'இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் சீனாதான்' - இந்திய முப்படை தலைமை தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் அது தொடரும் எனவும் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார். பல காயங்களை கொடுத்து இந்தியாவை பலவீனமாக்க நினைக்கும் பாகிஸ்தானின் மறைமுகப்போர் 2வது சவால் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்ததாகவும், இந்த ஆபரேஷனில் முடிவெடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா - சீனா இடையிலான உறவு இணக்கமாவதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்ட நேரத்தில் அனில் சௌகான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானும் எஸ்சிஓ மாநாட்டில் கலந்து கொண்டது.
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா, இந்திய ராணுவத்தின் நிலைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக கடந்த ஜூலை மாதம் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.
அனில் சௌகான் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Getty Images
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சௌகான், "ஒரு நாடு எதிர்கொள்ளும் சவால்கள் தற்காலிகமானவை அல்ல. அவை வெவ்வேறு வடிவங்களில் தொடரும். சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அது தொடரும் என நம்புகிறேன். பல காயங்களை கொடுத்து இந்தியாவை பலவனமாக்க நினைக்கும் பாகிஸ்தானின் மறைமுகப்போர் 2வது சவால் ஆகும்." எனக் கூறியுள்ளார்.
மேலும், "மற்றொரு சவால் என்னவென்றால், போருக்கான களங்கள் மாறிவிட்டன. தற்போது இது சைபர் மற்றும் விண்வெளியிலும் நடக்கிறது. நமது எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணுசக்தி நாடுகள். அவர்களுக்கு எதிராக எந்த மாதிரியான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது எப்போதுமே சவாலான ஒன்றாகவே இருக்கும்" எனக் கூறினார்.
கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் அவர் பேசினார்.
"ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பயங்கரவாத தாக்குதலுக்கான பழிவாங்கல் அல்ல. அது நமது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை காட்டுவதற்கானது. திட்டமிடுதல் முதல் இலக்கை தேர்வு செய்வது வரை ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது" என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் பன்முக ஆபரேஷன் ஆகும். ராணுவத்தின் முப்படைகளுடன் சைபர் பிரிவும் இணைந்து செயல்பட்டது என்றார் அவர்.
ஜெனரல் அனில் சௌகான் நேற்று (வியாழக்கிழமை) கோரக்பூர் சென்றடைந்தார். அங்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து கோர்கா போர் நினைவுச் சின்னத்தை மறுசீரமைக்கும் பணி மற்றும் கோர்கா அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
"சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது. அது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பாதிக்கக்கூடியது" என கடந்த ஜூலை மாதம் அனில் சௌகான் கூறியிருந்தார்.
சீனா - பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
ஆபரேஷன் சிந்தூரில், சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுடன் சண்டையிட்டன என ராகுல் சிங் குற்றம்சாட்டினார். இந்தியா–பாகிஸ்தான் மோதலை பாகிஸ்தானுக்கு கொடுத்த தனது ஆயுதங்களின் செயல்திறனை பரிசோதிக்கும் ஆய்வுக்களமாக சீனா பயன்படுத்தியது என்று அவர் விமர்சித்தார்.
அனில் சௌகானும் இதுபற்றி ஆபரேஷன் சிந்தூர் முடிந்த பிறகு பேசியிருந்தார். ஷங்ரி-லா டயலாக் பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு பிறகான பேட்டியில், "ஆபரேஷன் சிந்தூரின்போது சீனாவின் வர்த்தக செயற்கைக்கோளை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால், நமது நிலைகளை இலக்கு வைக்க பாகிஸ்தானுக்கு அது உதவியதா என்பதற்கு ஆதாரம் இல்லை." என்று அவர் கூறியிருந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது 'இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா' என்பது குறித்த கேள்விக்கும் அனில் சௌகான் பதிலளித்திருந்தார்.
ப்ளூம்பர்க் டிவி நேர்காணலில், 'விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல. அது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்' எனக் கூறினார்.
எனினும் இந்தியாவின் 6 விமானங்கள் தங்களது தாக்குதலுக்கு இலக்கானதாக பாகிஸ்தான் கூறியதை அவர் முற்றிலுமாக மறுத்தார்.
என்னைப் பொறுத்தவரை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை விட, அது ஏன் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பதே முக்கியம் என அனில் சௌகான் கூறினார்.
ஆனால் இதுதொடர்பாக எந்த எண்ணிக்கையையும் அவர் தரவில்லை.
சீனா நமக்கு சவால் எனக் கூறுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் இந்தியாவுக்கு விதித்த 50% வரிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள அதே நேரத்தில், சீனா நமக்கு சவாலாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் அனில் சௌகான்.
சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு மலர்வதற்கான சமிக்ஞைகள் தென்படுவதாக கூறப்பட்டது.
இந்திய பிரதமர் மோதி 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றிருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியா, சீனா, ரஷ்யாவின் உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"நாம் இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டதைப் போல தெரிகிறது. அவர்களுக்கு நீண்ட மற்றும் வளமான எதிர்காலம் அமையட்டும்" என தனது ட்ரூத் சோஷியல் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து கேட்டபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" என பதில் அளித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்றார்.
இதற்கு முன்பாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், இந்தியா - அமெரிக்கா உறவு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். டிரம்பை மீண்டும் விமர்சித்து அந்த கருத்தை பதிவிட்டிருந்தார்.
"டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அது முடிந்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். .
அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக டிரம்பை பால்டன் விமர்சித்தது அது முதல்முறை அல்ல.
முன்னதாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை தடுக்காது என தெரிவித்திருந்தார்.
பால்டன் டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் ஆவார். அவர் டிரம்ப் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












