'குடிப்பதற்கு உகந்த நீரல்ல' - பெருந்துறை சிப்காட் கழிவுநீரால் பக்கத்து கிராமங்களில் என்ன பிரச்னை?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகம் அமைந்துள்ள ஈங்கூர் உள்ளிட்ட 5 கிராம ஊராட்சிகளிலுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுள்ள பல்வேறு இடங்களிலும் 'இந்த ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல' என்று கிராம ஊராட்சி நிர்வாகங்களால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் நேரில் சென்றது.
மொத்தம் 2700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிலுள்ள சாய ஆலைகள் உள்ளிட்ட ஆலைகள், சிப்காட் வளாகத்தில் துவங்கும் நல்லா ஓடையில் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை அனுப்புவதே இந்த பாதிப்புக்குக் காரணமென்கின்றனர் அங்குள்ள மக்கள்.
பாதிக்கப்பட்டுள்ள ஈங்கூர், வரப்பாளையம், வாய்பாடி, முகாசிபிடாரியூர், கூத்தம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இணைந்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயக்கம் என்ற பெயரில் போராடி வருகின்றனர். மக்கள் நலச்சங்கம் என்ற அமைப்பும் இதே விஷயங்களுக்காகp போராடுகிறது.
''1990ல தொழில் வளர்ச்சிக்காக எங்க ஊர்ல 2700 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துனாங்க...!'' என்கிறார் உதவி பேராசிரியரான பிரசாத்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவால் தோல் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மக்களின் எதிர்ப்பால் மேலும் 20 ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. அரசு கமிட்டிகளை அமைத்து 13 விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்பின் ஓடையில் டிடிஎஸ் மீட்டர் வைத்து நீர் மாசு அளவு ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படுகிறது. தற்போது நீர் மாசு அளவு குறைந்திருந்தாலும் ஏற்கெனவே விஷமாக மாறியுள்ள நிலத்தடி நீரின் தன்மை மாறவில்லை என போராட்டக்குழுவினர் கூறுகின்றனர்.
விஷமாக மாறியுள்ள நிலத்தடி நீரின் பாதிப்பு வீரியத்தை இங்குள்ள பெண்களும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
''வீட்டுக்கு ஒரு ஆளுக்கு 55 லிட்டர்தான் குடிதண்ணி கொடுக்குறாங்க...ஆனா எங்களுக்கு மத்த உபயோகத்துக்கு என்ன பண்றது?'' என்கிறார் ஈங்கூரைச் சேர்ந்த செம்மலர்.
இப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், மற்ற அன்றாடப் பணிகளுக்கும், கால்நடைகளுக்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் தோல் அரிப்பு, கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு என பல பாதிப்புகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் இங்குள்ள மக்கள்.
''இந்த தண்ணியில குடிச்சா பிய்ச்சு எடுக்குதுங்க. ஆடு, மாடுக்கெல்லாம் வயித்தால போகுதுங்க...!'' என்கிறார் கவுண்டனூரைச் சேர்ந்த சரசாள்
ஆலைகளுக்கு தனித்தனி சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.ஆனால் சுத்திகரிப்பு முறையாக நடப்பதில்லை என கூறும் போராட்டக்குழுவினர், சுத்திகரிப்பு செய்து 80 சதவீத நீரை மறுசுழற்சியில் பயன்படுத்துவற்குப் பதிலாக குறைந்த விலையில் அரசு தரும் காவிரி நீரை வாங்கி உற்பத்தி நடப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
''தற்போது ஆலைகளுக்கு காவிரித் தண்ணீர் லிட்டர் 11 பைசாவுக்குத் தரப்படுகிறது.'' என்கிறார் வாய்பாடியைச் சேர்ந்த பொறியாளரான தினேஷ்குமார்.
சிப்காட் வளாகக் கழிவுநீரால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து, சிப்காட் திட்ட அலுவலர் (பொறுப்பு) சுஜா பிரியதர்ஷிணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அதற்கு பதிலளித்த அவர், ''ஒவ்வொரு ஆலையிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரின் தன்மையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்கிறது. நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து, ஆலைகளுக்கு வழங்குவதற்கு ரூ.120 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. கடந்த ஜூனில் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் துவங்கும். இந்த பணிக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.'' என்றார்.
பெருந்துறை சிப்காட் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவிடமும் பிபிசி தமிழ் இந்த கேள்விகளை முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ''ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆன்லைன் முறையில் கண்காணிக்கிறோம். அனுமதிக்கப்பட்ட அளவில்தான் நீர் மாசு உள்ளது. புதிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தபின், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிப்காட் வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரின் மாசு அளவை தினமும் இணையத்தில் பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலைகளுக்குத் தரப்படும் காவிரி நீரின் விலையை நிர்ணயம் செய்வது குறித்த மக்களின் கோரிக்கையும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை அரசு முடிவு செய்யும்.'' என்றார்.
சிப்காட் வளாக ஆலைக்கழிவு நீர் சுத்திகரிப்புப் பணிகளை தீவிரமாகக் கண்காணிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வு என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



