You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?
இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்றிரவு சுமார் 50க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்தே, கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து, பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளியல் அறையிலுள்ள பாத்திரமொன்றை அடிப்படையாக கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் 35 கைதிகள் மீண்டும் போலீஸார் மற்றும் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள், குறித்த பகுதியிலேயே மறைந்துள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
குறித்த நிலையத்தில் சுமார் 300ற்கும் அதிகமான கைதிகள் இருந்துள்ளதாக கூறிய அவர், 50 முதல் 60 வரையான கைதிகள் மாத்திரமே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறுகின்ற போதிலும், அவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியில் செல்லவில்லை. அங்காங்கே ஒளிந்திருக்கின்றார்கள். பெரும்பாலும் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் அவர்கள் சரணடைவார்கள். இந்த பகுதியின் நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கைதிகளுக்கு எதிராக எமக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில், இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமையினால், அவர்களுக்கு எதிராக எமது குறைந்த அதிகாரத்தை கூட பயன்படுத்த முடியாது" என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் கைதிகள் தப்பியோடியிருந்தனர்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கடந்த ஜுன் மாதம் 28ம் தேதி சுமார் 600ற்கும் அதிகமான கைதிகள் தப்பியோடியிருந்தனர்.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே கைதிகள் தப்பியோடியிருந்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் யார்?
போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களை தடுத்து வைத்து, புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் விளங்குகின்றது.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், இந்த புனர்வாழ்வு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறை வைக்கப்படுபவர்களின் கல்வி நிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பின்னணிக்கு ஏற்ற வகையில், இந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும்.
உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களை போதைப்பொருள்; அடிமைத்தனத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டங்கள், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்