அம்ரித்பால் சிங்: காரில் இருந்து பைக், மாற்று உடை- போலீஸை ஏமாற்றி தப்பித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்வதற்கான படலம் கடந்த மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது. அம்ரித்பால் சிங் உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை மட்டும் போலீஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.
இதனிடையே, வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் வழக்கறிஞர்கள், அம்ரித்பால் போலீஸாரின் காவலில் இருப்பதாக கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனு மார்ச் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அம்ரித்பாலை பிடிக்க தாங்கள் சிறப்பான நடவடிக்கையை எடுத்தபோதிலும் அவர் கைதில் இருந்து தப்பித்துவிட்டதாகவும் மோட்டார் சைக்கிளில் மாயமாவதற்கு முன்பாக அவர் தனது கார்களை மாற்றிக் கொண்டு தப்பித்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடங்கிய மார்ச் 18ஆம் தேதி, அம்ரிஸ்டர் மாவட்டத்தில் உள்ள கில்சியன் கிராமத்தில் தடுப்புகளை அமைத்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
அம்ரித்பால் சிங், அவரது கூட்டாளிகளின் நான்கு வாகனங்களின் கான்வாய் அங்கிருந்து சென்றது. அவற்றில் ஒரு மெர்சிடிஸ், இரண்டு ஃபோர்டு எண்டெவர்ஸ் மற்றும் ஒரு க்ரெட்டா ஆகியவை அடங்கும். போலீசார் அவர்களை நிறுத்துமாறு சைகை காட்டினர் ஆனால் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கான்வாய் தப்பி ஓடின.
மேற்குறிப்பிட்ட வாகனங்களைக் கண்டறிய, அருகிலுள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டன .
ஜலந்தர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஸ்வரந்தீப் சிங்கின் கூற்றுப்படி, இதற்குப் பிறகு அம்ரித்பால் "சாக்லேட் நிற ISuzu பிக்கப் வாகனத்தில் காணப்பட்டார்." ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மெஹத்பூர் பகுதியில் உள்ள சலேமா கிராமத்தின் அரசுப் பள்ளி அருகே அவர் காணப்பட்டார். அவர் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வாகனம் பின்னர் மீட்கப்பட்டது. ஆனால் அம்ரித்பால் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனையிட்டதில், ஒரு வாக்கி-டாக்கி செட், .315 போர் ரைபிள் ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
அதன் பின்னர், அம்ரித்பால் மாருதி பிரெஸ்ஸா காரில் பயணம் செய்தார் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தலைமையகம்) சுக்செயின் கில் கூறுகிறார். அவர் பயணித்த பிரெஸ்ஸா கார் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மெஹத்பூரின் பரபரப்பான சந்தையில் இருந்து தப்பிக்க அம்ரித்பால் இந்த வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கிருந்து 15-16 கிமீ தொலைவில் உள்ள நங்கல் அம்பியன் குருத்வாராவுக்கு சென்ற அம்ரித்பால் அங்கு உடைகளை மாற்றிக்கொண்டார். அவர் இந்த இடத்திற்கு உதவியாளரை வரவழைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர், அவர்கள் உள் சாலைகள் வழியாக மோகாவை நோக்கிச் சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images
“காலையிலிருந்தே போலீஸார் அங்கே இருந்தனர். ஆனால், அம்ரித்பால் வந்துசென்றது பின்னரே எங்களுக்கு தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் இந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன் அவர் உடைகளை மாற்றிக்கொண்டு உணவு உண்டார்,” என்று நங்கல் அம்பியன்பகுதியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிரெஸ்ஸா காரில் இருந்து சிலர் மோட்டார் சைக்கிளுக்கு மாறும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால், பிபிசியால் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முயடியவில்லை. காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு மாறியவர்களுள் அம்ரித்பாலும் இருந்தார் என சில தொலைக்காட்சி சேனல்கள் இந்த காட்சிகளை ஒளிபரப்பி கூறி வருகின்றன. புல்லட் பைக்கில் இருவர் செல்வதும் காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், அம்ரித்பால் தப்பிக்க உதவியதாகக் கூறப்படும் மன்பிரீத், குர்தீப் சிங், ஹர்பிரீத் சிங் மற்றும் குர்பஜ் சிங் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி சுக்செயின் கில் தெரிவித்தார்.
ஜலந்தர் காவல்துறையின் கூற்றுப்படி, வாரிஸ் பஞ்சாப் டி செயல்பாட்டாளர்கள் மீது சமூக அமைதியின்மையை உருவாக்குதல், உள்நோக்கத்துடன் கொலை செய்தல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டபூர்வமாக தங்களுடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அஜ்னாலா காவல் நிலையம் மீதான தாக்குதலுக்காக 'வாரிஸ் பஞ்சாப் டி' செயல்பாட்டாளர்கள் மீது 24-02-2023 தேதியிட்ட வழக்கு எண் 39 பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












