You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹரியாணாவில் 19 வயது இளைஞரை கொலை செய்தது பசு காவல் கும்பலா? - பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர், ஃபரிதாபாத்தில் இருந்து
ஹரியணாவின் ஃபரிதாபாத் நகரில் இருக்கும் NIT-5 பகுதியில், இருண்ட படிக்கட்டுகள் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு ஃபிளாட்டை அடைகின்றன.
அவற்றில் உமா மிஸ்ரா படிக்கட்டில் சாய்ந்து அமர்ந்திருக்கிறார். அவருடைய கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது.
ஒற்றை அறைகொண்ட அந்த ஃபிளாட்டின் சுவரில் மாட்டப்பட்டுள்ள 19 வயது இளைஞர் ஆர்யன் மிஸ்ராவின் புகைப்படத்தில் ஒரு மாலை தொங்குகிறது.
வெளியில் திறந்த மாடியில் நின்றுகொண்டு ஆர்யனின் தந்தை சியானந்த் மிஸ்ரா பத்திரிகையாளர்களுடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. "இப்போது எங்களுக்கு ஊடகங்கள் தேவையில்லை. எங்கள் மகனுக்கு இப்போது நீதி கிடைக்க வழியில்லை," என்று மீண்டும் மீண்டும் அவர் சொல்கிறார்.
தேசியத் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஆகஸ்ட் 23-24 தேதிக்கு இடைப்பட்ட இரவில் 19 வயது இளைஞர் ஆர்யன் மிஷ்ரா சந்தேகத்திற்கிடமான நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் 5 பசு பாதுகாவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குற்றம் சாட்டப்பட்டவரைச் சந்தித்த ஆர்யனின் தந்தை
ஃபரிதாபாத்தில் வசிக்கும் அயோத்தியைச் சேர்ந்த இந்தக் குடும்பத்திற்கு, தங்கள் மகன் பசுக் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார் என்பதை நம்புவது கடினமாக உள்ளது.
ஆர்யனின் அஸ்தியைக் கரைக்க, சியானந்த் மிஸ்ரா அலகாபாத் சென்றார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதை ஆகஸ்ட் 28-ஆம் தேதி அவர் அறிந்தார்.
முக்கியமாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள அனில் கௌஷிக்கை சியானந்த் மிஸ்ரா ஃபரிதாபாத் போலீஸ் லைன்ஸில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி சந்தித்தார்.
அந்தச் சந்திப்பை நினைவுகூர்ந்த சியானந்த் மிஸ்ரா, “அனில் கௌஷிக் என் முன் அழைத்து வரப்பட்டார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். பசு கடத்தல்காரர் என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அந்தத் தோட்டா தவறுதலாக என் மகனைத் தாக்கியதாகவும் அவர் கூறினார்,” என்றார்.
மேலும், “அனில் கௌஷிக் என் கால்களைத் தொட்டு நான் தவறு செய்துவிட்டேன் என்று கூறினார். ஒரு பிராமணர் என்னால் கொல்லப்பட்டுவிட்டார். என்னைத் தூக்கில் போட்டாலும் எனக்கு வருத்தமில்லை’ என்று அவர் தெரிவித்ததாகவும்,” சியானந்த் மிஸ்ரா குறிப்பிட்டார்.
சியானந்த் மிஸ்ரா பைக் டாக்ஸி சேவையில் பணிபுரிகிறார். ஆர்யன் திறந்தநிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதத் தயாராகிக் கொண்டிருந்தார்.
“ஆர்யன் சமய நம்பிக்கை கொண்டவர். சமீபத்தில் பல இந்து கோவில்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக காவடி யாத்திரையிலும் பங்குகொண்டார்,” என்றார் அவர்.
"ஆர்யன் மொபைல் போன்களை பழுது பார்க்கும் வேலையையும் கற்றுக்கொண்டார். அதன்மூலம் சம்பாதித்து, வீட்டுச் செலவுகளில் உதவலாம் என்று நினைத்தார்," என்று சியானந்த் கூறினார்.
ஆர்யனின் நண்பர்கள் வழக்கை திசை திருப்பினார்களா?
சம்பவம் நடந்த இரவை நினைவுகூர்ந்த சியானந்த், “இரவு சுமார் 3.30 - 4:00 மணியளவில் வீட்டு உரிமையாளர் என் மூத்த மகனிடம் உடனடியாகத் தன்னுடன் பல்வலுக்கு வரும்படி கூறினார். பின்னர் அவர் பல்வலுக்கு பதிலாக எஸ்.எஸ்.பி மருத்துவமனைக்குப் போகலாம் என்று சொன்னார். அங்கு போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. என் மகனது உடலில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்,” என்று தெரிவித்தார்.
சம்பவ தினத்தன்று இரவு ஆர்யன் தனது பக்கத்து வீட்டுக்காரர், மற்றும் வீட்டு உரிமையாளரின் மகன் என மொத்தம் நான்கு பேருடன் சிவப்பு நிற டஸ்டர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் வீட்டு உரிமையாளரின் மனைவியும், மற்றொரு பெண்மணியும் இருந்தனர். இந்த இருவரது வயது சுமார் 50.
வேறொரு கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் ஆர்யனின் வீட்டு உரிமையாளரின் மகன் ஷாங்கி குலாட்டியும் அந்தக் காரில் இருந்தார்.
யார் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டில் ஷாங்கி குலாட்டி தேடப்பட்டு வருகிறாரோ அவர்கள்தான் ஆர்யனின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று ஆர்யனுடன் காரில் இருந்த நான்கு பேரும் காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கு அளித்த முதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயினும், இந்தக் குற்றச்சாட்டுகள் போலீஸ் விசாரணையில் உண்மை இல்லை என்று கண்டறியப்பட்டது. சம்பவத்தை விசாரித்து வரும் ஃபரிதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு, பசு பாதுகாவலர் என்று கூறப்படும் ஃபரிதாபாத்தை சேர்ந்த அனில் கௌஷிக் மற்றும் வேறு மூன்று பேரை ஆர்யனை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்தது. ஐந்தாவது குற்றவாளி ஆகஸ்ட் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று இரவு ஃபரிதாபாதின் செக்டர் 21-இல் இருந்து பல்வல் மாவட்டத்தின் பகௌலா கிராமம் வரை ஆர்யன் மற்றும் பிறர் சென்று கொண்டிருந்த டஸ்டர் காரை ஒரு ஸ்விஃப்ட் கார் பின்தொடர்ந்தது என்று காவல்துறை தெரிவித்தது.
“எங்களைப் பொறுத்தவரை துப்பு எதுவுமே இல்லாத கொலை இது. போலீசாருக்குக் கிடைத்த முதல் தகவலில் யார் மீது புகார் கூறப்பட்டதோ அவர்கள் வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. பின்னர் நாங்கள் சுங்க வரி ப்ளாசாவின் சி.சி.டி.வி காட்சியைப் பெற்றோம். அதில் சிவப்பு டஸ்டர் கார் தடையை உடைத்துக்கொண்டு செல்வதையும் வெள்ளை நிற ஸ்விஃப்ட் கார் அதைப் பின்தொடர்ந்து வந்ததையும் பார்த்தோம்," என்று குற்றப்பிரிவின் ஏ.சி.பி அமன் யாதவ் கூறினார்.
சிசிடிவி மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த போலீசார்
சி.சி.டி.வி காட்சிகளைப் பெற்ற போலீசார் மேலும் ஆதாரங்களைச் சேகரித்து இறுதியாக ஆகஸ்ட் 28-ஆம் தேதி அனில் கௌஷிக், வருண், ஆதேஷ், கிருஷ்ணா ஆகியோரைக் கைது செய்தனர். ஆகஸ்ட் 30-ஆம் தேதி மற்றொரு குற்றவாளியான செளரப் ஷர்மா கைது செய்யப்பட்டார்.
தவறாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் டஸ்டர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விசாரணையின் போது அனில் கௌஷிக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மொத்தம் மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டன. ஒன்று காற்றில் சென்றது. ஒன்று பின்புறத்தில் இருந்து கழுத்திலும், மற்றொன்று முன்புறத்தில் இருந்து மார்பிலும் ஆர்யனை தாக்கியது.
ஆர்யனின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இரண்டு தோட்டா காயங்களை உறுதி செய்துள்ளது.
இருப்பினும் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி பசு பாதுகாவலரா என்பதை காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
அவர் பசு பாதுகாவலர் என்று ஊடகங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் எந்த அமைப்புடனும் தொடர்புடையவர் அல்ல என்று அமன் யாதவ் கூறுகிறார்.
தவறான புரிதல் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் என்னவென்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் போலீஸார் தெரித்தனர்.
“கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தவுடன் அவையும் விசாரணை அறிக்கையில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்,” என்று அமன் யாதவ் கூறினார்.
'பசு பாதுகாவலர்' என்ற அனில் கௌஷிக்கின் அடையாளம்
ஆனால் அனில் கௌஷிக் ஃபரிதாபாத்தில் ஒரு பிரபலமான பசு பாதுகாவலராக அறியப்படுகிறார். 'லிவ் ஃபார் நேஷன்' என்ற அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார்.
இவருக்கு ஃபரிதாபாத் பார்வதியா காலனியில் இரண்டு மாடி வீடு உள்ளது. அவரது குடும்பத்தினர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர்.
இருப்பினும், தனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அனில் கௌஷிக்கின் தாய் உறுதியாகக் கூறுகிறார்.
"மாடுகளுக்காக அவர் பல சேவைகள் செய்வார். காவல்துறை அழைக்கும் போதெல்லாம் மாடுகளைக் காப்பாற்ற அவர் சென்றிருக்கிறார்," கூறுகிறார் அவர்.
வேறு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த அவர், "என் மகன் என்ன செய்தாரோ அதற்கு கடவுள் நீதி அளிப்பார்," என்று கூறினார்.
அனில் கௌஷிக்கின் அண்டை வீட்டாரோ அல்லது அருகில் உள்ளவர்களோ இந்தச் சம்பவத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தனர். அனில் கௌஷிக் ஒரு பசு பாதுகாவலர் என்றும் பசுக்களைப் பாதுகாக்க நிறைய பணிகளைச் செய்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அனில் கௌஷிக் பசு கடத்தல்காரர்கள் மீதும் பலமுறை வழக்குப் பதிவு செய்துள்ளார். சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி அவர் ஃபரிதாபாத்தில் உள்ள சரான் காவல் நிலையத்தில் பசு கடத்தல்காரர்கள் மீது புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் சொல்வது என்ன?
அனில் கௌஷிக்கைக் கடந்த 6-7 ஆண்டுகளாக அறிந்தவரான புவனேஷ்வர் ஹிந்துஸ்தானி, “பசுக்களைப் பாதுகாப்பதுடன் அவற்றுக்குச் சேவையும் செய்கிறார். அவர் நூற்றுக்கணக்கான வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் பசுக்களுக்குச் செய்யும் சேவையைப் பார்க்க முடியும். பசுக்களுக்கு உதவ முடியாத சந்தர்ப்பங்களில் போலீஸ்கூட அவரை உதவிக்கு அழைப்பார்கள்,” என்று குறிப்பிட்டார்.
அனில் கௌஷிக் கைது செய்யப்பட்ட பிறகு, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த எந்த இந்துத்துவ அமைப்பும் அவருக்கு ஆதரவாகப் பேச முன்வரவில்லை.
இதற்கான காரணத்தை விளக்கிய புவனேஷ்வர், “நடந்திருப்பது பெரிய தவறு. ஒரு அப்பாவி இறந்துவிட்டார். இதுவொரு குற்றம்தான். இருப்பினும் பசுக் கடத்தல் நிறுத்தப்படும் வரை, அவற்றைக் காப்பாற்ற பசு பாதுகாவலர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள்,” என்று புவனேஷ்வர் உறுதியாகக் கூறுகிறார்.
“பசுக் கடத்தல் நிறுத்தப்பட்டால், பசு பாதுகாவலர்கள் தானாக அமைதியாகி விடுவார்கள். அனில் கௌஷிக் செய்தது பெரிய தவறு. அதை ஆதரிக்க முடியாது. ஆனால் ஒருவர் ஏன் பசு பாதுகாவலராக மாறுகிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவரான கிருஷ்ணா, ஃபரிதாபாத் அருகே உள்ள கேடி குஜ்ரான் கிராமத்தில் வசிப்பவர்.
கிருஷ்ணா வேலையில்லாமல் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனில் கெளஷிக்குடன் கைகோர்த்ததாகவும், அதன்பிறகு அவர் பசு பாதுகாவலராக மாறியதாகவும் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணாவின் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் பேசுவதற்கு மறுத்துவிட்டனர். இருப்பினும் அவரது குடும்பத்துடன் தொடர்புடைய, தனது பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத ஒருவர், "அவர் ஒரு பசு பாதுகாவலர் என்பது உண்மைதான். ஆனால் அவர் இந்தச் சம்பவத்தில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்," என்றார்.
'போலீசாரை அழைக்கவில்லை'
ஃபரிதாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசு பாதுகாவலர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பசு கடத்தல்காரர்கள் என்று கூறப்படுபவர்களைப் பிடிப்பது, மற்றும் அவர்களுக்கு எதிரான தாக்குதவது ஆகியவற்றைச் சித்தரிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. பசு கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் பலர் இதுபோன்ற சம்பவங்களில் இறந்துள்ளனர்.
ஆனால், இந்து இளைஞர் ஒருவரின் மரணத்தில் பசு பாதுகாவலர்கள் என்று கூறப்படுவோரின் தொடர்பு வெளிச்சத்திற்கு வருவது இதுவே முதல்முறை.
“ஃபரிதாபாத்தைச் சுற்றி முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் உள்ளன. இங்கு பசு கடத்தல்காரர்களுக்கும், பசு பாதுகாவலர்களுக்கும் இடையே முன்பும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பசு பாதுகாவலர்கள் என்று சொல்லப்படுவோரால் இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வருவது இதுவே முதல்முறை,” என்று ஃபரிதாபாதை சேர்ந்த க்ரைம் செய்தியாளர் கைலாஷ் கட்வால் கூறினார்.
“கடந்த காலத்திலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் வானத்தை நோக்கிச் சுடுவதே பெரும்பாலும் நடக்கும். வழக்கமாக, பசு கடத்தல்காரர்களைப் பிடிக்க பசு பாதுகாவலர்கள் முயலும்போது போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் இந்தச் சம்பவத்தில் தப்ப முயற்சி செய்தவர்களோ அல்லது அவர்களைத் துரத்திச் சென்ற பசு பாதுகாவலர்களோ காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை,” என்று கைலாஷ் கூறினார்.
அன்று இரவு என்ன நடந்தது?
ஃபரிதாபாத் குற்றப் பிரிவின் ஏ.சி.பி அமன் யாதவ், “இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரவு ஃபரிதாபாத்தின் செக்டர் 21-இல் அதிகாலை 2 மணியளவில் துவங்கியது. ஏற்கெனவே அங்கு வந்திருந்த அனில் கௌஷிக் மற்றும் அவரது குழுவினருக்கு சிவப்பு நிற டஸ்டர் கார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் பசு கடத்தல்காரர்கள் டஸ்டர் காரில் செல்வதாக குற்றம் சாட்டப்பட்ட அனில் கௌஷிக் மற்றும் அவரது குழுவினருக்குத் தகவல் கிடைத்திருந்தது,” என்று தெரிவித்தார்.
டஸ்டர் காரை அவர்கள் துரத்திச் சென்றபோது, காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாகச் செல்லத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, டஸ்டர் கார் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் முன்னோக்கி ஓட, ஸ்விஃப்ட் கார் அதைத் துரத்திக்கொண்டே சென்றது.
இந்தச் சம்பவம் முழுவதும் ஃபரிதாபாத்தில் இருந்து பல்வல் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் நடந்தது. நெடுஞ்சாலையாக இருந்ததால் இங்கு காவல்துறை சோதனை இருக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.
"இந்தக் கார் துரத்தல் அரை மணிநேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது டஸ்டர் காரில் இருந்தவர்கள் யாருமே காவல்துறையை அழைக்கவில்லை," என்றார் அமன் யாதவ்.
சந்தேகத்திற்கிடமான டஸ்டர் கார் குறித்துக் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்குத் தகவல் வந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரவு டஸ்டர் காரைப் பார்த்த அவர்கள் அதைத் துரத்தத் தொடங்கினார்கள் என்று பசு பாதுகாவலர்களுடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார்.
“கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த ஷாங்கி குலாட்டி என்ற இளைஞரும் டஸ்டரில் பயணம் செய்தார். இந்த நிலையில் போலீசார் துரத்தி வருவதாக காரில் இருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். கைப்பற்றப்பட்ட ஸ்விஃப்ட் காரில் சுழல் விளக்கும் பொருத்தப்பட்டிருந்தது. இதைப் பார்த்தவுடன் அவர்களின் சந்தேகம் மேலும் உறுதியாகியிருக்கக்கூடும்,” என்று குற்றப்பிரிவு ஏ.சி.பி அமன் யாதவ் கூறினார்.
சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் காரில் இருந்த ஆயுதத்தையும் சுழல்விளக்கையும் தூக்கி எறிந்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதக் கைத்துப்பாக்கி மற்றும் கார் லைட் ஆகியவற்றை மீட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய ஸ்விப்ட் காரில் நம்பர் பிளேட் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஆர்யனைத் தாக்கிய இரண்டு தோட்டாக்கள்
டஸ்டர் காரில் டிரைவருக்கு பக்கத்து இருக்கையில் ஆர்யன் அமர்ந்திருந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய கைத்துப்பாக்கியைத் தவிர, சுடும் ஒலியை எழுப்பப் பயன்படுத்தப்படும் பொம்மைத் துப்பாக்கி ஒன்றும் குற்றவாளியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முதல் நாள் ஊடகங்களிடம் பேசிய காரில் இருந்த மற்றவர்களை அதன்பிறகு பார்க்க முடியவில்லை. ஆனால் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு போலீசார் அவர்களை விட்டுவிட்டனர்.
“பசு பாதுகாவலர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும், ஆர்யனுடன் காரில் இருந்தவர்களும் காவல்துறை மற்றும் ஊடகங்களுக்குத் தவறான வாக்குமூலத்தை அளித்தது ஏன் என்றும் போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரணையைக் குழப்ப முயன்றது ஏன்?" என்று சியானந்த் மிஷ்ரா கேள்வி எழுப்பினார்.
“என் மகனுக்கு ஒருவேளை நீதி கிடைக்காமல் போகலாம். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமூலத்தை மாற்றிச் சொன்னால் என் மகனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?'' என்று அவர் சொன்னார்.
மகனின் மரணத்திற்குப் பிறகு எந்தவொரு அரசியல், அல்லது சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் தங்களைச் சந்திக்க வரவில்லை என்று சியானந்தின் குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா கரத் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) சந்தித்து, ஆர்யனின் மரணம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகம் மற்றும் அரசு மீது கேள்விகளை எழுப்பினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சியானந்தின் குடும்பத்திற்கு அரசு உதவியோ அல்லது வேறு எந்த உதவியோ கிடைக்கவில்லை.
“என் மகன் போய்விட்டான். என் மனைவி பெரும் அதிர்ச்சியில் உள்ளார். எங்கள் குடும்பம் சீரழிந்துவிட்டது. எனக்கு இன்னும் இரண்டு மகன்கள் உள்ளனர், இப்போது அவர்களின் பாதுகாப்பைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்,” என்று சியானந்த் கூறினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஆர்யனின் தாய் உமா மிஷ்ராவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இப்போது அவர் தனது மகனது உதவியுடன் படிக்கட்டுகளில் இறங்குகிறார்.
“பசு பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்களால் எப்படி ஒருவரைக் கொல்ல முடியும்? துப்பாக்கிச் சூடு நடத்த அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஒருவர் மாட்டை அழைத்துச் சென்றாலும் அவர்கள் எப்படிச் சுட முடியும்? இது ஏன் அனுமதிக்கப்படுகிறது?” என்று உமா கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு சொல்லும்போதே உமாவின் தொண்டை அடைக்கிறது. அவர் வீட்டுக்குள் சென்றுவிடுகிறார்.
“இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சகோதரர்கள் இல்லையா? இஸ்லாமியரின் ரத்தமும் சிவப்புதான். பிறகு ஏன் இந்தப் பாகுபாடு? ஒரு பசு பாதுகாவலருக்கு யாருடனாவது பகை இருந்தால் அவரைச் சுட்டுவிட்டு ’பசுவைக் கொண்டு சென்றார்’ என்று சொல்லிவிடலாம். சுட்டுக் கொல்லப்படுவதற்கு என் மகன் எந்தப் பசுவைக் கொண்டு சென்றான்?” என்றார் அவர்.
சியானந்தின் மனதில் இன்னும் பல கேள்விகள் உள்ளன. அதற்கான பதில்கள் கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது. இந்தக் கேள்விகள் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. கூடவே அவரது உடல்நிலையும் மோசமடையத் துவங்கியுள்ளது.
- இது பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியிட்டது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)