பாகிஸ்தான் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா? - சந்தேகங்களுக்கு பதிலளித்த சிடிஎஸ்
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சமீபத்தீய மோதலில் இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், அதை இந்தியா உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில், முதல் முறையாக இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி அனில் செளகான் அது குறித்து பேசி உள்ளார்.
ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு ப்ளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் இது தொடர்பாக அனில் செளகான் விளக்கமளித்தார்.
"நான் சொல்லக்கூடியது என்னவெனில் மே ஏழாம் தேதி மற்றும் தொடக்க கட்டங்களில் இழப்புகள் இருந்தன. ஆனால் அது எவ்வளவு என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ஏன் இந்த இழப்புகள் ஏற்பட்டன, அதன் பிறகு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். எனவே நாங்கள் வியூகங்களை சரிசெய்தோம், பின்னர் 7,8 மற்றும் 10ஆம் தேதி தாக்கினோம். 10ஆம் தேதி அதிக அளவில் பாகிஸ்தானுக்குள் கூடுதலாக சென்று எந்த இழப்பும் இன்றி அவர்களின் தளங்களைத் துல்லியமாக தாக்கினோம்.
இது ஏன் நடந்தது என்பது குறித்து விமானப்படை சிறிய ஆய்வு செய்தது. தங்கள் வியூகங்களை சரிசெய்து அவர்கள் மீண்டும் பறந்தனர். 10 ஆம் தேதி (மே) அனைத்து வகையான ஆயுதங்களுடன் அனைத்து வகையான விமானங்களையும் பறக்கவிட்டனர்.
இந்திய ஊடகங்களில் மட்டுமல்ல உலகளாவிய தரவுகளில் எல்லா தாக்குதல்களுக்குமான செயற்கைக்கோள் படங்கள் உள்ளன. பெரும்பாலான தாக்குதல்கள் துல்லியமாக இருந்தன, நாங்கள் தேர்ந்தெடுத்த இலக்கில் சில மீட்டர் வரை கூட துல்லியமாக இருந்ததை பார்த்திருப்பீர்கள். எனவே, எதுவும் வழிதவறி செல்லாது, தேர்ந்தெடுத்த இலக்கை தாக்கும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
அணு ஆயுத பயன்பாடு என்பதற்கு முன்பாக நீங்கள் கடக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமான உள்ளன, நிறைய சமிக்ஞைகள் தென்படும். சமீபத்திய மோதலில் அதுபோன்று ஏதும் நடக்கவில்லை என நினைக்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல, அண்மையில் நடத்தப்பட்டது போல அணு ஆயுதம் அல்லாத பதில் நடவடிக்கைகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அது புதிய வழக்கமாக மாறலாம்.
என்னுடைய தனிப்பட்ட பார்வையில், மோதலின் போது சூழலை பகுத்தாய்வு செய்து முடிவெடுப்பவர்களே ராணுவ சீருடையில் இருக்கிறார்கள். மோதல் எந்த தரப்புக்கும் எதிராக மாறும் என்பதை அவர்கள் புரிந்துள்ளார்கள். இதுபோன்ற மோதல்களின் பின்விளைவுகள் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இரு தரப்பிலுமே ஒவ்வொரு நகர்வின் போதும் சிந்தனை மற்றும் செயலில் அது வெளிப்பட்டதை நான் கண்டேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



