விசா முதல் விமான டிக்கெட் வரை எல்லாமே போலி - தொடரும் வெளிநாட்டு வேலை மோசடிகள்

'போலி விசா... போலி உத்தரவு... போலி டிக்கெட்' - வெளிநாட்டு வேலைகளை குறிவைத்து நடக்கும் மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களைக் குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன (சித்தரிப்புப் படம்)
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"மூட்டை தூக்குவதில் தினசரி 600 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், வங்கியில் வாங்கிய கடனுக்கு மாதம் 18 ஆயிரம் தவணை செலுத்த வேண்டும். கடனை அடைப்பதற்காகவே காய்கறி மூட்டைகளைத் தூக்குகிறேன்" என்கிறார், திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் முகமது பாசில் ஷா.

இத்தனைக்கும் கடந்த ஆண்டுதான் இவர் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பிரிட்டனில் மென்பொறியாளர் வேலையை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய நாமக்கல் தனியார் நிறுவனத்திடம் 19 லட்ச ரூபாயை இவர் இழந்துவிட்டார்.

"நான் இழந்த பணம் இன்னும் கைக்கு வரவில்லை. ஆனால் வீட்டின் மீது வங்கியில் வாங்கிய கடனை அடைக்காவிட்டால் வீடு ஏலத்திற்கு வந்துவிடும்," எனவும் அவர் வேதனைப்பட்டார்.

தன்னைப் போல வெளிநாட்டு வேலையை நம்பி ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். போலி நிறுவனங்களைக் கண்டறிவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதையும் மீறி இளைஞர்கள் ஏமாறுவது ஏன்?

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமையன்று திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த முகமது பாசில் ஷா புகார் மனு ஒன்றை அளித்தார்.

அவர் தனது மனுவில், "வெளிநாட்டில் வேலைகளை ஏற்பாடு செய்து தருவதாக நாமக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து அதன் உரிமையாளர் தங்கராசுவிடம் பேசினேன்" எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 17- ஆம் தேதி தங்கராசுவை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தாகக் கூறியுள்ள முகமது பாசில் ஷா, "பிரிட்டனில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு சுமார் 19 லட்ச ரூபாய் செலவாகும் எனவும் தங்கராசு கூறினார்." எனப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

'போலி விசா... போலி உத்தரவு... போலி டிக்கெட்' - வெளிநாட்டு வேலைகளை குறிவைத்து நடக்கும் மோசடி
படக்குறிப்பு, வெளிநாட்டு வேலையை நம்பி ஏராளமான இளைஞர்கள் தன்னைப் போல் ஏமாந்துள்ளதாகக் கூறுகிறார் முகமது பாசில் ஷா

'19 லட்சம் செலவு... மாதம் 3 லட்சம் சம்பளம்'

பிரிட்டனில் வேலை கிடைத்தால் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று நாமக்கல் தனியார் நிறுவனம் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"பிரிட்டனில் உள்ள குடியுரிமை வழக்கறிஞர்களுக்கு 15 லட்சம் ரூபாய் தர வேண்டுமென தங்கராசு கூறினார். மீதமுள்ள தொகையை வேலையை ஏற்பாடு செய்து தரும் தங்களுக்கு கமிஷனாக எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார்," என பிபிசி தமிழிடம் முகமது பாசில் ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு முன்பு பலரையும் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பியது போன்ற ஆவணங்களை அவர் காட்டினார். அங்கே அவர்கள் வாங்கும் சம்பள ரசீதுகளைப் பார்த்த பிறகு அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் எண்ணம் தோன்றவில்லை," என்று கவலையுடன் தெரிவித்தார்.

முகமது பாசில் ஷாவின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் மற்றும் அண்ணனுடன் அவர் தற்போது வசித்து வருகிறார். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வங்கியில் வீட்டை அடமானம் வைத்துத் தனது தாய் பணம் கொடுத்ததாகக் கூறுகிறார், முகமது பாசில் ஷா.

இதன் பிறகு கடந்த ஆண்டு பல்வேறு காலகட்டங்களில் தங்கராசுவின் வங்கிக் கணக்குக்கு 18 லட்சத்து 91 ஆயிரத்து 810 ரூபாயை முகமது பாசில் ஷா அனுப்பியுள்ளார்.

'போலி விசா... போலி உத்தரவு... போலி டிக்கெட்' - வெளிநாட்டு வேலைகளை குறிவைத்து நடக்கும் மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது பாசில் ஷாவின் புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது (சித்தரிப்புப் படம்)

'பாஸ்போர்ட்டை முடக்குவதாக மிரட்டினார்'

"தங்கராசு கேட்ட பணத்தை முழுமையாக அனுப்பியும் வேலைக்கான எந்த உத்தரவும் வரவில்லை. எப்போது விசா மற்றும் வேலைக்கான உத்தரவு கிடைக்கும் எனக் கேட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் வரும் என்று கூறினார். ஆனால், அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது," எனவும் அவர் தெரிவித்தார்.

ஓராண்டு கடந்தும் முகமது பாசில் ஷா கொடுத்த பணத்தைத் தனியார் நிறுவனம் திருப்பித் தரவில்லை. "அவரது அலுவலகத்திற்குப் பலமுறை சென்று கேட்டபோது, பாஸ்போர்ட்டை முடக்கிவிடுவதாக மிரட்டினார்." எனப் புகார் மனுவில் முகமது பாசில் ஷா தெரிவித்துள்ளார்.

"இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நிம்மதியான தூக்கம் இல்லை. சாப்பிடும் எண்ணமே வர மறுக்கிறது. உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்குப் போனால் சங்கடப்பட நேரிடும் என்பதால் செல்வதில்லை. எதற்கும் பயனில்லாமல் இருக்கிறேன். பணம் முடங்கிவிட்டது. நான்தான் அதை மீட்டாக வேண்டும்" எனக் கூறி கலங்குகிறார், முகமது.

அதோடு, "இதுபோன்ற நிறுவனங்களிடம் தன்னைப் போல யாரும் ஏமாறாமல் இருக்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார். இவரது புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக, தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தங்கராசுவிடம் விளக்கம் பெறுவதற்குப் பலமுறை பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

'போலி விசா... போலி உத்தரவு... போலி டிக்கெட்' - வெளிநாட்டு வேலைகளை குறிவைத்து நடக்கும் மோசடி
படக்குறிப்பு, அயல்நாட்டு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி அதிகளவில் போலி நிறுவனங்கள் இயங்கி வருவதாகக் கூறுகிறார் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடுவோருக்கு ஆலோசனை வழங்கி வரும் பஷீர் அகமது.

திண்டுக்கல் நபருக்கு டெல்லியில் கிடைத்த அதிர்ச்சி

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த குரூமூர்த்தியின் கதையும் ஏறக்குறைய இதையொட்டியே உள்ளது.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த குரூமூர்த்திக்கு சமூக ஊடகங்களின் மூலம் வெளியான விளம்பரம் ஒன்று தென்பட்டுள்ளது.

அசர்பைஜான் நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்திருந்தது. அதைப் பார்த்து குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

"ஒன்றரை லட்சம் ரூபாயை சேவைக் கட்டணமாகச் செலுத்தினால் வேலை வாங்கித் தர முடியும்," என தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் கூறியதாக மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் குரூமூர்த்தி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் பிறகு தனது படிப்பு தொடர்புடைய ஆவணங்களை அவருக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ளார். அபிஷேக் கூறியபடி சென்னை விமான நிலையத்தில் வைத்து வேலைக்கான இ-விசா, பணி உத்தரவு ஆகியவற்றை சுடலைக்குமார் என்பவரிடம் தான் பெற்றதாக புகார் மனுவில் குருமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து அசர்பைஜானுக்கு செல்லும் வகையில் குருமூர்த்தியின் பயணத் திட்டம் வடிமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், டெல்லியில் விமான நிலைய அதிகாரிகளின் ஆய்வில் குருமூர்த்தியிடம் இருந்தது, போலி விசா மற்றும் போலி நியமன உத்தரவு என்பது தெரிய வந்துள்ளது.

தன்னைப் போலவே மேலும் மூன்று பேர் தலா ஒன்றரை லட்சம் ரூபாயை அபிஷேக்கிடம் கொடுத்து ஏமாந்திருப்பதும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நவம்பர் 10-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த சுடலைக்குமார் என்ற நபரை போலீஸ் கைது செய்துள்ளது.

"அயல்நாட்டு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி அதிகளவில் போலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. டெல்லி, மும்பை, சென்னை உள்பட தலைநகரங்களில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைக் காட்டி அவர்களின் முகவர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன." எனக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஆலோசகரான பஷீர் அகமது.

இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடுவோருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். "அங்கீகரிக்கப்பட்ட முகவர்களே சில நேரங்களில் போலியான நபர்களிடம் ஏமாறும் நிகழ்வுகளும் நடந்துள்ளது." என்கிறார் பஷீர் அகமது.

'போலி விசா... போலி உத்தரவு... போலி டிக்கெட்' - வெளிநாட்டு வேலைகளை குறிவைத்து நடக்கும் மோசடி

பட மூலாதாரம், NKLDistrictPolice/FB

'ஏழு பேருக்கு அதிர்ச்சி கொடுத்த விமான டிக்கெட்'

சென்னையைச் சேர்ந்த காஜா மொய்தீன், மலேசியாவுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கடந்த ஆண்டு தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

தரமணியை சேர்ந்த ராஜேஷ் என்ற நபர், புருனேவுக்கு உதவியாளர், எலக்ட்ரீஷியன் பணிக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறியதால் ஏழு பேரிடம் ஏழு லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்ததாகப் புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.

"விசாவையும் எங்களிடம் காட்டினார். புருனே செல்வதற்கான டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்தார். சென்னை விமான நிலையத்திற்குள் ஏழு பேரையும் வழியனுப்பி வைத்தோம். ஆனால், போன வேகத்தில் அவர்கள் திரும்பி வந்தனர்." என பிபிசி தமிழிடம் காஜா மொய்தீன் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஏழு பேருக்கும் போலி விமான டிக்கெட்டும் போலி விசாவும் தயாரித்துக் கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.

"ராஜேஷின் முகவரி உள்பட அனைத்தும் போலி எனப் பிறகுதான் தெரிய வந்தது. தற்போது வரை அவர் தலைமறைவாகவே உள்ளார்," எனக் கூறுகிறார் காஜா மொய்தீன்.

"படித்தவர்களாக இருந்தால் அந்தந்த நாட்டின் சட்ட விதிகளையும் முகவர்கள் குறித்தும் நன்கு விசாரித்துவிட்டு வெளிநாடு செல்கின்றனர். படிக்காதவர்களைப் பல்வேறு வகைகளில் ஏமாற்றுகின்றனர்." எனக் கூறினார் பஷீர் அகமது.

'போலி விசா... போலி உத்தரவு... போலி டிக்கெட்' - வெளிநாட்டு வேலைகளை குறிவைத்து நடக்கும் மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் விமான நிலைய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஏழு பேரிடம் போலி விமான டிக்கெட்டும் போலி விசாவும் இருந்தது தெரிய வந்தது

'3281 போலி முகவர்கள்' - இந்திய வெளியுறவுத் துறை

  • வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்கள், அதிகாரபூர்வ முகவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களின் பட்டியல், இந்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், தற்போது வரை 2414 என்ற எண்ணிக்கையில் ஆள் சேர்ப்பு முகவர்கள் (Active Recruiting Agents) உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரையில் 3281 போலி முகவர்கள் அடையாளம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டு, அவர்களின் பெயர்களையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

இதைப் பற்றிப் பேசிய பஷீர் அகமது, "ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை பேரை எந்த நாட்டில் உள்ள நிறுவனத்திற்குப் பணியமர்த்தும் உத்தரவைப் பெற்றுள்ளார்களோ அதற்கேற்ப முன்வைப்புத் தொகையை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும்." எனக் கூறுகிறார்.

அலுவலகம் அமைந்துள்ள இடம், அதன் வரவு செலவு, பின்னணி உள்பட அனைத்தும் ஆராய்ந்த பின்னரே இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகம் மூலமாக உரிமம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

'முகவருக்கும் பாதிப்பு ஏற்படும்'

"ஒவ்வொரு நாடுகளும் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் பல்வேறு விதிமுறைகளைக் கையாள்கின்றன. தங்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சம்பளம், விடுமுறை ஆகியவற்றை வழங்குகின்றன. இதில் ஏதேனும் பாதிப்பு தொழிலாளிக்கு நேர்ந்தால் ஆள்சேர்ப்பு முகவருக்கு பாதிப்பு ஏற்படும்," எனவும் பஷீர் அகமது தெரிவித்தார்.

போலி நிறுவனங்களைக் கண்டறிவது குறித்து விளக்கிய அவர், "லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டு போன்றவற்றை வைத்திருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முகவரா என்பதை இணையதளத்தில் எளிதில் சோதித்துப் பார்க்கலாம்." என்கிறார்.

"எந்த நாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்ப உள்ளனரோ, அந்த நாட்டில் உள்ள நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம், கூறப்படும் சம்பளம் ஆகியவற்றைச் சரிபார்ப்பது அவசியம்," எனக் கூறும் அவர், "வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தையும் ஆராய வேண்டும். கறுப்புப் பட்டியலில் அந்த நிறுவனம் உள்ளதா என்பதை அறிவதும் அவசியம்." என்கிறார்.

தொடர்ந்து பேசிய பஷீர் அகமது, "வெளிநாடுகளில் காலாவதியான நிறுவனங்களுடன் இந்தியாவில் உள்ள சில போலி முகவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆட்களை அனுப்புவதாகக் கூறி ஏமாற்றுகின்றனர். தற்போது அனைத்தையும் சரிபார்க்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏமாறாமல் தவிர்க்கும் வழிகள் என்ன?

  • வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் மூலமாகச் செல்ல வேண்டும்.
  • அரசிடம் பதிவு பெறாத முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • பணிபுரியப் போகும் நிறுவனம், பணிக்கான ஒப்பந்தம், விசா உள்பட அனைத்து ஆவணங்களும் முழுமையாகக் கிடைத்த பிறகு பயணம் மேற்கொள்ளலாம். சுற்றுலா விசாவில் பணிக்குச் செல்வது சட்ட விரோதம் என்பதால் சிறைத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
  • வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மையத்தை அணுகலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் இருந்து அழைப்பவர்கள் 1800 309 3793 என்ற எண்ணிலும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பதற்கு 0806 900 9900, 0806 900 9901 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம்.
  • இது தவிர, [email protected], [email protected] ஆகிய இமெயில் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு