவியலிலும், சமூகத்திலும், பொதுவாக மனித சிந்தனையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனிதர்கள் வாலில்லாக் குரங்குகளில் இருந்து வந்தவர்கள் என்று டார்வின் கூறினார் என்பது நீண்ட காலமாக நீடிக்கிற பிழையான ஒரு கருத்து. அப்படி ஒரு கோட்பாட்டை டார்வின் கூறவே இல்லை. மேலே குறிப்பிட்ட நூல் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் வெளியிடப்பட்ட கார்ட்டூன் இந்தப் பிழையான கருத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1910 இல், ஆஸ்திரியாவின் கிராஸில் நடந்த உலக விலங்கியல் மாநாட்டில் ரஷ்ய உயிரியலாளர் இலியா இவனோவிச் இவானோவ், ஒரு 'குரங்கிலிருந்து, மனிதனை' இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஒரு 'குரங்கு-மனிதனை' உருவாக்கும் சாத்தியக்கூறு பற்றி பேசினார்.

ஒரு நாள் நவீன மனிதர்களுக்கும் அவர்களின் நெருங்கிய உறவினங்களுக்கும் இடையில் கலப்பினங்களை உருவாக்க முடியும் என்று இவானோவ் கூறினார்.

இயற்கையான இனச்சேர்க்கை விஷயத்தில் தவிர்க்க முடியாமல் எழும் நெறிமுறை எதிர்ப்புகளை, செயற்கை கருவுறல் முறையின் பயன்பாடு தவிர்க்க உதவும் என்று அவர் கூறினார்.

1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்குப் பிறகுதான், பிரெஞ்சு நாவலாசிரியர் குஸ்டாவ் ஃப்ளூபெர்ட் தனது "Quidquidvolueris" (1837) இல் கற்பனை செய்த உயிரினத்தை உயிர்ப்பிக்க, இவானோவ் முயன்றார்.

1926 பிப்ரவரியில் அப்போது பிரென்ச் மேற்கு ஆப்ரிக்க கூட்டமைப்பில் இருந்த கயானாவிற்குப் புறப்பட்டார். வரலாற்றில் மிகவும் வினோதமான சோதனைகளில் ஒன்றைச் செய்ய அவர் திட்டமிட்டார். அதுதான் மனிதனுடன் ஒரு குரங்கை கலக்கச்செய்தல்.

சோவியத் ஒன்றியம் இதற்கு நிதி அளித்தது. அவர்கள் ஏன் இதனை ஆதரித்தார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் குழப்பம்தான் .

டார்வின், குரங்கு, மனிதன், குரங்கு மனிதன், பரிணாம வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 16 வயதில், "Quidquidvolueris" இல், Floubert ஒரு பிரேசிலிய அடிமையின் மகனான Djalioh மற்றும் ஓர் ஒராங்குடானுடன் ஒரு பிரெஞ்சு மானுடவியலாளர் உறவு கொள்ளக் கட்டாயப்படுத்திய கதையைச் சொன்னார்.

வானளாவிய புகழ்

இவானோவ் விலங்குகளின் கலப்பு மற்றும் செயற்கை கருவூட்டல் துறையில் தேர்ச்சி பெற்றவர்.

1896 இல் உடலியலில் முனைவர் பட்டத்திற்கு சமமான பட்டம் பெற்ற பிறகு, உலகப் புகழ்பெற்ற உடலியல் நிபுணர் இவான் பாவ்லோவுடன் பணிபுரிவதற்கு முன்பு பாரிஸில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தில் பாக்டீரியா துறையில் ஆராய்ச்சி செய்தார்.

பாவ்லோவ் நோபல் பரிசைப் பெற்ற அதே அறுவை சிகிச்சை நுட்பங்களைப் பயன்படுத்தி, கலப்பு இல்லாத குதிரைகளில் செயற்கை கருவூட்டல் நுட்பங்களை உருவாக்க விலங்குகளின் பாலின சுரப்பிகளைப் பிரித்தெடுக்க முடிந்தது.

அவரது ஆராய்ச்சி பின்னர் மற்ற பண்ணை விலங்குகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது மற்றும் இவானோவ் அவரது துறையில் சர்வதேச அளவில் முன்னணி நபராக ஆனார்.

இருப்பினும் பல விஞ்ஞானிகளைப் போலவே புரட்சி அவரை பாதித்தது. அவர் தனது ஆதரவாளர்களை இழந்தார் மற்றும் முதல் சில ஆண்டுகளில் முன்னெடுத்துச்செல்லும் வழியையும் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் 1924 வாக்கில், அவர் ஆஸ்திரியாவில் அந்த பழைய யோசனை அவரது மனதில் வடிவம் பெற்றது.

குரங்குடன் மனிதனைச் சேர்த்து புதிய உயிரை உருவாக்க முயன்ற விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேராசிரியர் இவனோவின் உருவப்படம். கலைஞர்: இலியா யெஃபிமோவிச் ரெபின்.

குரங்கும் கிடைத்தது பணமும் கிடைத்தது

விந்தணு நீக்கம் பற்றிய பரிசோதனைகளை தான் நடத்திக் கொண்டிருந்த பாஸ்டர் நிறுவனத்தில் அதைப் பற்றிப் பேசினார். அந்த யோசனை நல்ல வரவேற்பை பெற்றது. பிரெஞ்சு கயானாவில் கிண்டியா கிராமத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட் வசதிகளில் இருந்த சிம்பன்சிகளை வைத்து சோதனை நடத்தும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சலுகை மதிப்புமிக்கது. ஏனெனில் இது பெருமைமிகு நிறுவனத்தின் ஆதரவைக் கொண்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், சோவியத் யூனியனுக்கு ஆராய்ச்சிக்கு குரங்கு வகைகள் கிடைக்காமல் இருந்த பிரச்சனையையும் தீர்த்தது.

அவர் சோவியத் அரசின் அறிவுத்திறனுக்கான மக்கள் ஆணையர் அனடோலி லுனாச்சார்ஸ்கியிடம் திட்டத்திற்காக 15,000 டாலர்களை கோரினார். ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் ஒரு வருடத்திற்குப்பிறகு, அந்த நேரத்தில் போல்ஷிவிக் அரசில் விஞ்ஞானத்தின் முன்னணி புரவலர்களில் ஒருவரான Nikolay Petrovich Gorbunov, அரசின் அறிவியல் நிறுவனங்கள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

திட்டத்தைப் பற்றி ஆர்வம் காட்டிய கோர்புனோவ் அதை அரசு நிதி ஆணையத்திடம் வழங்கினார். அகாடமி ஆஃப் சயின்ஸுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்க அது பரிந்துரைத்தது.

"ஆப்பிரிக்காவில் மானுட- குரங்குகளின் கலப்பினத்தைப் பற்றிய பேராசிரியர் இவானோவின் அறிவியல் பணி"க்காக இது அளிக்கப்பட்டது. கடைசியாக குரங்குகள், பணம் மற்றும் அறிவுத்திறன் என்று அவருக்குத் தேவையான அனைத்தும் அவரிடம் இருந்தது.

குரங்குடன் மனிதனைச் சேர்த்து புதிய உயிரை உருவாக்க முயன்ற விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சாத்தியமற்ற இலக்கு

நீங்கள் நினைப்பது போலவே அவரது பணி தோல்வியடைந்தது.

அவர் முதல் முறையாக கிண்டியாவுக்குச் சென்றபோது, சிம்பன்சிகள் இன்னும் கருத்தரிக்கும் வயதை அடையவில்லை.

இவானோவ் பாரிஸுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அங்கு அவர் பாஸ்டர் நிறுவனத்தில் சிம்பன்சிகளைப் பிடிப்பதற்கான வழிகள் பற்றி அறிய தனது நேரத்தை செலவிட்டார்.

பிரபல அறுவை சிகிச்சை நிபுணரான செர்கி வோரோனோஃப் உடன் அவர் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த "புத்துணர்ச்சி சிகிச்சை"யைக் கண்டுபிடித்தவர் செர்கி.

பழைய வீரியம் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கையில் குரங்கு விரைகளின் துண்டுகளை பணக்கார, வயதான ஆண்களின் விரைப்பைகளில் அவர் ஒட்டினார்.

இவானோவ் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பியபோது, மூன்று சிம்பன்சிகளை மனித விந்தணுக்களைக் கொண்டு கருத்தரிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது தோல்வியடைந்தது.

ஆப்பிரிக்கப் பெண்களுக்கு தெரியாமலேயே, அவர்கள் அனுமதியின்றி, ஒராங்குட்டான் விந்துவைக் கொண்டு அவர்களை கருவுறச்செய்ய விரும்பினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பிரெஞ்சு அதிகாரிகள் அவரைத் தடை செய்தனர்.

எனவே, சோவியத் யூனியனுக்குத் திரும்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. தனது சோதனைகளைத் தொடர சிம்பன்ஸிகளையும் இங்கு கொண்டுவந்தார். அவரது கற்பனையை தனது வயிற்றில் சுமக்க தயாராகும் ரஷ்ய தன்னார்வலர்களை அவர் தேடினார்.

அதில் அவர் வெற்றி பெற்றபோதும் பயணத்தில் இறக்காத சிம்பன்சிகள், கருவூட்டல் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டன.

டார்வின், குரங்கு, மனிதன், குரங்கு மனிதன், பரிணாம வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

ரகசிய காவல்துறையால் கைது

இவானோவ் தனது சோதனைகளில் மூழ்கியிருந்தபோது, சோவியத் யூனியன் கலாசாரப் புரட்சியை சந்தித்துக் கொண்டிருந்தது.

அவர் "முன்னாள் நிபுணர்களில்" ஒருவராகவும், தாக்குதலுக்கு ஆளாகக்கூடியவராகவும் ஆனார். 1930 டிசம்பரில் அவர் ரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விவசாய வல்லுநர்களிடையே ஓர் எதிர்புரட்சிகர அமைப்பை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட்டு, கசாக் குடியரசின் தலைநகரான அல்மாஅடாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அவர் மீது குற்றம் சுமத்தியவர்களில் முக்கியமானவர் ஓரெஸ்ட் நெய்மன். இவானோவுக்குப்பிறகு கால்நடை மருத்துவ கழக ஆய்வகத்தின் தலைவராக நெய்மன் நியமிக்கப்பட்டார். இது அந்த நேரத்தில் பொதுவான நடைமுறையாக இருந்தது.

1931 இல் ஜோசப் ஸ்டாலின், நிபுணர்களுக்கு எதிரான அத்துமீறல்களை எதிர்த்தபோது அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அதற்குள் சிறைவாசம் அவரது உடல்நிலையை பாதித்தது. மாஸ்கோவுக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக இவானோவ் அல்மா-அட்டாவில் பக்கவாதத்தால் காலமானார்.

இதுதான் அவர் பற்றிய சுருக்கமான கதை.

சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு அறிஞர்கள் கலந்தாலோசிக்க முடிந்த அரசு காப்பகங்களில் கிடைத்த கடிதங்கள், குறிப்பேடுகள் மற்றும் டைரிகள் அவரது ஆராய்ச்சி பற்றிய விவரங்களை தருகின்றன.

இருப்பினும், "இந்த ஆவணங்கள் எதுவுமே பரிசோதனை ஏன் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தவில்லை" என்கிறார் இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளவரும், சோவியத்தில் பிறந்த ரஷ்ய வரலாற்றாசிரியருமான அலெக்சாண்டர் எட்கிண்ட்.

குரங்குடன் மனிதனைச் சேர்த்து புதிய உயிரை உருவாக்க முயன்ற விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது என்ன?
படக்குறிப்பு, இல்யா இவனோவிச் இவனோவ் (1870-1932).

இவானோவ் மட்டும் அல்ல

மனித-குரங்கு கலப்பினங்கள் பற்றிய இவானோவின் ஆர்வம் அவருக்கு மட்டுமே இருந்தது என்று சொல்ல முடியாது.

மனித மற்றும் மனிதரல்லாத விலங்குகளுக்கு இடையே கலப்பின அறிவியல் பற்றியஆர்வம் இவானோவுக்கு முன்னும் அவருக்குப் பின்னும் இருந்தது.

19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் இருந்து, ஜீன்-ஜாக் ரூசோ போன்ற நபர்களை இத்தகைய சோதனைகளின் ஆதரவாளர்களாகக் குறிப்பிடுகின்றனர்.

1971 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், யேல் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரான சார்லஸ் ரெமிங்டன், இந்த வகையான ஆராய்ச்சியை நியாயப்படுத்தி அதை முன்னறிவித்தார்.

இவானோவின் சமகால உயிரியலாளர்கள் அதைப் பற்றி சிந்தித்துள்ளனர். எனவே அவர் வாழ்ந்த உலகில் காணப்பட்ட இந்த யோசனை நமக்கு அபத்தமாகத் தோன்றலாம்.

1910 களின் நடுப்பகுதியில் இவானோவைப் போன்ற சோதனைகளை நடத்துவதற்கு டச்சு விலங்கியல் வல்லுநர் ஹெர்மன் மோயன்ஸ் காங்கோவுக்குச் செல்வதற்கு பாஸ்டர் இன்ஸ்டிட்யூட்டின் இணை இயக்குநரான எலி மெட்ச்னிகோஃப் ஏற்கெனவே வழி வகுக்க முயன்றார்.

முன்னணி ஜெர்மன் பாலியல் வல்லுநரான ஹெர்மன் ரோஹ்லேடர், மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் இடையிலான கலப்பினப் பரிசோதனைகளுக்கான திட்டங்களை உருவாக்கினார். சாத்தியமான கலப்பினமானது பரிணாம வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரத்தை வழங்கும் என்று அவர் நம்பினார்.

டார்வின், குரங்கு, மனிதன், குரங்கு மனிதன், பரிணாம வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கலப்பினங்கள் மனித தலையீடுகளாலும் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளன. படத்தில் காண்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலியின் கலப்பினத்தில் பிறந்த டைகான் (Tigon)

அறிவியல் vs மதம்

அத்தகைய முக்கியமான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது போல்ஷிவிக்குகளுக்கு மதிப்புமிக்கதாகத் தோன்றுகிறது என்று ஜெர்மனி விவசாய ஆணையத்தின் பிரதிநிதியான லெவ் ஃபிரிட்ரிக்சன் எழுதிய ஒரு கடிதம், சோவியத் அரசிடம் இவானோவின் முன்மொழிவு முதன்முதலில் வைக்கப்பட்டபோது அதனுடன் சேர்த்து அனுப்பப்பட்டது.

"பேராசிரியர் இவானோவ் முன்மொழிந்த கருப்பொருள், மத போதனைகளுக்கு ஒரு தீர்க்கமான அடியாக மாறலாம். மேலும் நமது பிரசாரத்திலும், திருச்சபையின் அதிகாரத்திலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதற்கான நமது போராட்டத்திலும் சரியாகப் பயன்படுத்தப்படலாம்" என்று ஃப்ரிட்ரிக்சன் கூறினார். .

அறிவுத்திறன் ஆணையத்தின் பெர்லின் பிரதிநிதியான செர்ஜி நோவிகோவ் என்பவரிடமிருந்து மற்றொரு கடிதம் இணைக்கப்பட்டது. அவர் கலப்பினத் திட்டத்தை "பொருளாதாரவாதத்திற்கான பிரத்யேகமான முக்கியமான பிரச்னை" என்று குறிப்பிட்டார்.

குரங்கு-மனித கலப்பில் இருந்து இவானோவ் ஒரு சந்ததியை அடைந்திருந்தால், "நாம் எவ்வளவு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதில் டார்வின் சரியானவர் என்பதை இது நிரூபிக்கும்" என்று எட்கைண்ட் தனது கட்டுரையில் "உயிரியல் மற்றும் உயிரியல் அறிவியல்களின் வரலாறு மற்றும் தத்துவம் பற்றிய ஆய்வுகள்" இதழில் விளக்குகிறார்.

மேலும் டார்வின் சொல்வது சரிதான் என்பது மதத்துக்கு எதிரான ஆயுதமாக இருந்தது. மூடநம்பிக்கைகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட சோவியத் அதிகாரிகளுக்கு இது உதவிகரமாக இருந்தது.

டார்வின், குரங்கு, மனிதன், குரங்கு மனிதன், பரிணாம வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

கனவை நனவாக்கும் வழிகள்

அந்த சோசலிச கற்பனைவாதம் மத ஒழிப்புக்கு அப்பாலும் சென்றது. அவர்கள் சமுதாயத்தை மாற்ற விரும்பினர்.

"அரசியல்வாதிகள், அரசியல் அமைப்பை மாற்றலாம், தொழில்களை தேசியமயமாக்கலாம் மற்றும் பண்ணைகளை பெரிய கூட்டுப்பண்ணைகளாக மாற்றலாம். ஆனால் மக்களை மாற்றும் பணி விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்கிறார் எட்கைண்ட்.

"சோவியத் சமுதாயத்தின் சோஷியலிச வடிவமைப்பில் மக்களைப் பொருத்துவதே இலக்காக இருந்தது."

இதைச் செய்வதற்கான ஒரு வழி "பாசிட்டிவ் யூஜெனிக்ஸ்" ஆகும். செயற்கை கருவூட்டலைப் பயன்படுத்தி விரும்பத்தக்க பண்புகளின் பரவலை விரைவுபடுத்துவது. போட்டித்தன்மை, பேராசை மற்றும் பொருட்களை வைத்திருக்கும் ஆசை போன்ற "பழமை"யில் இருந்து விடுவிப்பது.

இந்த கருதுகோளை ஆதரிக்கும் எட்கைண்ட் "மனிதகுலத்தை மாற்றுவதற்கு பல திட்டங்கள் இருந்தன,"என்று கூறுகிறார்.

"இவானோவின் திட்டம் மிகவும் தீவிரமானது. அது வெற்றியடைந்திருந்தால் மனிதர்கள் தீவிரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற முடியும் என்பதை அது காண்பித்திருக்கும்."

இந்த நோக்கம், குறைந்த அறிவு சார்ந்ததாக இருந்ததா என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

வோரோனோஃப் புத்துணர்ச்சி சிகிச்சை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இவானோவ் சிம்பன்சிகளை தங்கள் நிலத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்... தங்கள் வீட்டில் இளமையின் நீரூற்று இருக்கப் போகிறது என்ற நினைப்பு போல்ஷிவிக் தலைவர்களை ஒரு வேளை உற்சாகப்படுத்தியிருக்கக்கூடும்.

எப்படியிருந்தாலும் சிலர் இவானோவ் ஒரு அர்ப்பணிப்புமிக்க விஞ்ஞானி என்று கருதுகிறார்கள். ஏதாவது செய்ய முடியுமா என்பதை செய்தே தீரவேண்டும் என்ற நிலைக்கு கொண்டு சென்றவர் அவர்.

இயற்கையிலும் ஓரளவிற்கு மரபியல் ரீதியாகவும் நிகழ்ந்தாலும், பலர் காலடி எடுத்து வைக்க விரும்பாத ஒரு அரங்கில் அவர் காலடி பதித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு