உங்களுக்கு உண்மையோடு இருந்தேன்: மன்மோகனுக்கு ஆ.ராசா கடிதம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய நிலையை விளக்கி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆ.ராசா

பட மூலாதாரம், MANPREET ROMANA

படக்குறிப்பு, ஆ.ராசா

டிசம்பர் 26ம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் யுனிஃபைடு ஆக்ஸ்ஸ் சர்வீஸ் உரிமங்கள் வழங்குதல் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன்.

அதன் பிறகு 10 ஆண்டுகளில் நமது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களை நம் இருவரில் எவருமே கற்பனை செய்து பார்த்திருக்கமுடியாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

"சக்திமிக்க சில தனி நபர்கள் தங்கள் பிரசார இயந்திரத்தை கிளப்பிவிட்டனர். இதற்கு உடன்பட்டு கைப்பாவையாகச் செயல்பட்ட ஊடகங்கள் இதை ஆயிரம் மடங்கு ஊதிப் பெரிதாக்கின. இவர்களால் நாடாளுமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்த முடிந்தது. இதனால், நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இழந்தீர்கள், நான் சிறையில் இருந்த 15 மாதங்கள் உள்ளிட்ட என் ஏழாண்டு கால வாழ்க்கையை இழந்தேன்," என்று குறிப்பிட்டுளார் ராசா.

மன்மோகன் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மன்மோகன் சிங்.

மேலும் அவர் கூறுகையில் "நான் தவறேதும் செய்யவில்லை, நாட்டு நலனுக்காகவே செயல்பட்டேன், நான் இதை நிரூபிப்பேன் என்று பல முறை உங்களுக்கு நான் உறுதி அளித்ததை உங்களால் நினைவுகூர முடியும்.

வெளிப்படையாக என்னை ஆதரிக்க முடியாமல் உங்களைத் தடுத்த நிர்ப்பந்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். இன்று என் வாதம் மெய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது.

சில மூத்த அமைச்சரவை சகாக்களைப் போல அல்லாமல் நான் உங்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தேன் என்பதையும், விசாரணை நடைமுறையில் நீங்கள் தனிப்பட்ட சங்கடத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்தேன் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது 2ஜி குறித்த உண்மை வெளியாகிவிட்டது என்பதால், முன்பு வழங்க முடியாத அந்த ஆதரவை இப்போது நீங்கள் எனக்கு வழங்க முடியும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் பதில்

இதற்குப் பதில் அளித்து ஜனவரி 2-ம் தேதி எழுதிய கடிதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் "2ஜி வழக்கில் உங்கள் நிலை மெய்யென நிரூபிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இந்த நடைமுறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டீர்கள். ஆனால், இறுதியில் உண்மை நின்றது என்பதில் உங்கள் நண்பர்களுக்கு பெரிய நிம்மதி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :