மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திர மோதிக்கு வரவேற்பா, எதிர்ப்பா? என்ன நிலவரம்?
மாலத்தீவின் 60வது சுதந்திர தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ஜூலை 25ஆம் தேதி மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு பிரதமர் மோதி செல்கிறார். இது நரேந்திர மோதியின் மூன்றாவது மாலத்தீவு பயணம்.
சுதந்திர தினக் கொண்டாட்டம் தவிர, மாலத்தீவு அதிபர் முய்சுவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நரேந்திர மோதி நடத்த உள்ளார். பிரதமர் மோதி பல கூட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக மாலத்தீவு ஊடகங்கள் கூறுகின்றனர்.
கடந்த 2023 அதிபர் தேர்தலின்போது இந்தியாவே வெளியேறு என்ற பிரசாரத்தை முய்சு நடத்தினார். இந்த பிரசாரம் அவரது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.
தேர்தலில் வென்ற தொடக்க மாதங்களில் இந்தியா மீது கடுமையான போக்கை முய்சு கடைபிடித்தார். அதே நேரம் சீனா உடனான உறவை வலுப்படுத்த முனைந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முய்சு சீனாவுக்கு பயணம் செய்தார். சீனாவில் இருந்து மாலத்தீவு திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலத்தீவு ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அதுவே எங்களை அடக்க யாருக்கும் உரிமம் வழங்காது என இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல் பேசினார்.
ஆனால் பின்னர் மாலத்தீவு பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது. அந்த நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியாவிடம் உதவி பெற்ற பிறகு, முய்சுவின் கடுமையான போக்கு குறையத் தொடங்கியது.
சரி, நரேந்திர மோதியின் இந்தப் பயணம் குறித்து மாலத்தீவில் என்ன பேசப்படுகிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



