பஹல்காம் சுற்றுலா மையத்தில் தற்போதைய நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைகளில் படிந்துள்ள பனியைப் போலவே இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
ஏப்ரல், 22 ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின் சாலைகள், சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
டாக்சி ஓட்டுநராக உள்ள அப்துல் ஹமீத் மீர் தனது அன்றாட தேவைகளை சமாளிக்க சிரமப்பட்டு வருகிறார்.
"இங்கு இரண்டு முதல் மூன்று சுற்றுலா தளங்கள் உள்ளன. அங்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வோம். அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து வீட்டுச் செலவுகளைச் பார்த்து வந்தேன். தாக்குதலுக்கு பிறகு வீட்டில் முடங்கியுள்ளேன். வாழ்க்கையே மாறி விட்டது, வேலை எதுவுமில்லை. பிள்ளைகள் படிக்கின்றனர் அதற்கு அதிகம் செலவாகிறது. இவர்களைப் படிக்க வைக்க எந்த வசதியும் இல்லை.
மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரனுக்கு அன்று நானும் சென்றிருக்கிறேன். நேரில் நடந்ததைப் பார்த்தேன். அங்கு அனைத்து இடங்களிலும் பயம் நிலவியது." என்கிறார் அப்துல் ஹமீத் மீர்.
பஹல்காமின் உணவகம் மற்றும் ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் மீண்டும் பஹல்காமுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர இந்தியாவெங்கும் உள்ள சுற்றுலா நிறுவன சங்கங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு முன் பஹல்காம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தது. தாக்குதல் நடந்து ஒரு மாதமான பின்னும் வெகு சில சுற்றுலாப் பயணிகளே இங்கு வந்துள்ளனர்.
பஹல்காம் மக்களின் நிலை அப்படியே ஸ்தம்பித்துள்ளது. ஆனால் இங்குள்ள பிரபல லித்தர் ஆறு ஆர்ப்பரித்து ஓடுகிறது. அது இங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அது ஒரு செய்தியைக் கூறுகிறது. ஆறு ஓடும்... ஓடிக்கொண்டே இருக்கும்.. நீங்களும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



