காணொளி: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் நடந்தது என்ன?
காணொளி: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் நடந்தது என்ன?

உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நிலவி வந்த நிலையில், இந்த இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு சுமார் 100 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பு பற்றி பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இது ஓர் அற்புதமான சந்திப்பு. ஷி ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர்" என்று கூறினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து சீனாவுக்கான வரியையும் டிரம்ப் குறைத்துள்ளார்.

முக்கிய வர்த்தக விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீன அரசு ஊடகத்தில் அதிபர் ஷி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

சரி, இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவரங்கள் என்ன? இரு நாட்டு தலைவர்களும் இதனை எப்படி பார்க்கின்றனர்?

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இந்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இருவரும் கடைசியாக 2019-ம் ஆண்டு நேரில் சந்தித்து பேசினர்.

வெளியான அறிவிப்புகள்

தென் கொரியாவில் நிகழ்ந்த டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு பல முக்கிய அறிவிப்புகள் இரு நாடுகளின் தரப்பிலும் வெளியிடப்பட்டது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான சமீபத்திய வர்த்தக மோதலில் அரிய தாதுக்கள் பிரதானமாக இருந்தது.

ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு, இதற்கு தீர்வு கண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். பின்னர், சீனா இது தொடர்பான ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

ஃபெண்டானில் (Fentanyl) தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களை சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும். இதற்கு மாற்றாக சீன இறக்குமதிகள் மீது விதித்திருந்த வரிகளை குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது என சீனா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்ற பரஸ்பர வரிகளும் ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது. டிரம்பும் முன்பு இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், சீன பொருட்களுக்கு வெவ்வேறு அளவிலான இறக்குமதி வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதில், சில டிரம்ப் பதவியேற்கும் முன்பே விதிக்கப்பட்டவை. இந்த வரிகுறைப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அதேபோல, அமெரிக்காவிலிருந்து அதிக அளவு சோயாபீன்களை சீனா வாங்கத் தொடங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசும்போது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் சீனாவுக்கு செல்ல இருப்பதாகவும், அதன் பின்னர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருவார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தைவான் விவகாரம் மற்றும் டிக்டாக் பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தைவான் பற்றி விவாதிக்கப்படவில்லை என செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார். அதேசமயம் டிக்டோக் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

டிரம்ப் கூறியது என்ன?

சந்திப்பு முடிந்து திரும்பிச் செல்லும் போது விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த சந்திப்பு "பெரிய வெற்றி" என்று குறிப்பிட்டார்.

ஷி ஜின்பிங் கூறியது என்ன?

டிரம்ப் உடனான சந்திப்பின் போது ஷி ஜின்பிங் பேசியது குறித்த அறிக்கையை சீனாவின் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி, "முக்கிய வர்த்தக பிரச்னைகளை" தீர்க்க இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீனத் தலைவர் கூறினார். சீன மற்றும் அமெரிக்க குழுக்கள் இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் reassuring pill அதாவது "உறுதியளிக்கும் மருந்தாக" செயல்படும், நேர்மறையான விளைவுகளை வழங்க பணியாற்றும் என்று ஷி ஜின்பிங் கூறினார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கையாள்வது, சைபர் மோசடி, பணமோசடி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பதற்கான "நம்பிக்கைக்குரிய வாய்ப்புகள்" இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக பெரும் சக்திகளின் பொறுப்பை நிரூபிக்கவும் முடியும், இரு நாடுகளுக்கும் உலகிற்கும் மிகவும் குறிப்பிடத்தக்க, நடைமுறை மற்றும் நன்மை பயக்கும் முயற்சிகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து செயல்பட முடியும்" என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு