"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

பட மூலாதாரம், SCREENGRAB

படக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயி​ரிழந்​தார் என்பது குற்றச்சாட்டு.

அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் வீடியோ ஒன்றை காட்டியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு, அஜித்குமார் தாக்கப்பட்ட இடத்திலிருந்து ஏன் ரத்தக்கறை சேகரிக்கவில்லை என நீதிபதிகள் பல கேள்விகளை அடுக்கினர். இந்த வழக்கு ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிபிஐக்கு மாற்ற பரிந்துரை

திருப்புவனம் கோவில் காவலாளி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிடுமாறு உத்தரவிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது கறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில்,"இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இருப்பினும் காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை குறித்து எவ்வித சந்தேகமும் எழுப்பக் கூடாது, என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்." என கூறியுள்ள முதலமைச்சர் "சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அர வழங்கும்" எனக் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள்

அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து விசாரணையின் போது அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறையை ஏன் சேகரிக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அஜித் குமார் உடலில் 44 காயங்கள் உள்ளன, எதை வைத்து அடித்தனர். காவல்துறையின் செயல் குறித்தே கேள்வி எழுகையில், என்ன செய்வது. காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை அதன் சி.சி.டி.வி. காட்சிகள் இல்லை, என்று கூறிய நீதிபதிகள் 'அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது' என்றனர்.

சம்பவம் நடந்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை சிடியாக தாக்கல் செய்தார்.

அஜித் குமார் தாக்கப்பட்டதாக பதிவான வீடியோவை பதிவு செய்த கோவில் ஊழியரிடம், 'இந்த வீடியோவை எங்கிருந்து எடுத்தீர்கள்?' என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, கோவில் கழிவறையிலிருந்து எடுத்ததாக அவர் பதிலளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து காவலர்கள் சஸ்பெண்ட் செய்து இருப்பது கண் துடைப்பு என்றும் இதற்கு காரணமான உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்க என்றும் நீதிபதிகள் கூறினர். கல்வியறிவு அதிகம் உள்ள தமிழகத்தில் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கது என்று வேதனை தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் இதை அரசியல் ஆக்க நினைக்கிறார்கள் என அ.தி.மு.க.வை சுட்டிக்காட்டி அரசு தரப்பினர் வாதிட்ட போது, நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று நீதிபதிகள்‌ பதிலளித்தனர்.

அஜித்தின் பிறப்புறுப்பிலும், வாய், காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது, அஜித் குமாரை கோசாலையில் வைத்து கடினமாக தாக்கியுள்ளனர்‌, பல இடங்களுக்கு கொண்டு சென்றும் தனிப்பிரிவு போலீசார் தாக்கியுள்ளனர் என்று கூறிய நீதிபதிகள் இந்த விசாரணையில் தங்க நகைகள் மீட்கப்படவில்லை, என்று குறிப்பிட்டனர்.

மேலும், 50 லட்சம் இழப்பீடு, அஜித் தம்பிக்கு கோயிலில் பணி வழங்கப்படும் என அஜித் குமார் குடும்பத்திடம் பேரம் பேசி உள்ளனர், சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை அலுவலர் முழுமையான தகவலை சேகரிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த விஷயத்தில் அரசு நேர்மையாக உள்ளது என்றும், யாருக்கும் சாதகமாக இல்லை, வழக்கை சி.பி.‌ஐ.,க்கு மாற்ற ஆட்சேபனை இல்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.சி.டி.வி., காட்சிகளை விசாரணை நீதிபதியிடம் புதன்கிழமை அளிக்க அனைத்து காவல் பிரிவுக்கும் ஆணையிட்டனர். அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி பாதுகாக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக அஜித்குமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹென்றி திபேன் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக புகைப்படங்களை தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோவில் காவலர்களாக சுட்டிக்காட்டப்பட்ட நபர்கள் சீருடையில் அல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. மறைவிடத்தில் இருந்தபடி ஒருவர் பதிவு செய்த வீடியோ இது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

"தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமாரை காவலர்கள் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தும் போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் எதற்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

அவரது தாயாரும், சகோதரரும் 28ஆம் தேதி இரவு 12 மணி வரை, தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., உங்கள் மகன் இறந்து விட்டார் என அஜித்தின் அம்மாவிடம் கூறி உள்ளார்" என ஹென்றி திபேன் வாதிட்டார்.

"அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல் கதை கூறுகின்றனர்" எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.

ஹென்றி திபேன்

பட மூலாதாரம், Henri Tiphagne

படக்குறிப்பு, ஹென்றி திபேன்

"திமுகவின் சேங்கைமாறன் (அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்), மகேந்திரன் திருப்புவனம் திமுக செயலர், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித் இறந்த பின்பு அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்." என்றும் நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டினார்.

"திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. உடற்கூராய்வு அறிக்கை தற்போது வரை அஜித்தின் தாயிடம் வழங்கப்படவில்லை" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பான மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், "காவல்துறையினர் 6 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், 5 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் 'நன்றாக கவனியுங்கள்' என கூறியதாக, சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார்.

ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். நகை காணாமல் போன சம்பவத்தில் புகார்தாரர் நிகிதா, ஒரு ஐ ஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர். அதனால் தான் வழக்குப் பதிவு செய்யாமல் தாக்கி உள்ளனர்." என்று கூறினார்.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்

முன்னதாக நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

  • நகை காணாமல் போன வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர். பதியவில்லை?
  • சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்?
  • யார் இந்த வழக்கை தனிப் படையிடம் ஒப்படைத்தது? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா?
  • உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது. மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை.(பொதுமக்களை) அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?
  • நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்‌. காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கின்றனவா? சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? பின் ஏன் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கிறீர்கள்?
  • அஜித்குமாரை 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல யார் அதிகாரம் கொடுத்தது?
  • மாஜிஸ்திரேட்டுக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை அனுப்பப்படாதது ஏன்?
  • காவல்துறை, நீதித்துறை குடும்பங்களில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
  • மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை ஏன் விசாரிக்க அனுமதிக்கவில்லை?
  • எஸ்.பி., யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? எதிர்கொள்ள வேண்டியதுதானே?
  • நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும்.

மேலும், "நடவடிக்கை முக்கியம். ஆனால் எந்த வழக்கை எப்படி விசாரிக்க வேண்டுமென்பது முக்கியம். ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்லவில்லை. மக்களைக் காக்கவே காவல்துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்ட மாநிலம். இருப்பினும் இது போல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

அரசுத்தரப்பில், "அஜித் இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் (இறந்திருப்பார். தொடக்க நிலை விசாரணை நடந்த பிறகு தான், (நகை காணாமல் போன) வழக்கு பதிவு செய்ய முடியும்.

மேலும், "தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இதன் அறிக்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ஹென்றி திபென், " அங்கே வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமாருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது" என குறிப்பிடுகிறார்.

பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்வதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

  • குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.
  • உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
  • கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
  • உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம்

எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்..

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

விடியவிடிய நடந்தது என்ன?

அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையின் பேரில், விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் உடனே அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியது.

  • சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் 5 காவலர்களையும் அழைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது.
  • இரவு 11 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்தை அந்த வேன் சென்றடைந்தது.
  • திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.
  • மற்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் நள்ளிரவு 1.15 மணியளவில் 5 காவலர்களும் வேனில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • நள்ளிரவு 1.45 மணியளவில் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பாக 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.
  • இதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
  • அதன் பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் 5 காவலர்களும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு
படக்குறிப்பு, ஐந்து காவலர்களும் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு
படக்குறிப்பு, அஜித்குமார்

வழக்கின் பின்னணி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பிறகு, நகை திருடு போனதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு